Tuesday 28 November 2017

வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடம் – லெனின்

“அதன் பொருளாதார சாராம்சத்தில் ஏகாதிபத்திய மானது ஏகபோக முதலாளித்துவமே ஆகும் எனக் கண்டோம். இதுவேதான் வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடத்தை நிர்ணயிக்கிறது. ஏனெனில் தடையில்லாப் போட்டியின் விளை நிலத்திலிருந்து, கறாராகத் தடையில்லாப் போட்டியிலிருந்தே உதித்தெழும் ஏகபோகமானது முதலாளித்துவ அமைப்பில் இருந்து மேலும் உயர்ந்ததொரு சமூகப் பொருளாதார அமைப்புக்கு மாறிச் செல்வதற்கான இடைநிலையாகும்.
….
அனைத்து உலகமும் பங்கிடப்பட்டு விட்டபின், காலனிகளில் ஏகபோக உடைமைக்கும், ஆகவே உலகின் பங்கீட்டுக்கும் மறு பங்கீட்டுக்குமாகிய மிகவும் கடுமையான போராட்டத்துக்குமான சகாப்தம் தவிர்க்க முடியாதபடி ஆரம்பமாகியது.

முதலாளித்துவத்தின் எல்லா முரண்பாடுகளையும் ஏகபோக முதலாளித்துவம் எந்த அளவுக்குத் தீவிரப்படுத்தி இருக்கிறது என்பது பொதுவாகத் தெரிந்ததே. உயர்ந்த வாழ்க்கைச் செலவையும், கார்ட்டல்களின் கொடுங்கோன்மையையும் குறிப்பிட்டாலே போதும். முரண்பாடுகளது இந்தக் கடுந்தீவிரம்தான் வரலாற்றின் இந்த இடைக்கால கட்டத்தின், உலக நிதி மூலதனம் இறுதி வெற்றி கண்டதும் ஆரம்பமாகிய இந்த இடைக்கால கட்டத்தின் மிகவும் சக்தி வாய்ந்த உந்து விசையாகச் செயல்பட்டு வருகிறது.

ஏகபோகங்கள், ஆதிக்கக் கும்பல், சுதந்திரத்திற்காக அல்லாமல் ஆதிக்கத்துக்கான முயற்சிகள், ஒருசில மிகுந்த செல்வந்த அல்லது மிகுந்த வலிமையான தேசங்கள் மேலும் மேலும் கூடுதலாகிச் செல்லும் சிறிய அல்லது பலவீனதேசங்களைச் சுரண்டுதல்-இவை எல்லாம், ஏகாதிபத்தியத்தின் தனிப்பட்ட குணாதிசயங்களை-புல்லுருவித்தனமான அல்லது அழுகிவரும் முதலாளித்துவமாக ஏகாதிபத்தியத்துக்கு இலக்கணம் கூறும்படி நம்மை நிர்ப்பந்திக்கும் அந்த குணாதிசயங்களை-தோற்றுவித்திருக்கின்றன.
...
ஏகாதிபத்தியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையே இருந்து வரும் பந்தம் இவ்வாறு தான் உண்டாக்கப்படுகிறது. முதலாவதாகவும் மிகவும் தெளிவாகவும் கிரேட் பிரிட்டனில் இந்தப் பந்தம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது; ஏனைய நாடுகளைக் காட்டிலும் மிகவும் முன்னதாகவே பிரிட்டனில் ஏகாதிபத்திய வளர்ச்சியின் சில இயல்புகள் கண்கூடாகியதே இதற்குக் காரணம். ஏகாதிபத்தியத்துக்கும் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இருந்து வரும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையிலான இந்தத் தொடர்பினை-தற்போது குறிப்பான அளவுக்கு அப்பட்ட மானதாகிவிட்ட இதை-சில எழுத்தாளர்கள் (உதாரண மாய் எல். மார்த்தவ்) ஒதுக்கித் தள்ளிவிட முனைகிறர்கள்; இதன் பொருட்டு இவர்கள் பின்வருவது போன்றஅதிகார பூர்வமான நன்னம்பிக்கையை'' (காவுத்ஸ்கி, ஹியூயிஸ்மன்ஸ் பாணியில்) வெளியிடுகிருர்கள்: சந்தர்ப்பவாதம் அதிகரிக்க நேர்ந்திருப்பதற்கு முற்போக்கான முதலாளித்துவமே காரணமெனில், அல்லது சிறந்த ஊதியத்துக்குரிய தொழிலாளர்கள்தான் சந்தர்ப்பவாதத்தின் பக்கம் சாய்கிறார்கள் எனில், முதலாளித்துவத்தை எதிர்ப்போரின் இலட்சியம் நம்பிக்கைக்கு இடமில்லாததாகிவிடும் என்பதாகவும் இன்ன பலவாறாகவும் கூறுதல். இந்த மாதிரியான 'நன்னம்பிக்கை' குறித்து நமக்கு எவ்விதமான பிரமைகளும் இருக்கலாகாது.

