Sunday 3 December 2017

புரட்சியைத் தோற்றுவிக்கும் புறநிலைமை மற்றும் அகநிலைமை பற்றி லெனின்

“புரட்சிகரச் சூழ்நிலை இல்லாமல் புரட்சி சாத்தியமல்ல என்பதும், தவிரவும் புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை மூளச் செய்துவிடுவதில்லை என்பதும் மார்க்சியவாதிக்கு மறுக்க முடியாதவை.

பொதுவில், புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்குரிய அறிகுறிகள் யாவை?

பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக் குறிப்பிடுவது சிறிதும் தவறாகாது:

(1) ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றித் தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகி விடுதல்; "மேல் வர்க்கங்களிடையே’’ ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய கொள்கையில் நெருக்கடி ஏற்பட்டு, இதன் காரணமாய் "வெடிப்பு'’ தோன்றி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய அதிருப்தியும் ஆத்திரமும் அதன் வழியே பீறிட்டெழுதல். புரட்சி ஏற்பட பழைய வழியில் வாழ '’அடிநிலை வர்க்கங்கள் விரும்பாதது" மட்டும் போதாது; பழைய வழியில் வாழ "மேல் வர்க்கங்களால் முடியாமற்போவதும்' அவசியமாகும்.

(2) ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய துயரும் வறுமையும் வழக்கம் போலல்லாது மிகவும் தீவிரமடைந்துவிடுதல்.

(3) மேற்கண்ட காரணங்களின் விளைவாய் வெகுஜனங்களுடைய செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல். "சமாதான காலத்தில்'’ தாம் சூறையாடப்படுவதற்கு முறையீடின்றி இடமளித்துவிடும் வெகுஜனங்கள், கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்கும் சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடியின் சூழ்நிலை அனைத்தாலும் மற்றும் "மேல் வர்க்கங்களாலுங்கூட’'  இழுக்கப்பட்டுவிடுகிறார்கள்.

தனிப்பட்ட குழுக்கள், கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல், வழக்கமாய்ப் புரட்சி சாத்தியமன்று. இந்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவது.

(இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி- 1915 மே-ஜீன்)

No comments:

Post a Comment