Monday 11 December 2017

தேசம் என்றால் என்ன? - ஸ்டாலின்

“முதலாவதாக, தேசம் என்பது ஒரு சமுதாயம்; குறிப்பிட்ட மக்களைக் கொண்ட சமுதாயம்.

இந்த சமுதாயம் நிற அடிப்படையிலானதோ அல்லது பழங்குடிகள் என்பது போன்றதோ இல்லை. ரோமானியர்கள், டியூட்டேனியர்கள், எட்ரூஸ்கனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் இன்னும் மற்றவர்களிடமிருந்து உருவானது தான் இன்றைய நவீன இத்தாலி தேசம் ஆகும். காலியர்கள், ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டேனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானதுதான் பிரெஞ்சு தேசமாகும். இதே போன்றுதான் இங்கிலாந்து, ஜெர்மன் இன்னும் மற்ற தேசங்கள் எல்லாமே பல்வேறு இனங்கள் மற்றும் பழங்குடிகளிடமிருந்து உருவானதாகும்.

எனவே தேசம் என்பது இன அடிப்படையிலோ அல்லது குடி அடிப்படையிலோ அமைந்தது அல்ல.

மாறாக, வரலாற்று அளவிலே அமையப்பெற்ற மக்கள் சமுதாயமாகும்.

அதேநேரத்தில், சிரஸ், அலெக்சாண்டர் போன்றவர்களின் பேரரசுகளைத் தேசம் என்று ஒருபோதும் அழைக்க முடியாது. இந்தப் பேரரசுகள் வரலாற்றுரீதியாக அமையப் பெற்றாலும், பல்வேறு இன, மற்றும் குடிமக்களைக் கொண்டிருந்தாலும் இவைகள் தேசங்களாக முடியாது. ஏனெனில் இப்பேரரசுகள் சாதாரண முறையில் எந்தவித பிடிப்புமின்றி சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்ப்பாகவே இருந்தன; மற்றும் இந்த சேர்ப்பு என்பது, போரில் ஒரு குறிப்பிட்ட அரசனுக்கு ஏற்படும் வெற்றி அல்லது தோல்வியைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறையவோச் செய்தது.

எனவே, தேசம் என்பது சாதாரண முறையிலோ அல்லது நிலையற்ற முறையிலோ அமைந்திருக்கக்கூடிய சேர்ப்பு அல்ல, மாறாக, தேசம் என்பது நிலையான மக்கள் சமூகமாகும்.
...
ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் உளவியல் இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்.

(A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture.)

எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் போலவே தேசமும் மாற்றல் விதிக்குட்பட்டது என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய ஒன்றாகும். அது அதற்கேயுரிய வரலாற்றையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருக்கும்.

மேலே கூறப்பட்ட அம்சங்களில் எதையும் தனியாக எடுத்துக்கொண்டு ஒரு தேசத்தை விளக்க முடியாது. மேலும் மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒரு அம்சம் குறைந்தாலும் தேசம் என்பது தேசமாக இருக்க முடியாது. பொருளாதார வாழ்விலும், வாழும் பகுதிகளிலும் பேசுகின்ற மொழியிலும் வேறுபாடு இருப்பினும், ஒரே தேசியத் தன்மை கொண்ட மக்களை அந்த ஒரு காரணத்திற்காக ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ரஷ்யர்கள், அமெரிக்கர்கள், ஜியார்ஜியர்கள் மற்றும் காகேசியர் ஹைலேண்ட் யூதர்கள் ஆகியோர் நம் கருத்துப்படி தனித்தேசமாக அமையப் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

ஒரு பொதுவானப் பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடிய மக்கள் ஒருதனித் தேசத்தை உருக்க முடியாது என்பது உணரக் கூடிய ஒன்றே. ஏனெனில் அவர்களுக்கு பொதுவான மொழியோ, பொதுவான “தேசியத் ன்மையோ” கிடையாது. உதாரணத்திற்கு ஜெர்மனியையும், பால்டிக் பகுதியிலுள்ள லெட்ஸ்-ஐயும் கூறலாம்.

இறுதியாக இன்னுமொரு எடுத்துக்காட்டைக் குறிப்பிடலாம். நார்வேஜியர்களும் டேனியர்களும் ஒரே மொழியைத்தான் பேசுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் தேசமாக அமையவில்லை. காரணம், ஒரு தேசத்திற்குரிய மற்ற அம்சங்கள் இல்லாததாகும்.

மேற்சொல்லப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும் போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காணமுடியும்.”
(மார்க்சியமும் தேசியஇனப் பிரச்சனையும்- பக்கம் 13-14 ..18-20)


No comments:

Post a Comment