Thursday 23 November 2017

தொழிற்சங்கங்கள் II (பகுதி) - எங்கெல்ஸ்

(தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிக் காவலராக தொழிற்சங்கங்கள் செயற்பட வேண்டியது பற்றி எங்கெல்ஸ் எழுதுகிறார். தொழிற்சங்கப் போராட்டத்தை, கூலி உயர்வுக்கும் வேலை நேரக்  குறைப்புக்கும் மட்டும் நடத்தும் போராட்டமாக குறுக்கிக் கொள்வதை அவர் கண்டிக்கிறார். கூலி குறைவாக இருப்பது பிரச்சினை இல்லை கூலிமுறையே இப்பபிரச்சினைக்கு அடிப்படை என்கிறார். கூலி முறையை அடியோடு ஒழிப்பதே உயர்வான குறிக்கோளாகும். மொத்தமாகத் தொழிலாளி வர்க்கம் முழுவதற்குமான கட்சியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்)

"..... நாடாளுமன்றத்திற்குத் தங்கள் சொந்த (தொழிலாளி) வர்க்கத்தைச் சேர்ந்த நபர்களை அனுப்பியதின் மூலமாக மூலதனத்தை எதிர்த்துப் புதிய ஆயுதங்களோடு போராட்டத்தில் இறங்குவதற்கு உதவியது. ஆனால் இங்கே நாம் வருத்தத்துடன் ஒன்று சொல்லவேண்டியிருக்கிறது: தொழிற்சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிக் காவலராக இருக்கும் தங்கள் கடமையை மறந்து விட்டன. அந்தப் புதிய ஆயுதம் பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவற்றின் கையில் இருந்து வந்தபோதிலும் அதை அவை பயன்படுத்தவில்லை என்றே சொல்லிவிடலாம். அவை உண்மையிலே தொழிலாளி வர்க்கத்தின் முன்னணியில் நடந்தாலொழிய தாம் இன்று வகிக்கும் நிலையைத் தொடர்ந்து வகித்துவர முடியாது என்பதை மறக்கக் கூடாது.

இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கத்திடம் நாற்பது ஐம்பது தொழிலாளிகளை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தனுப்பும் சக்தி இருந்துங்கூட தங்கள் பிரதிநிதிகளாக முதலாளிகளோ முதலாளிகளின் குமாஸ்தாக்களான வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களோ என்றென்றும் இருந்துவருவதில் திருப்திப் பட்டிருப்பது இயற்கைக்குப் புறம்பானது.

மேலும் ஒன்று தான் கொஞ்ச காலமாகத் தவறன பாதையில் சென்றுகொண்டிருப்பதாக இந்நாட்டுத் தொழிலாளி வர்க்கம் உணரத் தொடங்கியிருப்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன; கூலி உயர்வுக்கும் வேலை நேரக்  குறைப்புக்கும் மட்டும் நடத்துகிற இயக்கங்கள் முடிவே இல்லாத ஒரு விஷவட்டத்தில் தன்னை வைத்துவிட்டுள்ளதையும் அடிப்படையான தீமை கூலி-முறையே தவிர கூலி குறைவாயிருப்பதல்ல-என்பதையும் உணரத் தொடங்கியிருப்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன.

இந்த அறிவு தொழிலாளி வர்க்கத்திடையே பொதுவாகப் பரவிவிடுமேயானால் தொழிற்சங்கங்களின் நிலை கணிசமாக மாறித் தீர வேண்டும். தாம் மட்டுமே தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளாக இருக்கும் சிறப்புரிமையை அவை மேற் கொண்டு அனுபவித்த வாரா. தனி தொழில்களைச் சேர்ந்த சங்கங்களின் பக்கத்தில், அல்லது அவற்றிற்கு மேலான நிலையில், ஒரு பொதுச் சங்கம்- தொழிலாளி வர்க்கம் முழுவதற்கும் உரிய ஓர் அரசியல் அமைப்பு- தோன்றித்தீர வேண்டும்.

இவ்விதமாக, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கள் இரண்டு விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது நல்லது, ஒன்று, இந்நாட்டுத் தொழிலாளி வர்க்கம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதில் தனக்குரிய முழுப் பங்கைத் தவறுக்கு இடமற்ற குரலில் கோரும் நேரம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது, உயர்வான கூலிக்கும் குறைவான வேலை நேரத்துக்கும் நடத்தும் போராட்டமும்சரி, இன்று தொழிற்சங்கங்கள் செயலாற்றிவரும் முறையிலுள்ள செய்கை முழுவதும்சரி, தம்மளவில் ஒரு குறிக்கோள் ஆகமாட்டா, அவை கூலி முறையை அடியோடு ஒழிப்பது என்கிற மேலும் உயர்வான குறிக்கோளை அடைவதற்குரிய ஒரு வழிவகை, மிகவும் அவசிமயமான பயன்திறமுளள வழிமுறை, பல வழிவகைகளில் ஒன்றாகும் என்று தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய காலமும் வேகமும் நெருங்கி வருகிறது.

நாடாளுமன்றத்தில் உழைப்பு முழுப் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் கூலி முறையை ஒழிப்பதற்கான தயாரிப்புச் செய்வதற்கும் மொத்தமாகத் தொழிலாளி வர்க்கம் முழுவதற்குமான அமைப்புகள் அவசியமாகிவிடும், தனித்தனி தொழில்களைச் சேர்ந்த அமைப்புகள் அல்ல. எவ்வளவு வரைவிலே இது செய்யப்படுகிறதோ அவ்வளவு நல்லது, ஒரே கட்டுத்திரளாக ஒழுங்கமைத்துக் கொண்டுள்ள பிரட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தை ஒரு நாளைக்கேனும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி உலகத்தல் கிடையாது.”
(1881, கிட்டத்தட்ட மே 20 எழுதப்பட்டது)

No comments:

Post a Comment