Saturday 23 December 2017

பொருளாதாரப் போராட்டத்துக்காக அரசியல் போராட்டத்தை மறப்பதானது சர்வதேச சமூக-ஜனநாயகத்தின் (சர்வதேச கம்யூனிசத்தின்) அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகுவதாகிவிடும் என்று எச்சரிக்கிறார் லெனின்

“எல்லா சமூக-ஜனநாயகவாதிகளுக்கும் (கம்யூனிஸ்டுகளுக்கும்) பொதுவான வேலைத்திட்டத்தை ருஷ்யாவில் கையாளுகையில் எழும் முக்கியமான பிரச்சினைகள் யாவை? பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்துக்கு நிறுவன ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிச சமுதாயம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இந்த வேலைத் திட்டத்தின் சாரப்பொருள் என்று நாம் கூறியிருக்கிறோம்.

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமானது, பொருளாதாரப் போராட்டமும் (தொழிலாளர்களுடைய நிலைமை மேம்பாடு அடைவதற்காகத் தனிப்பட்ட முதலாளிகளையோ, முதலாளிகளது தனிப்பட்ட குழுக்களையோ எதிர்த்து நடை பெறும் போராட்டம்), அரசியல் போராட்டமும் (மக்களுடைய உரிமைகள் விரிவடைவதற்காகவும், அதாவது ஜனநாயகத்துக்காகவும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் விரிவடைவதற்காகவும் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம்) உள்ளடங்கியதாகும். ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகள் சிலர் பொருளாதாரப் போராட்டமானது ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் முக்கியமானதென்று கருதுகின்றனர், அரசியல் போராட்டத்தை இவர்கள் அதிகமாகவோ, குறைவாகவோ நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்துக்கே உரிய ஒதுக்கிவிடும் அளவுக்கு ஏறத்தாழ போய்விடுகின்றனர். இந்தக் கண்ணோட்டம் முற்றிலும் தவறானது.

தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வது அவசியமென்பதை எல்லா சமூக-ஜனநாயகவாதிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள்; இந்த அடிப்படையில் தொழிலாளர்களிடையே கிளர்ச்சி நடத்துவது, அதாவது முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களது அன்றாட போராட்டத்தில் அவர்களுக்கு உதவுவதும், ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருவதும், ஒன்றுபட வேண்டியதன் தேவையை இவ்வழியில் அவர்களுக்குத் தெளிவு படுத்துவதும் இன்றியமையாதது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பொருளாதாரப் போராட்டத்துக்காக அரசியல் போராட்டத்தை மறப்பதானது சர்வதேச சமூக-ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகுவதாகிவிடும், தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு அனைத்தும் நமக்குப் போதிப்பதை மறப்பதாகிவிடும்.

முதலாளித்துவவர்க்கத்தையும் அதற்குச் சேவை புரியும் அரசாங்கத்தையும் ஐயந்திரிபறப் பின்பற்றுவோர் தொழிலாளர்களது முழுக்க முழுக்க பொருளாதாரச் சங்கங்களை அமைக்கவும், இவ்விதம் அவர்களை 'அரசியலிலிருந்து', சோஷலிசத் திலிருந்து திசை திருப்பிவிடவும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்தும் இருக்கிறார்கள். ருஷ்ய அரசாங்கமும்கூட இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்வது முற்றிலும் சாத்தியமே, மக்களுக்குச் சில அற்ப கவளங்களை, இன்னும் சரியாய்ச் சொல்வதெனில் போலியான கவளங்களை விட்டெறிய எப்பொழுதுமே அது முயன்றிருக்கிறது, ஒடுக்கப் படுகிறோம், உரிமைகளில்லாதோராய் இருக்கிறோம் என்ற உண்மையிலிருந்து மக்களுடைய சிந்தனைகளைத் திருப்பலாம் என்பதற்காவது இவ்வாறு அது முயன்றிருக்கிறது.”               

(நமது வேலைத்திட்டம்)

No comments:

Post a Comment