Wednesday 29 November 2017

நமது இயக்கத்தின் அவசர அவசியப் பணிகள் (பகுதி) – லெனின்

(பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுபோகிற கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி லெனின் இதில் விமர்சிக்கிறார். சோஷலிச நோக்கங்களையும் அரசியல் பணிகளையும் இணைத்திட வேண்டியடிதின் அவசியத்தை சுட்டுகிறார். தொழிலாளி வர்க்க இயக்கமும் சோஷலிச சித்தாந்தம் இணைவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.)

“பொருளாதாரப் போராட்டமே முதன்மையான முக்கியத்துவமுடையது என்பதாய்ப் பேசப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் பின்னிலைக்குத் தள்ளப்பட்டும் குறுகலாக்கப்பட்டும் வரம் பிட்டுக் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன. சுயேச்சையான தொழிலாளி வர்க்கக் கட்சி ஒன்றை ருஷ்யாவில் அமைக்க வேண்டுமென்பது சொந்த சிந்தனையின்றி அயலார் பேச்சை அப்படியே திருப்பிச் சொல்வதே ஆகும், தொழிலாளர்கள் அரசியலை மிதவாதிகளுடன் கூட்டு கொண்ட அறிவுத்துறையினரிடம் விட்டுவிட்டு பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே நடத்திச் செல்லவேண்டும் என்பதாய்க்கூடப் பேசப் படுகிறது.

இந்தப் புதிய நெறியின் மிக அண்மைக் காலத்திய பிரகடனம் ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்துக்கு இன்னும் வயது வந்தாகவில்லை என்பதாய்ச் சாதித்து சமூக-ஜனநாயக வேலைத்திட்டத்தை அறவே நிராகரிக்கும் அளவுக்குச் செல்கிறது. ரபோச்சயா மீசில் பத்திரிகை (குறிப்பாய் அதனுடைய தனி அனுபந்தம்) அனேக மாய் இதே நிலையைத்தான் ஏற்கிறது. ருஷ்ய சமூக-ஜனநாயகம் ஊசலாட்டத்துக்கும் தன்னைத் தானே மறுப்பதற்கும் ஒப்பான சஞ்சலத்துக்குமுரிய ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.

ஒரு புறத்தில் தொழிலாளி வர்க்க இயக்கம் சோஷலிசத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வருகிறது: தொழிலாளர்கள் பொருளாதாரப் போராட்டம் நடத்த உதவி செய்யப்படுகிறது, ஆனால் அனைத்து இயக்கத்துக்கும் உரித்தான சோஷலிச நோக்கங்களையும் அரசியல் பணிகளையும் அவர்களுக்கு விளக்கிக் கூற எதுவும், அனேகமாய் எதுவும் செய்யப்படவில்லை. மறு புறத்தில் சோஷலிசமானது தொழி லாளர் இயக்கத்திடமிருந்து துண்டிக்கப்பட்டு வருகிறது: தொழிலாளர்கள் தம்மைப் பொருளாதாரப் போராட்டத்துக்குள் இருத்திக் கொண்டுவிடுகிறபடியால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் முற்றிலும் அறிவுத்துறையினராலேயே நடத்தப்பட்டாக வேண்டும் என்பதாய் ருஷ்ய சோஷலிஸ்டுகள் மேலும் மேலும் பேசத் திரும்பவும் முற் படுகிருர்கள்.

