Sunday 24 December 2017

வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு - லெனின்

மார்க்சின் கருத்துப்படி வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஒர் உறுப்பே அரசு; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் வாயிலாய் இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையாக்கி, நிரந்தரமாக்கிடும் 'ஒழுங்கை’ நிறுவுவதே அரசு. ஆனால் குட்டிமுதலாளித்துவ அரசியல்வாதிகளின் அபிப்பிராயத்தில், ஒழுங்கு என்றால் ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே ஒழுங்கு; மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்குவோரைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே மோதலை மட்டுப்படுத்துவது.
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை.
...
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் போக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான இந்த விவகாரத்திலிருந்து தான் தொடங்கி இரு பிரதான வழிகளில் செல்கிறது:

ஒரு புறத்தில், முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், குறிப்பாய்க் குட்டிமுதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் உள்ளனவோ அங்கு மட்டுமே அரசு இருக்கிறதென்பதை மறுக்க முடியாத வரலாற்று உண்மைகளின் நிர்பந்தம் காரணமாய் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசு என்று தோன்றும் வண்ணம் மார்க்சுக்குத் 'திருத்தம்' கூறுகிருர்கள். வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடிந்திருந்தால், மார்க்சின் கருத்துப்படி அரசு உதித்தும் இருக்க முடியாது, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கவும் முடியாது.
...
மறு புறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய ''காவுத்ஸ்கிவாதப்'' புரட்டு இன்னும் நுண்ணயம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்துக்கான ஒர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில்’’ இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அது பராமுகமாய் விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆகியதன் விளைவே அரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று “மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கி கொள்ளும்” சக்தியாகும் என்றால், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியமில்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும் "அயலானாய் இருக்கும்’' இந்நிலையின் உருவகமானதும் ஆன அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு. தத்துவார்த்த வழியில் தானகவே வெளிப்படும் இந்த முடிவினை மார்க்ஸ், புரட்சியின் கடமைகளைப் பற்றிய ஸ்தூலமான வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வின் அடிப்படையில் திட்டவட்டமாய் எடுத்துரைத்தார் இந்த முடிவைத்தான் காவுத்ஸ்கி ''மறந்துவிடுகிறார்'', திரித்துப் புரட்டுகிறார்,”
(அரசும் புரட்சியும்)




No comments:

Post a Comment