Tuesday 28 November 2017

முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் அழுகலும் - லெனின்

“ஏகாதிபத்தியத்தின் குணுதிசயமான புல்லுருவித்தனத்தை இங்கு நான் குறிப்பிடுகிறேன்.

ஏகபோகமே ஏகாதிபத்தியத்தின் ஆழ்நிலைப் பொருளாதார அடிப்படையாகும் என்பதை நாம் முன்பே கண்ணுற்றுள்ளோம். இது முதலாளித்துவ ஏகபோகமாகும், அதாவது முதலாளித்துவத்திலிருந்து தோன்றி, முதலாளித்துவத்துக்கும் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழலில், இந்தப் பொதுச் சூழலுக்கு நிரந்தரமான, தீர்வு காண முடியாத முரண்பாடான ஒன்றாய் நிலவும் ஏகபோகமாகும். ஆனபோதிலும், எல்லா விதமான ஏகபோகத்தையும் போலவே இதுவும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் அழுகலுக்குமான போக்கை உண்டாக்குகிறது.

ஏகபோக விலைகள்-தாற்காலிகமாகவே ஆயினும் நிலைநாட்டப்பட்டிருப்பதால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இதன் விளைவாய் ஏனைய எல்லா முன்னேற்றத்துக்கும் உந்து விசையாய் அமையும் காரணமானது ஓரளவுக்கு மறைந்து விடுகிறது, தவிரவும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதற்கான பொருளாதாரச் சாத்தியப்பாடும் உதித்தெழுகிறது. உதாரணமாக, பாட்டில்களது உற்பத்தியின் செய்முறையில் புரட்சிகர முன்னேற்றத்தை உண்டாக்கிய ஒர் இயந்திரத்தை ஒவன்ஸ் என்பவர் அமெரிக்காவில் கண்டுபிடித்தார். பாட்டில் உற்பத்தி செய்யும் ஜெர்மன் கார்ட்டலானது ஒவன்சின் காப்புரிமையை விலைக்கு வாங்கியது; ஆனால் அதை உபயோகிக்காமல் இருத்தி வைத்துக் கொண்டது. மெய்தான், முதலாளித்துவத்தில் ஏகபோகத்தால் முழுமையாகவும் மிக நெடுங்காலத்துக்கும் போட்டியினை உலகச் சந்தையிலிருந்து நீக்கிவிட முடியாதுதான் (அதீத-ஏகாதிபத்தியமெனும் தத்துவம் இப்படி அபத்தமான ஒன்றாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை இடைக்குறிப்பாய் இங்கு கூறலாம்).

தொழில்நுட்ப மேம்பாடுகளைப் புகுத்துவது உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் லாபங்களை அதிகரிப்பதற்கும் உள்ள சாத்தியப்பாடு மாற்றமுண்டாக்கும் திசையில் செயல்படுவதும் உண்மையே. ஆனாலும் ஏகபோகத்தின் குணதிசயமாகிய தேக்கத்திற்கும் அழுகலுக்குமான போக்கு தொடர்ந்து செயல்படுகிறது; சில தொழிற் கிளைகளில், சில நாடுகளில், குறிப்பிட்ட காலங்களுக்கு இந்தப் போக்கு மேலோங்கிவிடவும் செய்கிறது.

