Friday 15 December 2017

இயற்கை சமூகம் ஆகியற்றில் நடைபெறும் விதிகளும் அவற்கு இடையேயுள்ள வேறுபாடும் பற்றி எங்கெல்ஸ்

“…ஒரு விஷயத்தில் சமுதாய வளர்ச்சி பற்றிய வரலாறு இயற்கையின் வரலாற்றிலிருந்து முக்கிய அம்சத்தில் வேறுபட்டிருப்பதைக் காட்டிக் கொள்கிறது. இயற்கையில் -இயற்கை மீது மனிதன் புரியும் எதிர்வினையை நாம் புறக்கணிக்கின்ற அளவுக்கு- ஒன்றின் மீது ஒன்று செயல் புரியும் குருட்டுப் போக்கான, உணர்வற்ற சக்திகள் மட்டுமே உள்ளன; அவற்றின் பரஸ்பர வினையிலிருந்து பொது விதிகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. நிகழ்கிறதனைத்திலும்-மேலீடாகத் தெரியும் எண்ணற்ற வெளித்தோற்றமான தற்செயல் நிகழ்ச்சிகளிலும் சரி, இந்தத் தற்செயல் நிகழ்ச்சிகளில் உள்ளார்ந்திருக்கும் ஒழுங்குமுறைமையை உறுதிப்படுத்தும் இறுதி விளைவுகளிலும் சரி-உணர்வுபூர்வமாக விரும்பப்பட்ட ஒரு குறிக்கோளாக எதுவும் நிகழ்வதில்லை. இதற்கு மாறாக, சமூக வரலாற்றில் மனிதர்கள் உணர்வைக் கொண்டும் ஆழ்ந்த சிந்தனைகளுடனும் அல்லது மனவெழுச்சிகளின் செல்வாக்கினால் உந்தப்பட்டும் திட்டவட்டமான குறிக்கோள்களை நோக்கிச் செயலாற்றுகிறார்கள்.

உணர்வுபூர்வமான ஒரு நோக்கம் இல்லாமல், நினைத்துக் கொண்ட குறிக்கோள் இல்லாமல் இங்கே எதுவும் நிகழ்வது இல்லை. வரலாற்று ஆராய்ச்சிக்கு -குறிப்பாகத் தனித்தனி சகாப்தங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய வரலாற்று ஆராய்ச்சிக்கு-இந்த வேறுபாடு எவ்வளவுதான் முக்கியமாக இருந்தாலும், வரலாற்றின் உள் இயங்கும் பொது விதிகளே வரலாற்றுப் போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன என்னும் உண்மையை இது மாற்றுவதில்லை. இங்கேயுங்கூட, மொத்தத்தில் பார்க்கும் போது, தனிநபர்களின் உணர்வு பூர்வமாக விரும்பப்பட்ட குறிக்கோள்களையும் மீறி நிகழ்ச்சிகளின் மேலோட்டத்தில் தற்செயல் நிகழ்ச்சி ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது. சித்தப்படி முடிவு செய்தது அபூர்வமாகத்தான் நடக்கிறது. பெரும்பாலும் விரும்பப்பட்ட எண்ணற்ற குறிக்கோள்கள் ஒன்றையொன்று குறுக்கிட்டு மோதிக் கொள்கின்றன, அல்லது இந்தக் குறிக்கோள்கள் முதலிலிருந்தே சாதிக்கப்பட முடியாதவையாகவோ, அல்லது அவற்றைச் சாதிப்பதற்கான சாதனங்கள் போதாமலோ இருக்கின்றன. ஆக, வரலாற்றுத் துறையில் எண்ணற்ற தனித்தனி சித்தங்களின், தனித்தனி செயல்களின் மோதல்கள் உணர்வற்ற இயற்கைத் துறையில் நிலவுவது போன்ற அதே நில வரங்களை உண்டாக்கி விடுகின்றன. செயல்களின் குறிக் கோள்கள் முன்கருதப் பெற்றவை, ஆனால் இச்செயல்களிலிருந்து நடைமுறையில் பின்தொடரும் விளைவுகள் முன்கருதப்பட்டவை அல்ல; அல்லது முதலில் அவை முன் கருதப்பட்ட குறிக்கோளுடன் பொருந்துவதாகத் தோன்றினால், முன்கருதப்பட்ட பின்விளைவுகளுக்கு முற்றிலும் வேறான பின்விளைவுகளை அவை இறுதியில் பெறுகின்றன.

ஆக, மொத்தத்தில் தற்செயலானது வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதே போல் ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது. ஆனால் எங்கே மேலோட்டத்தில் தற்செயல் நிகழ்ச்சி ஆட்சி புரிகிறதோ, அங்கே உண்மையில் அந்தத் தற்செயல் நிகழ்ச்சி மீது அதன் மறைவான உள்விதிகள் எப்போதும் ஆட்சி செலுத்துகின்றன. இவ்விதிகளைக் கண்டுபிடிப்பது ஒன்றே இப்போதைய தேவை.

