Saturday 23 December 2017

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கையைப் பற்றி எங்கெல்ஸ்

“அரசியல் விஷயங்களில் முற்றிலும் ஒதுங்கியிருப்பதென்பது முடியாது. எனவே ஒதுங்கியிருக்கின்ற பத்திரிகைகள் அனைத்துமே உண்மையில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதை எப்படிச் செய்ய வேண்டும், எந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒன்றே பிரச்சினை. இது தவிர, நாம் தலையிடாதிருக்கவும் முடியாது. பெரும்பான்மையான நாடுகளில் தொழிலாளர் கட்சி ஏற்கெனவே ஒரு அரசியல் கட்சியாக இருக்கிறது. நாம் அரசியலில் தலையிடாமையை போதித்து இதை அழிக்கக் கூடாது.

யதார்த்தமான வாழ்க்கையின் அனுபவம், அரசியல் அல்லது சமூகக் காரணங்களுக்காக இன்றுள்ள அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கின்ற அரசியல் ஒடுக்குமுறை தொழிலாளர்கள் -அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும்- அரசியலில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கின்றன. அவர்களிடம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு போதிப்பது முதலாளி வர்க்க அரசியலின் கரங்களுக்குள் அவர்களை விரட்டுவதைப் போன்றதாகும். குறிப்பாக, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கையை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து விட்ட பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு ஒதுங்கி நிற்றல் முற்றிலும் இயலாததே.

வர்க்கங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை நிறைவேற்றுகின்ற வழி எது? பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் ஒன்றே வழியாகும். இது எங்குமே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பொழுது, அரசியலில் தலையிட வேண்டாம் என்று நம்மிடம் சொல்கிருர்கள்! தலையிடாமையைப் பின்பற்றுகின்ற எல்லோரும் தங்களைப் புரட்சியாளர்கள் என்று- எல்லாவற்றுக்கும் மேலான புரட்சியாளர்கள் என்று கூட- சொல்லிக் கொள்கிறர்கள். ஆனால் புரட்சி என்பது தலைமையான அரசியல் நடவடிக்கை; புரட்சியை விரும்புபவர் அதை நிறைவேற்றக் கூடிய வழியையும், அதாவது அரசியல் நடவடிக்கையையும் விரும்ப வேண்டும். அது புரட்சிக்குத் தயாரிப்பதுடன் தொழிலாளர்களுக்குப் புரட்சிப் பயிற்சியைக் கொடுக்கிறது. அது இல்லையென்றல் போராட்டத்துக்கு அடுத்த நாளிலேயே தொழிலாளர்கள் ஃபாவ்ர்களாலும் பியாக்களாலும் ஏமாற்றப்படுவார்கள். ஆனால் நாம் நடத்த வேண்டிய அரசியல் தொழிலாளி வர்க்கத்தின் அரசியலாகும். தொழிலாளர்களுடைய கட்சி எந்த முதலாளி வர்க்கக் கட்சியின் ஒட்டுப் பகுதியாகவும் ஒரு போதும் இருக்கக் கூடாது. அது சொந்த இலட்சியத்தையும் சொந்தக் கொள்கையையும் கொண்ட சுதந்திரமான கட்சியாக இருக்க வேண்டும்.

அரசியல் சுதந்திரங்கள், கூட்டம் நடத்துவதற்கு சுதந்திரம், சங்கம் அமைப்பதற்கு சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம்- இவை நம்முடைய ஆயுதங்கள். இவற்றை நம்மிடமிருந்து பறிக்க யாராவது முயற்சி செய்யும் பொழுது நாம் கைகளைக் கட்டிக் கொண்டு ஒதுங்கி நிற்க முடியுமா? நம் தரப்பில் எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றுள்ள நிலைமையை அங்கீகரிப்பதை உள்ளடக்கியிருக்கிறது என்று நம்மிடம் கூறுகிறர்கள். ஆனால் இந்த நிலைமை அதை எதிர்ப்பதற்குரிய சாதனங்களை நம்மிடம் கொடுக்கும் பொழுது நாம் அவற்றை உபயோகிக்கிறோம். இது இன்றைக்கிருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதென்று அர்த்தமல்ல.”
(சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் லண்டன் மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவைப் பற்றி ஆசிரியருடைய குறிப்பு, செப்டெம்பர் 21, 1871)


No comments:

Post a Comment