Monday 20 November 2017

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை அரசியல் பொருளாதார அடிப்படையில் இறுதி வெற்றியைப் பற்றி - எங்கெல்ஸ்

(உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் சுட்டிக்காட்டியவுடன், மூலதனத்தின் எந்தப் பகுதி இந்த மதிப்பைப் படைக்கிறது என்பதை ஆராய்கிறார். அப்போது மூலதத்தை இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று மாறும் மூலதனம் மற்றொன்று மாறா மூலதனம். உற்பத்தியில் ஈடுபடுவதற்கு செலவிடப்பட்ட மூலதனத்தில், ஒரு பகுதி உழைப்பாளி செலவிடப்பட்ட உழைப்புச் சக்திக்கு கொடுக்கப்படுகிறது. இந்த மூலதனத்தின் பெயர் மாறும் மூலதனம். இந்த மூலதனம் தான் மதிப்பைப் படைக்கிறது. இயந்திரங்கள் மூலப்பொருள்கள், நிலக்கரி முதலிவற்றிற்கு செலவிடப்பட்ட மூலதனத்திற்குப் பெயர் மாறா மூலதனம். ஏன் என்றால் இங்கு செலவிடப்பட்ட மூலதனம் புதிய மதிப்பை ஏதும் படைப்பதில்லை, பழைய மதிப்பு புதிய சரக்கில் இடம் மாறுகிறது. இதனைத் தொடர்ந்து அவசிய உழைப்பு, உபரி உழைப்பு ஆகிவற்றை விவரிக்கிறார். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வர்க்கப் போர் முற்றுகிறது, இறுதியில் பலாத்காரத்தில் இப்பிரச்சினை தீர்க்கப்படுகிறது என்பதை எங்கெல்ஸ் சுருக்கமாக படம் பிடித்துக் காட்டுகிறார்.)

“உபரி மதிப்பு உற்பத்தியாகும் முறை பற்றி நிதர்சனப்படுத்திக் காட்டிய பின் மார்க்ஸ் அதைப் பற்றிய பகுத்தாய்வில் இறங்குகிறார். எந்த ஓர் உற்பத்தி நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தில் ஒரு பகுதிதான் உபரி மதிப்பை உண்டாக்குவதில் நேரிடையாகப் பங்கெடுக்கும் என்பது இதுவரை கூறியதிலிருந்து தெளிவாகிறது. அந்தப் பகுதிதான் உழைப்புச் சக்தியை வாங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்ட மூலதனமாகும். இந்தப் பகுதி மட்டுந்தான் புதிய மிதிப்பை உண்டாக்கு கிறது. இயந்திரங்கள் மூலப்பொருள்கள், நிலக்கரி முதலியவற்றில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பில் protario (அதே அளவில்) மீண்டும் தோன்றுகின்றது. அது பராமரிக்கப்படுகிறது, மறுவுற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் அதிலிருந்து உபரி மதிப்புத் தோன்ற முடியாது இந்த நிலை, மூலதனத்தைப் புது உப பிரிவுகளாகப் பிரிக்க முன்வரும்படி மார்க்சைத் தூண்டுகிறது

மறுவுற்பத்தி மட்டும் செய்யும் இயந்திரம் மூலப்பொருள் முதலிய உழைப்பிற்குத் தேவையான எல்லா இதர உபகரணங்களுக்காகவும் ஈடுபடுத்தப்படுகிற மூலதனப் பகுதியை மாறா மூலதனம் என்றும் மறுவுற்பத்தி செய்யப்படுவதோடு மட்டும் அல்லாமல் உபரி மதிப்பின் நேரடி ஊற்றுக்கண்ணாக உள்ளதும் உழைப்புச் சக்தியை வாங்குவதற்காக கூலி கொடுக்க ஈடுபடுத்தப்படுவதுமான மூலதனப் பகுதியை மறுபடும் மூலதனம் என்றும் அழைக்கிறார் உபரி மதிப்பு உற்பத்தியில் மாறா மூலதனம் எவ்வளவுதான் அவசியமானதாக இருந்தாலும், அது உபரி மதிப்பை உண்டாக்குவதில் நேரிடையான பங்கு வகிப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மேலும் ஒரு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மாறா மூலதனத்தின் அளவு அத்தொழிலில் உற்பத்தியாகும் உபரி மதிப்பின் அளவை எள்ளளவும் பாதிப்பதில்லை. எனவே உபரி மதிப்பின் விகிதத்தை நிர்ணயம் செய்யும்போது மாறா மூலதனத்தைக் கணத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது உபரி மதிப்பின் அளவையும் அதை உற்பத்தி செய்ய நேரிடையாக ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தின் அளவையும் -அதாவது மாறுபடும் மூலதனத்தின் அளவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் தான் உபரி மதிப்பின் விகிதத்தை நிர்ணயிக்க முடியும். மார்க்ஸ் உபரி மதிப்பை மாறுபடும் மூலதனத்துடன் மட்டும் ஒப்பிட்டுத்தான் உபரி மதிப்பின் விகிதத்தை நிர்ணயிக்கிறார். ஒரு நாளைய உழைப்பின் விலை 3 ஷில்லிங் என்றும் தினசரி உற்பத்தி செய்யப்படுகிற உபரி மதிப்பு 3 ஷில்லிங் என்றும் இருந்தால், உபரி மதிப்பு விகிதம் நூறு சதவிகிதம் என்கிறார்.