இது சந்தர்ப்பவாதத்தைப் பற்றிய நன்னம்பிக்கையாகும், சந்தர்ப்பவாதத்தை மூடிமறைப்பதற்குத் துணை புரியும் நன்னம்பிக்கையாகும். உண்மையில் பார்க்கப் போனால், சந்தர்ப்பவாத வளர்ச்சியின் இந்த அபார வேகமும், வெகுவாய் அருவருக்கத்தக்கதான தன்மையும் அதன் வெற்றி நிலையானது என்பதற்கான உத்தரவாதமாக எவ்விதத்திலும் அமைந்துவிடவில்லை. ஆரோக்கியமான உடலில் வேதனைக்குரிய சீழ்க்கட்டி வளரும் வேகம் துரிதமடைவதானது இன் னும் சீக்கிரமாகவே அந்தக் கட்டியை உடைய வைத்து உடலை நலமடையச் செய்யும்.

சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருந்தால் ஒழிய, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் வெறும் பாசாங்கும் ஏமாற்றுமே ஆகும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் இந்த விவகாரத்தில் யாவரையும் விட மிகவும் அபாயகரமானவர்கள்.

இந்தப் புத்தகத்தில் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சாரம் குறித்து கூறப்பட்டிருப்பவை யாவற்றிலிருந்தும் பெறப்படுவது இதுதான் ஏகாதிபத்தியத்தை மாற்றத்துக்குரிய இடைக்கால முதலாளித்துவமாக, அல்லது இன்னும் துல்லியமாய் அந்திமக் கால முதலாளித்துவமாக நிர்ணயம் செய்தாக வேண்டும்.
… உற்பத்தியின் சமூகமயமாதலையே காண்கிறோம் என்பதும், உள்ளடக்கத்துக்கு இனி ஒவ்வாத மேலோடாய் தனியார் பொருளாதார உறவுகளும் தனியார் சொத்துறவுகளும் அமைந்திருக்கின்றன, இந்த மேலோடு அகற்றப்படுவது செயற்கையான முறையில் தாமதப்படுத்தப்படுமாயின் தவிர்க்க முடியாத முறையில் இந்த மேலோடு அழுகியே செல்லும், அழுகிய நிலையில் ஒரளவு நீண்ட காலத்துக்கு இந்த மேலோடு இருந்து வரலாம் (படுமோசமான நிலைமையே ஏற்பட்டு, சந்தர்ப்பவாதச் சீழ்க்கட்டி நீக்கப்பட நீண்ட காலமாகிவிடுமாயின்) என்ற போதிலும் தவிர்க்க முடியாதபடி இம்மேலோடு எப்படியும் அகற்றப்பட்டு விடும் என்பதும் தெளிவாகவே விளங்குகின்றன.

(ஏகாதிபத்தயம்- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்)

No comments:

Post a Comment