வரலாற்றின் நிகழ்வுப்போக்கு எதுவாக இருப்பினும், மனிதர்கள் வரலாற்றைப் பின்வருமாறு படைக்கின்றனர்: ஒவ்வொருவனும் உணர்வுபூர்வமாக விரும்பப்பட்ட தன் சொந்தக் குறிக்கோளைப் பின்பற்றுகிறான்; வெவ்வேறான திசைகளில் செயல்படும் இந்தப் பல சித்தங்களின் கூட்டு விளைவும் புற உலகின் மீது அவை புரியும் பல்வகையான பாதிப்புகளின் கூட்டு விளைவுகளும் வரலாறாகவே உருவாகின்றன; எனவே அது அந்தப் பல நபர்கள் விரும்புவது என்ன என்னும் பிரச்சினையும் ஆகும். ஆர்வம் அல்லது ஆழ்ந்த சிந்தனை சித்தத்தை நிர்ணயிக்கிறது. ஆனால் ஆர்வத்தையோ, ஆழ்ந்த சிந்தனையையோ உடனடியாக நிர்ணயிக்கும் நெம்புகோல்கள் மிகவும் வேறுபட்ட வகைகளைச் சேர்ந்தவை. அவற்றில் ஒரு பகுதி புறநிலைப் பொருள்களாக இருக்கக் கூடும், ஒரு பகுதி இலட்சிய நோக்கங்களாக இருக்கக் கூடும், அதாவது: பேராவலாகவோ, "உண்மை மற்றும் நீதியின் பாலுள்ள ஆர்வமாகவோ', தனிப்பட்ட பகையாகவோ, வெறுமே தனிநபர்களின் எல்லா விதமான திடீர் எண்ணங்களாகவோ கூட இருக்கக்கூடும். ஆனால், ஒருபுறத்தில், வரலாற்றில் செயலாற்றும் பல தனித்தனி சித்தங்கள் பெரும்பாலும் முன்கருதப்பட்ட விளைவுகளிலிருந்து முற்றிலும் வேறான- அடிக்கடி முற்றிலும் எதிரான- விளைவுகளை உண்டாக்குவதை நாம் பார்த்தோம்; எனவே மொத்த விளைவோடு சம்பந்தப்படுத்திப்பார்க்கும் போது, அவற்றின் நோக்கங்கள் அதே போல் இரண்டாம் பட்சமான முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் நாம் பார்த்தோம்.

மறுபுறத்தில், மேலும் ஒரு பிரச்சினை எழுகிறது; தம் முறைக்கு இந்த நோக்கங்களின் பின் நிற்கும் இயக்கு சக்திகள் யாவை? செயலாற்றுவோரின் மூளைகளில் இந்த நோக்கங்களாகத் தம்மை உருமாற்றிக் கொள்ளும் வரலாற்றுக் காரணங்கள் யாவை?

பழைய பொருள்முதல்வாதம் இக்கேள்வியைத் தன்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை. எனவே வரலாறு பற்றிய அதன் கருத்தோட்டம் -அப்படி ஒன்று அதற்கு உண்டு என்னும் அளவில்- சாராம்சத்தில் நடைமுறைப் பயன் நோக்கம் கொண்டது. அது எல்லாவற்றையும் செயலின் நோக்கங்களுக்கேற்ப மதிப்பிடுகிறது; வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களைப் பண்புடையோர், பண்பற்றோர் என்று பிரிக்கிறது; அதன் பிறகு பொதுவாகவே பண்புடையோர் வஞ்சிக்கப்படுவதையும் பண்பற்றோர் வெற்றி பெறுவதையும் காண்கிறது. எனவே வரலாற்றைக் கற்பதால் பயன் ஒன்றும் கிடைக்காது என்று பழைய பொருள்முதல்வாதம் புரிந்து கொள்கிறது.

ஆனால் நாம், வரலாற்றுத் துறையில் பழைய பொருள்முதல் வாதம் தன்னையே வஞ்சித்துக் கொள்கிறது என்றும் ஏனென்றால் இலட்சிய வகைப்பட்ட உந்து சக்தி ளின் பின்னே இருப்பது என்ன, இந்த உந்து சக்திகளை உந்துவது எது என்று ஆராய்ச்சி செய்வதற்குப் பதிலாக அங்கே (வரலாற்றுத் துறையில்) செயல்படும் இலட்சிய வகைப்பட்ட உந்து சக்திகளையே இறுதிக் காரணங்களாக அது எடுத்துக் கொள்கிறது என்றும் புரிந்து கொள்கிறோம்.