"பொருளாதார சாதனைகளுக்கும், அழகான சொல்வன்மைக்கும் பெயர் பெற்ற அந்த ஆக்ஸ்போர்ட் பேராசிரியர், திரு என்.சீனியர், ஆக்ஸ்போர்ட் சர்வ கலாசாலையில் போதித்துக்கொண்டிருப்பதற்குப்பதிலாக நூற்பாளர் முதலாளிகளிடமிருந்து அரசியல் பொருளாதாரத்தைப் படித்துத் தெரிந்து கொள்வதற்காக 1863-ல் மான்செஸ்டருக்கு அழைக்கப்பட்டார்" என்பதிலிருந்து உதாரணத்தை எடுத்துக் காட்டி உபரி மதிப்பின் உற்பத்தியில், அதுவரை இருந்து வந்த வழக்கப்படி மாறா மூலதனத்தை ஒரு முக்கியமான காரணி என்று கணக்கில் எடுத்து கொள்வதால் எவ்வளவு விசித்திரமான தவறுகள் விளையும் என்பது தெளிவு.

தொழிலாளி தனது உழைப்புச் சக்தியைப் மறுவுற்பத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் வேலை நேரத்தை அவசிய உழைப்பு என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதற்கு மேலும் உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காக வேலை செய்யும் நேரத்தை உபரி உழைப்பு என்கிறார். அவசிய உழைப்பும் உபரி உழைப்பும் சேர்ந்து வேலை நாள் என்ற உருவம் பெறுகின்றது.

ஒரு வேலை நாளில் அவசிய உழைப்பிற்கான நேரம் தெரிந்தது, ஒரு வரையறைக்குட்பட்டது. ஆனால் உபரி உழைப்பில் ஈடுபடும் நேரம் எந்தப் பொருளாதார விதிகளாலும் நிச்சயிக்கப்படவில்லை. அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அதிகமானதாகவோ, குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் அது பூஜ்யமாக இருக்க முடியாது அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முதலாளிக்குத் தொழிலாளியை வேலைக்கமர்த்துவதற்கான தூண்டுகோல் இல்லாமல் போய்விடும். அதே சமயம், உடற்கூறு காரணமாக வேலை நாளின் மொத்த நேரம் என்றுமே 24 மணியாக இருக்க முடியாது. ஆனால் 6 மணி கொண்ட வேலை நாளுக்கும், 24 மணி கொண்ட வேலை நாளுக்கும் இடையே பல இடைத்தட்டு கட்டங்கள் உள்ளன.

பண்டங்களின் பரிவர்த்தனை விதிகள், தொழிலாளியின் இயல்பான அயர்வுக்கும் நலிவுக்கும் ஏற்ற அளவிற்கு அதிகமானதாக வேலை நாள் நீடிக்கப்படக் கூடாது என்று கோருகின்றன. ஆனால் இந்த இயல்பான அயர்வும் நலிவும் என்பது என்ன? தினசரி அதற்கு எத்தனை மணி நேர உழைப்பு ஏற்றதாக இருக்கும்? இங்குதான் முதலாளியின் அபிப்பிராயமும் தொழிலாளியின் அபிப்பிராயமும் பெரும் அளவில் வித்தியாசப்படுகின்றன. இதைத் தீர்க்க இருவருக்கும் புறம்பாக உயர் அதிகார அமைப்பு இல்லை. அதனால் இப்பிரச்சனை பலாத்காரத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றது. வேலை நாளின் நீளத்தை நிர்ணயம் செய்துள்ளதன் வரலாறு, கூட்டாக முதலாளிகளும் கூட்டாக தொழிலாளிகளும் அதை வரையறுப்பதற்காகப் போராட்டம் நடத்தியதன் வரலாறாகும். முதலாளிகள், தொழிலாளிகள் ஆகிய இரு வர்க்கங்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் வரலாறாகும்.”
(கா.மார்க்ஸ், மூலதனம் முதல் தொகுதி பற்றிய எங்கெல்சின் மதிப்புரை 1868 மே 22 ஜீன் 1)


No comments:

Post a Comment