விரிந்து பரந்த, வளமான அல்லது வசதியான தக்க இடத்தில் அமைந்த காலனிகளின் ஏகபோக உடைமையும் இதே திசையில் செயல்படுகிறது.
ஏகாதிபத்தியத்தின் மிகவும் முக்கியமான பொருளாதார அடித்தளங்களில் ஒன்றான மூலதன ஏற்றுமதியானது, பண மூலதனத்தைக் கொண்டு சுகஜீவிகளாக வாழ்வோரைப் பொருளுற்பத்தியில் இருந்து மேலும் முழுமையாகத் தனிமைப்படுத்தி ஒதுக்குகிறது, கடல் கடந்த நாடுகளும் காலனிகளுமான சிலவற்றின் உழைப்பைச் சுரண்டி வாழும் புல்லுருவித்தனமானது ஒரு நாடு முழுவதையுமே பீடித்துக் கொள்கிறது.
பண மூலதன சுகஜீவிகளுடைய வருமானம், உலகின் மிகப் பெரிய ''வாணிப'' நாட்டுக்கு அயல்நாட்டு வாணிபத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகும்! இதுவே தான் ஏகாதிபத்தியத்தின், ஏகாதிபத்தியப் புல்லுருவித்தனத்தின் சாராம்சம்.
பண மூலதன சுகஜீவி அரசு, புல்லுருவித்தனமான, அழுகலாகி வரும் முதலாளித்துவத்தின் அரசாகும்; இந்த சூழ்நிலை சம்பந்தப்பட்ட நாடுகளில் பொதுவாக எல்லாச் சமுதாய, அரசியல் நிலைமைகளையும், குறிப்பாகத் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள அடிப்படையான இரு போக்குகளையும் பாதிக்காமல் இருக்க முடியாது.
தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, அவர்களிடையே சந்தர்ப்பவாதத்தைப் பலம் பெறச் செய்து, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தாற்காலிக அழுகலை உண்டாக்குவதாகிய ஏகாதிபத்தியத்துக்குரிய இந்தப் போக்கு கிரேட் பிரிட்டனில் பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிக்கும் இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்துக்கும் மிகவும் முன்னதாகவே வெளியாயிற்று என்பதைக் குறிப்பிட வேண்டும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலேயே ஏகாதிபத்தியத்தின் இரண்டு முக்கிய குணுதிசயங்களைக் கிரேட் பிரிட்டனில் காண முடிந்தது: இவை பரவலான காலனி உடைமைகளும், உலகச் சந்தையில் ஏகபோக நிலையும் ஆகும். தொழிலாளி வர்க்க இயக்கத்திலான சந்தர்ப்பவாதத்திற்கும், பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய இயல்புகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்பை முறையாக மார்க்சும் எங்கெல்சும் பல பத்தாண்டுகள் அடங்கிய காலப் பகுதியில் கண்ணுற்று விவரித்துக் கூறினர்.
காரணங்களையும் விளைவுகளையும் இது தெளிவாகக் காட்டுகிறது. காரணங்களாவன: 1) இந்நாட்டினால் அனைத்து உலகமும் சுரண்டப்படுதல்; 2) உலகச் சந்தையில் இந்நாட்டுக்குள்ள ஏகபோக நிலை; 3) இதனுடைய காலனி ஏகபோகம். விளைவுகளாவன: 1) பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தில் ஒரு பகுதி முதலாளித்துவமயமாகின்றது; 2) பாட்டாளி வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ வர்க்கத்தால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்ட, அல்லது எப்படியும் அதனால் ஊதியம் அளிக்கப்பட்டு வருகிற ஆட்களை தனக்குத் தலைமை தாங்க அனுமதிக்கிறது. இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் ஏகாதிபத்தியம், ஒரு சில அரசுகளுக்கிடையில் உலகம் பங்கிடப்பட்டுக் கொள்வதை நிறைவு பெறச் செய்தது;…..
சந்தர்ப்பவாதத்துக்கும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பொதுவான, ஜீவாதார நலன்களுக்கும் இடையே இணக்கத்துக்கு இடமில்லா ஒவ்வாமையை நிச்சயம் அதிகமாக்கும் படியான பொருளாதார, அரசியல் நிலைமைகள் இப்பொழுது மேலோங்குகின்றன - இதுவே இன்றைய சூழ்நிலையின் குணவிசேஷமாகும்: கரு நிலையிலிருந்து ஆதிக்கம் செலுத்தும் ஓர் அமைப்பாக ஏகாதிபத்தியம் வளர்ந்திருக்கிறது; தேசியப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முதலாளித்துவ ஏகபோகங்கள் முதன்மை நிலை வகிக்கின்றன; உலகின் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது; மறு புறத்தில் கிரேட் பிரிட்டனுடைய தனி ஏகபோகத்துக்குப் பதிலாக, இந்த ஏகபோகத்தில் பங்கு பெறும் உரிமைக்காகச் சில ஏகாதிபத்திய வல்லரசுகள் போரிட்டுக் கொண்டிருப்பதை காண்கிறோம்; இந்தப் போராட்டம், இருபதாம் நூற்ருண்டின் தொடக்கப் பகுதி அனைத்துக்குமான குணுதிசயமாக இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பாதியில் இங்கிலாந்தில் வெற்றி கண்டிருந்தது போல, சந்தர்ப்பவாதமானது பல பத்தாண்டுகளுக்கு ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இப்பொழுது முழுநிறை வெற்றி பெற முடியாது; ஆனல், பல நாடுகளில் அது பழுத்துக் கனிந்து அழுகிப் போயும் இருக்கிறது; சமூக-தேசியவெறி வடிவில் முதலாளித்துவக் கொள்கையுடன் பூரணமாக ஒன்றுகலந்து விட்டது.”
(ஏகாதிபத்தயம்- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்)


No comments:

Post a Comment