இலட்சிய வழிப்பட்ட உந்து சக்திகளை அங்கீகரிப்பதில் அல்ல தடுமாற்றம்; இச்சக்திகளின் பின்னே உள்ள இயக்குக் காரணங்களைப் பார்க்கும் அளவுக்கு ஆராய்ச்சியை மேலும் பின்னோக்கிக் கொண்டு போகாததில்தான் அதன் தடுமாற்றம் இருக்கிறது. இதற்கு மாறாக, வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களின் நோக்கங்கள்- வெளித்தோற்றத்திற்குத் தெரிகின்றவையும் உண்மையிலே செயல்பட்டு வருகின்றவையும் -நிச்சயமாக வரலாற்று நிகழ்ச்சிகளின் இறுதிக் காரணங்கள் அல்ல என்று வரலாற்றுத்துறைத் தத்துவஞானம் குறிப்பாக, ஹெகல் பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றுத் துறைத் தத்துவஞானம்-அங்கீகரிக்கிறது; இந்த நோக்கங்களுக்குப் பின்னே வேறு இயக்குச் சக்திகள் உள்ளன, அவற்றைப் பயில வேண்டும் என்றும் அது சொல்கிறது. ஆனால் அது இச்சக்திகளை வரலாற்றுக்குள்ளேயே தேடுவதில்லை, சொல்லப் போனால் வெளியிலிருந்து அவற்றை இறக்குமதி செய்கிறது, தத்துவஞானச் சித்தாந்தத்திலிருந்து வரலாற்றினுள் இறக்குமதி செய்கிறது வரலாற்றுத் துறைத் தத்துவஞானம். எடுத்துக்காட்டாக, ஹெகல் பண்டைக்கால கிரேக்க வரலாற்றை அதன் சொந்த உள்தொடர்புகளின் மூலம் விளக்குவதற்குப் பதிலாக அது 'தனித்தன்மையின் அழகான வடிவங்களைச்' செயலாக்குவதும், தன்னளவிலான * கலைப் படைப்பை' நடைமுறையில் கொண்டுவருவதும் தவிர வேறொன்றுமல்ல கிரேக்க வரலாறு என்று வெறுமே சாதிக்கிறார். இது குறித்துப் பேசும் போது பண்டைக்கால கிரேக்கர்களைப் பற்றி நேர்த்தியாகவும் ஆழமாகவும் நிறைய சொல்கிறார். ஆனால் வெறும் வார்த்தைகளால் நிரம்பிய இத்தகைய விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பதை இது தற்பொழுது தடுக்க முடியாது.

ஆகவே வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களுடைய நோக்கங்களின் பின்னே- உணர்வுபூர்வமாக அல்லது உணர்வின்றி, உண்மையில் மிக அடிக்கடி உணர்வின்றி-- இருக்கும் இயக்கு சக்திகளை, இறுதியில் வரலாற்றின் யதார்த்தமான இயக்கு சக்திகளாக இருப்பவற்றை ஆராய்ச்சி செய்வது தான் பிரச்சினையாக இருக்கும் போது, தனிநபர்களின் அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சரிநோக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பிரச்சினை அல்ல; ஆனால் மாபெரும் மக்கள் திரள்களை, முழுமையான மக்களினங்களை, ஒவ்வொரு மக்களினத்தைச் சேர்ந்த முழுமையான வர்க்கங்களை இயங்கச் செய்யும் நோக்கங்களைப் பற்றியும், அதுவும், சுடர் விட்டெரிந்து விரைவிலே அணைந்து போகும் வைக்கோல் தீ போல் ஏதோ ஒரு வினாடி இயக்கம் போலன்றி, ஒரு மகத்தான வரலாற்று மாற்றத்தில் முடிகிற, நெடிய பயனுள்ள செயலில் ஈடுபடுத்தி விடுகிற நோக்கங்களைப் பற்றியும் கூறும் பிரச்சினையாகத்தான் இது உள்ளது. இங்கே செயல்புரியும் மக்கள் திரளின் மனத்திலும் அவர்களுடைய தலைவர்களின் உயர்ந்த மனிதர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் மனத்திலும் தெளிவாகவோ, தெளிவின்றியோ, நேரடியாகவோ அல்லது ஒரு சித்தாந்த, கற்பனையான வடிவத்தில் கூட உணர்வுபூர்வமான நோக்கங்களாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கும் இயக்குக் காரணங்களைக் கண்டறிகின்ற பாதை ஒன்றுதான் வரலாறு முழுவதிலும், அதன் குறிப்பிட்ட காலப்பகுதிகளிலும், குறிப்பிட்ட நாடுகளிலும் ஆட்சி செலுத்தும் விதிகளைக் கண்டுபிடிக்க உதவி செய்யும்.”
(லூத்விக் ஃபாயர்காகும் மூலுச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்)


No comments:

Post a Comment