Monday 20 November 2017

மார்க்ஸ் எழுதிய “மூலதனம்”, தொகுதி - 3, அத்தியாயம் 27-க்கு எங்கெல்ஸால் எழுதப்பட்ட இடைச் சேர்ப்பு

(முதலாளித்துவத்தின் தொடக்க காலத்தில் காணப்பட்ட சுதந்திரமான போட்டி காலாவதியாகிவிட்டதையும், ஒரு பெரிய கூட்டுப்பங்கு கம்பெனியில் ஏகபோகமாக செயற்படும் வகையில் உற்பத்தி முறை மாறியதின் தொடக்கத்தையும் எங்கெல்ஸ் கண்ணுற்று பதிவுசெய்துள்ளார். இதனை லெனின் “ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” என்ற நூலில் விரிவுபடுத்தினார். ஒரு சிறந்த மார்க்சியவாதி மாறும் கட்டத்தின் தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும்.)

“மேற்சொன்னவற்றை மார்க்ஸ் எழுதிய பிறகு தொழிற்துறை நிறுவனங்களின் புதிய வடிவங்கள் வளர்ந்துள்ளன. கூட்டுப் பங்கு கம்பெனிகளின் இரண்டாவது மூன்றாவது படிகளைக் குறிக்கின்ற புதிய வடிவங்கள் அவை என்பதை நாம் அறிவோம். இன்று பெருவீதத் தொழில் துறையின் கிளைகள் அனைத்திலும் நாள்தோறும் பொருள் உற்பத்தியை விரிவாக்கக்கூடிய அதிக வேகத்திற்கு அதிகப்படியான இந்தப் பொருட்களுக்கான சந்தை மேலும் மேலும் மெதுவான கதியில் விரிவாகி வருவதை எதிர்நோக்குகிறது. தொழில் துறை சில மாதங்களில் உற்பத்தி செய்து தள்ளுவதை சந்தை வருடக் கணக்கில் கூட ஈர்த்துக் கொள்வது கடினமாக இருக்கிறது. தொழில் அபிவிருத்தி அடையும் ஒவ்வொரு நாடும் மற்றவற்றிலிருந்து குறிப்பாக இங்கிலாந்திடமிருந்து, தன்னை அரணிட்டுப் பாதுகாத்துக் கொள்ள சுங்க வரிக் கொள்கை இத்துடன் சேருகிறது.

விளைவாக உள்நாட்டுப் பொருள் உற்பத்தி ஆற்றல் செயற்கையான முறையில் அதிகரிக்கப்படுகிறது. இவற்றின் விளைவுகள், பொதுவான தீராத நோயாக இருக்கும் அபரிமித உற்பத்தி குறைந்த விலைகள், வீழ்ச்சியடையும் அல்லது அடியோடு மறைந்து போய்விடும் லாபம், சுருக்கமாகச் சொன்னால் ஜம்பமாகக் கூறிக் கொள்ளப்பட்டப் பழைய சுதந்திரமான போட்டி என்பது அதனுடைய கடைகோடியை அடைந்துவிட்டது. இனி அதுவே தனக்கு ஏற்படப் போகும் வெட்கக்கேடான திவால் நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டியதுதான். ஒவ்வொரு தேசத்திலும் ஒரு துறையிலுள்ள பெரிய தொழில்துறை முதலாளிகள் உற்பத்தியை முறைப்படுத்துவதற்காக கார்ட்டல்களில் சேருவது மூலம் இது ஏற்பட்டு வருகிறது. கார்ட்டல் கமிட்டி ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்தி செய்ய வேண்டிய அளவை நிர்ண்யம் செய்கிறது.

தேவையென்று வருகின்ற அனுப்பாணைகளைப் பிரித்துக் கொடுப்பதற்கு அதுதான் இறுதியான அதிகாரம் பெற்றது. சில சமயங்களில் ஆங்கில மற்றும் ஜெர்மன் இரும்புத் தொழில்களின் நிறுவனங்கள் இணைவதைப் போல சர்வதேச ரீதியாகவும் இந்த கார்ட்டல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உற்பத்தியில் இந்த உருவத்திலான பொதுமைப்படுத்துவதும் போதுமானதாக இல்லை. தனிப்பட்ட கம்பெனிகளுக்கிடையில் தத்தம் நலன்களுக்கு இடையேயான முரண்பாடு அவற்றின் இணைப்பை அடிக்கடி உடைத்து மீண்டும் போட்டி ஏற்படுத்தியது. எனவே, உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டம் அனுமதிக்கும் சில பிரிவுகளில் தனி நிர்வாகத்தின் கீழ் ஒரு பெரிய கூட்டுப்பங்கு கம்பெனியில் உற்பத்தி முழுவதையும் ஒன்று குவிக்கத் தொடங்கினார்கள்.

இது அமெரிக்காவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை மிகப் பெரிய உதாரணமாக இருப்பது ஐக்கிய காரப் பொருள் கழகமாகும். இது எல்லா ஆங்கில (அமிலரசாயன உற்பத்தியையும் ஒரே நிறுவனத்தின் கைக்குக் கொண்டு வந்தது 30க்கும் அதிகமான தனி ஆலைகளின் முன்னாள் உரிமையாளர்கள் அவர்களுடைய நிறுவனம் முழுவதையும் மதிப்பிட்டு மொத்தத்தில் சுமார் 50 லட்சம் பவுன் மதிப்புடைய பங்குகளைப் பெற்றிருக்கின்றனர். அது அந்த டிரஸ்டின் நிரந்தர மூலதனத்தைக் குறிக்கின்றது. தொழில்நுட்ப நிர்வாகம் முன்போலவே பழைய தலைவர்கள் கையிலேயே இருக்கின்றது. ஆனால் தலைமைக் குழுவின் கையில் வர்த்தக நிர்வாகம் ஒரு முகப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுமார் 10 லட்சம் பவுன் மதிப்புள்ள வெளியிடப்பட்ட மூலதனம் பொதுமக்கள் வாங்குவதற்கென விடப்பட்டது. எனவே மொத்த மூலதனம் 60 லட்சம் பவுன். இவ்வாறாக ஆங்கில ரசாயனத் தொழில் முழுவதற்குமே அடித்தளமாக உள்ள இந்தப் பிரிவில் போட்டிக்குப் பதில் ஏகபோகம் வந்துள்ளது. சமூகம் முழுவதுமே, தேசமே எதிர்காலத்தில் உடைமை எடுத்துக் கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது மிகவும் மனநிறைவு தருவதாகும்.


No comments:

Post a Comment