Friday 1 December 2017

தொழிலாளர்களிடையே கம்யூனிச உணர்வு தோன்றுவது பற்றியும் கம்யூனிச புரட்சியின் அவசியத்தைப் பற்றியும் மார்க்ஸ் - எங்கெல்ஸ்

..இறுதியாக, வரலாற்றைப் பற்றி நாம் எடுத்துரைத்த கருதுகோளிலிருந்து பின்வரும் முடிவுகளைப் பெறுகிறோம்:

 1) உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில், உற்பத்திச் சக்திகளும் இடையுறவுச் சாதனங்களும் ஏற்பட்டு அவை அன்றுள்ள உறவுகளின் கீழ் சிக்கலை மட்டுமே ஏற்படுத்துகின்ற இனியும் உற்பத்தி சக்திகளாக இல்லாமல் அழிவுச் சக்திகளாக (இயந்திரம் மற்றும் பணம்) இருக்கின்ற கட்டம் ஏற்படுகிறது; மற்றும் இதனுடன் தொடர்புடைய முறையில், சமூகத்தின் வசதிகளை அனுபவிக்காமல் அதன் சுமைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்கின்ற வர்க்கம், சமூகத்திலிருந்து அகற்றப்பட்டு மற்ற எல்லா வர்க்கங்களுடனும் மிகவும் கூர்மையான முரண்பாட்டு நிலையில் பலவந்தமாக வைக்கப்படுகின்ற வர்க்கம் உருவாக்கப்படுகிறது; சமூகத்தின் எல்லா உறுப்பினர்களிலும் இந்த வர்க்கம் பெரும்பான்மையானதாக இருக்கிறது, அடிப்படையான புரட்சி அவசியம் என்ற உணர்வு, கம்யூனிஸ்ட் உணர்வு இந்த வர்க்கத் திடமிருந்து பிறக்கிறது. இந்த வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிச் சிந்திப்பதன் மூலமாக மற்ற வர்க்கங்களின் மத்தியிலும் இந்த உணர்வு தோன்றக் கூடும் என்பது மெய்யே.

 2) திட்டவட்டமான உற்பத்திச் சக்திகளைச் செயல்படுத்தக் கூடிய நிலைமைகள் சமூகத்தில் ஒரு திட்டவட்டமான வர்க்கத்தின் ஆட்சியின் நிலைமைகளே-அந்த வர்க்கத்தின் உடைமையிலிருந்து பெறப்படுகின்ற அதன் சமூக சக்தி ஒவ்வொரு இனத்திலும் அரசு என்ற வடிவத்தில் அதன் செய்முறை சிந்தனவாத வடிவத்தைக் கொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு புரட்சிகரமான போராட்டமும் அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கும் வர்க்கத்துக்கு எதிராக நடைபெறு கிறது.

3) இதற்கு முந்திய புரட்சிகள் அனைத்திலும் செயல் முறை எப்பொழுதும் மாறாதபடி இருந்தது. இந்த நடவடிக் கையை வேறு விதத்தில் வினியோகிப்பதை, உழைப்பை மற்ற நபர்களுக்கும் தருகின்ற புதிய வினியோகத்தைப் பற்றிய பிரச்சினையாகவே அது இருந்தது. ஆனல் இதுவரை இருந்து வந்திருக்கின்ற செயல் முறைக்கு எதிரானது கம்யூனிஸ்ட் புரட்சி, அது உழைப்பை ஒழிக்கிறது?, அனைத்து வர்க்கங்களின் ஆட்சியையும் அந்த வர்க்கங்களுடன் சேர்த்து ஒழிக்கிறது, ஏனென்றால் சமூகத்தில் ஒரு வர்க்கமாக இனியும் கருதப்படாத, வர்க்கமாக அங்கீகரிக்கப்படாத, இன்றைய சமூகத்தின் கீழ் எல்லா வர்க்கங்களும், தேசிய இனங்களும், இதரவையும் கரைந்துள்ள நிலைமையின் வெளியீடாக இருக்கின்ற வர்க்கத்திளால் அது நிறைவேற்றப்படுகிறது.

4) இந்தக் கம்யூனிஸ்ட் உணர்வைப் பெருவீத அளவில் உற்பத்தி செய்தல், அந்த இலட்சியத்தின் வெற்றி-ஆகிய இரண்டுக்குமே மனிதர்களைப் பெருந்திரளான அளவில் மாற்றுவது அவசியம், இத்தகைய மாற்றம் ஒரு செய்முறையான இயக்கத்தில், புரட்சியில் மட்டுமே நடைபெற முடியும். ஆளும் வர்க்கத்தை வேறு எவ்விதத்திலும் தூக்கியெறிய முடியாது என்பதற்காக மட்டுமல்லாமல், அதைத் தூக்கியெறிகின்ற வர்க்கம் பல யுகங்களாகத் தன்னிடம் அப்பிக் கொண்டுள்ள அழுக்கு முழுவதையும் அகற்றுவதில் வெற்றியடைந்து ஒரு புதிய சமூகத்தை நிறுவுவதற்குத் தகுதி பெறுவதற்கு ஒரு புரட்சியில் மட்டுமே முடியும் என்பதனால் புரட்சி அவசியமாக இருக்கிறது.”
(ஜெர்மன் சித்தாந்தம்  1845-46 )



No comments:

Post a Comment