Thursday 21 December 2017

தொழிற் சங்கங்கள் அத்தியாவசியமான “கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாகவும்”, பாட்டாளி வர்க்கத்தினர் சர்வாதிகாரத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சி தரும் தயாரிப்புப் பள்ளியாகவும் இருக்க வேண்டியது பற்றி லெனின்

தொழிற் சங்கங்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப நாட்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு மகத்தானதொரு முன்னேற்றப் படியைக் குறித்தன. எப்படியெனில் தொழிலாளர்கள் சிதறிய நிலையில் திக்கற்றவர்களாக இருந்ததிலிருந்து மாறி வர்க்க ஒற்றுமையின் குருத்துக்களைப் பெற்றதை அவை குறித்தன. பாட்டாளி வர்க்க ஒற்றுமையின் மிக உயர்ந்த வடிவமான பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி உருவாகத் தொடங்கியதும் (கட்சியானது தலைவர்களை வர்க்கத்தோடும் வெகுஜனங்களோடும் பிரிக்க முடியாதவாறு ஒன்றிவிடச் செய்யத் தெரிந்து கொள்ளாத வரை அது கட்சி என்னும் பெயருக்கே ஏற்றதாகாது), தொழிற் சங்கங்கள் தவிர்க்க முடியாதபடி சிற்சில பிற்போக்கு இயல்புகளை, தேர்ச்சித் துறைக்குரிய ஒரு குறுகிய கண்ணோட்டத்தையும், அரசியல் அக்கறையின்மைக்கான ஒருவிதப் போக்கையும், ஒருவகை மந்த நிலையையும், இன்ன பிறவற்றையும் வெளிப்படுத்தலாயின. ஆயினும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி உலகில் எங்கணுமே தொழிற் சங்கங்களல்லாத பிற வழிகளில், தொழிற் சங்கங்களுக்கும் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கும் இடையிலான பரஸ்பரச் செயற்பாட்டின் மூலமல்லாத பிற வழிகளில் நடைபெற்றதில்லை, நடைபெறவும் முடியாது.

பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றதானது பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு வர்க்கம் என்ற முறையில் பிரம்மாண்டமானதொரு முன்னேற்றப் படியாகும். கட்சியானது இப்பொழுது பழைய வழியில் மட்டு மின்றி ஒரு புதிய வழியிலுங்கூட தொழிற் சங்கங்களுக்குப் போதமளித்து வழிகாட்டியாக வேண்டும். அதேபோதில் தொழிற் சங்கங்கள் அத்தியாவசியமான “கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாகவும்,, பாட்டாளி வர்க்கத்தினர் சர்வாதிகாரத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சி தரும் தயாரிப்புப் பள்ளியாகவும், நாட்டின் பொருளாதாரம் முழுவதுக்குமான நிர்வாகம் படிப்படியாகத் தொழிலாளி வர்க்கத்துக்கும் (தனித்தனிப் பணிப் பிரிவுகளுக்கல்ல), பிற்பாடு உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் மாற்றப் படுவதற்கு அத்தியாவசியமான தொழிலாளர் ஒற்றுமைக்கான வடிவமாகவும் இருக்கின்றன, நெடுங்காலத்துக்கு அவ்வாறு இருக்கவும் செய்யும் என்பதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட பொருளில், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் தொழிற் சங்கங்கள் ஒருவகை பிற்போக்குத் தன்மை” கொண்டவையாய் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இதைப் புரிந்து கொள்ளத் தவறுவது, முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதற்கான இடைக்காலத்துக்குரிய அடிப்படை நிலைமைகளைப் புரிந்து கொள்ள முற்றாகத் தவறுவதே ஆகும். இந்தப் 'பிற்போக்குத் தன்மையைக்' கண்டு அஞ்சுவதோ, அதனைத் தட்டிக் கழிக்க அல்லது தாவிச் செல்ல முயலுவதோ படுமோசமான மடமையே ஆகும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தின், விவசாயிகளின் மிகவும் பிற்பட்ட பிரிவினரையும் பெருந்திரளினரையும் பயிற்றுவித்து, போதமளித்து, அறிவொளிபெறச் செய்து, புது வாழ்வினுள் ஈர்த்திடுவதென்ற பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்குரிய அந்தப் பணியைக் கண்டு அஞ்சு வதாகவே இதற்கு அர்த்தம். ஆனல் குறுகிய பணித் துறைக்குரிய கண்ணோட்டமோ, தேர்ச்சித் துறைக்கும் தொழிற் சங்கவாதத்துக்குமான தப்பெண்ணங்களோ கொண்ட எந்தவொரு தொழிலாளியும் இல்லாத ஒரு காலம் வரும் வரை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைச் சாதிக்காமல் ஒத்திப் போடுவதானது இன்னும் கடுமையான தவறாகிவிடும்.

பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை வெற்றிகரமாய் ஆட்சியதிகாரம் ஏற்பதற்கும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போதும் பிற்பாடும் தொழிலாளி வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கமல்லாத பிற உழைப்பாளி வெகுஜனங்களையும் சேர்ந்த போதிய அளவுக்கு விரிவான பகுதியோரின் ஆதரவைப் போதிய அளவு பெறுவதற்கும், அதன்பின் மேலும் மேலும் விரிவான உழைப்பாளி மக்கட்திரளினருக்குப் போதமளித்தும் பயிற்றுவித்தும் அவர்களை ஈர்த்துக் கொண்டும் தனது மேலாதிக்கத்தைப் பாதுகாத்து, உறுதியாக்கி, விரிவுபடுத்திக் கொள்வதற்கும் முடியும்படியான நிலைமைகளையும் தருணத்தையும் பிழையின்றிக் கணக்கிட்டு நிர்ணயிப்பதில்தான் அரசியலின் கலையும் (கம்யூனிஸ்டு தனக்குள்ள கடமைகளைச் சரிவர புரிந்து கொள்வதும்) அடங்கியுள்ளன.”
("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-6)


No comments:

Post a Comment