வருந்தத்தக்க இந்த நிலை தோன்ற, எங்கள் கருத்துப்படி, மூன்று சூழ்நிலைமைகள் காரணமாய் இருந்துள்ளன. முதலாவதாக, ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகள் தமது செயற் பாட்டின் ஆரம்பக் காலத்தில் வெறும் பிரசாரக் குழுக்களது வேலைக்கு அப்பால் செல்லாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டனர். வெகுஜனங்களிடையே நாம் கிளர்ச்சி நடத்த முற்பட்டபோது மற்றொரு கடைக்கோடி நிலைக்குப் போகாதபடி எப்பொழுதும் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக, நமது செயற்பாட் டின் ஆரம்பக் காலத்தில் நரோத்னயா வோல்யா? உறுப்பினர்களே எதிர்த்து நமது வாழ்வின் உரிமைக்காக அடிக்கடி நாம் போராட வேண்டியிருந்தது. "அரசியலை'' நரோத்னயா வோல்யா உறுப்பினர்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து தனிமைப்பட்ட செயற்பாடாய்க் கருதினர், அரசியலை முற்றிலும் சதிச்செயல் போராட்டமாய்ச் சிறுமை  செய்தனர். இவ்வகையான அரசியலை நிராகரிக்கையில் சமூகஜனநாயகவாதிகள் அரசியலையே முற்றிலும் பின்னிலைக்குத் தள்ளிவிடும் கடைக்கோடி நிலைக்குச் சென்றனர். மூன்றாவதாக, சிறுச் சிறு உள்ளூர்த் தொழிலாளர் குழுக்களில் தனிமைப்பட்டு செயல்பட்ட சமூக-ஜனநாயகவாகிகள், உள்ளூர்க் குழுக்கள் யாவற்றின் செயல்களையும் ஒன்றுபடுத்தவும் புரட்சிப் பணி சரியான வழிகளில் நடைபெற ஏற்பாடு செய்யவும் கூடியதான புரட்சிகரக் கட்சி ஒன்றை அமைப்பதன் அவசியத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. தனிமைப்பட்ட செயற்பாட்டின் இந்த முதன்மை நிலை இயற்கையாகவே பொருளாதாரப் போராட்டத்தின் முதன்மை நிலையுடன் தொடர்புடையதே ஆகும்.

இந்த நிலைமைகளின் விளைவாய் இயக்கத்தின் ஒரு புறத்தில் மட்டும் கவனம் குவியலாயிற்று. "பொருளாதார வாதப்'' போக்கு (இதை ஒரு போக்கு என்பதாய்க் கூறலாமெனில்) இந்தக் குறுகலான தன்மையை ஒரு தனித் தத்துவத்தின் அந்தஸ்துக்குரியதாய் உயர்த்த முயன்றுள்ளது. இதன் பொருட்டு அது புதிய மோஸ்தராகியுள்ள பெர்ன்ஷ்டை னியத்தையும் "மார்க்சியத்தின் விமர்சனம்'' என்பதாய்ச் சொல்லிப் பழைய முதலாளித்துவக் கருத்துக்களுக்குப் புதிய பெயரிட்டு விளம்பரப்படுத்தும் மோஸ்தரையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்துள்ளது. இம்முயற்சிகள் தான் ருஷ்யத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கும் அரசியல் சுதந்திரத்துக்குரிய போராட்டத்தின் முன்னணிப் படையான ருஷ்ய சமூக-ஜனநாயகத்துக்கும் இடையிலுள்ள இணைப்பு பலவீனமடைந்துவிடும் அபாயத்தை உண்டாக்கியுள்ளன. இந்த இணைப்பைப் பலப்படுத்துவதே நமது இயக்கத்தின் மிகவும் அவசர அவசியமான பணியாகும்.

தொழிலாளி வர்க்க இயக்கமும் சோஷலிசமும் ஒன்று சேர்ந்ததுதான் சமூக-ஜனநாயகம் எனப்படுவது. சமூக-ஜனநாயகத்தின் பணி செயலின்றி சும்மாயிருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தனிப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குச் சேவை ஆற்றுவதல்ல. இயக்கம் முழுவதன் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதும், இந்த இயக்கத்துக்கு அதன் இறுதி நோக்கத்தையும் அதன் அரசியல் பணிகளையும் சுட்டிக்காட்டுவதும், அதன் அரசியல், சித்தாந்தச் சுயேச்சை நிலையைப் பாதுகாப்பதும்தான் சமூக-ஜனநாயகத்தின் பணி. சமூக-ஜனநாயகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுமாயின் தொழிலாளிவர்க்க இயக்கம் சிறுமையுற்றுவிடுகிறது, தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத் தன்மையதாகிவிடுகிறது.

பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் நடத்திச் செல்வதன் மூலம் தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் சுயேச்சை நிலையை இழந்துவிடுகிறது; பிற கட்சிகளுக்கு வால்பிடித்துச் சென்று, "தொழிலாளர்களுடைய, விடுதலையைத் தொழிலாளர்களேதான் போராடிப் பெற்றுக் கொண்டாக வேண்டும்'' என்னும் மாபெரும் கோட்பாட்டுக்குத் துரோகம் இழைக்கிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் சோஷலிசத்திலிருந்து விலகி நின்று இரண்டும் தனித் தனியே சொந்த பாதையிலே சென்ற காலகட்டம் ஒவ்வொரு நாட்டிலும் இருந்துள்ளது, சோஷலிசம், தொழிலாளி வர்க்க இயக்கம் இவை இரண்டையும் இந்தத் தனிமைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் பலமிழக்கவே செய்துள்ளது.


சோஷலிசமானது தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இரண்டறக் கலக்கையில் மட்டும்தான் எல்லா நாடுகளிலும் இரண்டுக்கும் நிலையான அடித்தளம் அமைக்கப்படுகிறது. சோஷலிசம், தொழிலாளி வர்க்க இயக்கம் இவை இரண்டின் இந்த இணைவானது ஒவ்வொரு நாட்டிலும் வரலாற்று வழியில், அந்தந்த நாட்டுக்கு உரிய தனிமுறைகளில், காலம், இடம் ஆகிய நடப்பு நிலைமைகளுக்கு ஏற்ப உருவாயிற்று, ருஷ்யாவில் சோஷலிசத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் இணைத்திடுவதன் அவசியம் தத்துவார்த்தத்தில் நெடுங்காலத்துக்கு முன்பே பறைசாற்றப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இவ்விணைவு இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் கடினமான ஒரு நிகழ்ச்சிப்போக்கு. ஆகவே இது நடைபெறுகையில் ஊசலாட்டங்களும் ஐயப்பாடுகளும் ஏற்படுவதில் வியப்பு ஏதுமில்லை.
….
பிரசாரம், கிளர்ச்சி இவற்றின் அன்றாடத் தேவைகள் முன்னிலைக்குக் கொண்டுவரும் பல்வேறு தனிப்பட்ட பணிகளையும் செய்து முடிப்பதில் இயக்கத்தின் செயல் வீரர்களில் மேலும் மேலும் அதிகமானோர் தமது முயற்சிகளை ஒன்று திரட்டி ஈடுபடுத்த வேண்டியதாகிறது. இந்நிகழ்ச்சி இயற்கையானதுதான், தவிர்க்க முடியாததுதான். ஆனால் இது இந்த தனிப்பட்ட பணிகளும் போராட்ட முறைகளும் சுயேச்சையான தனி நோக்கங்களாகி விடாமல் தடுப்பதிலும், தயாரிப்பு வேலைகளே பிரதானமான தனிப் பெரும் செயற்பாடாய்க் கருதப்படுவதைத் தடுப்பதிலும் நம்மைக் குறிப்பான சிரத்தை கொள்ளச் செய்கிறது.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கும் அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவதும்தான் முதன்மையானதும் அடிப்படையானதுமான நமது பணி, இந்தப் பணியைப் பின்னணிக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்குக் கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர், இயக்கத்துக்குப் பெருந் தீங்கு இழைப் பவர்களாவர்.

ஆம், இந்தப் பணி பின்னணிக்குத்தான் தள்ளப்படுகிறது. முதலாவதாக, தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனிமைப்பட்டுள்ள சதி வேலைக் குழுக்களாகிய சக்திகளை மட்டுமே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டுமென்று புரட்சியாளர்களுக்கு அறிவுறுத்துவோரால் இது பின்னணிக்குத் தள்ளப்படுகிறது. இரண்டாவதாக, அரசியல் பிரசாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்துவிடுவோராலும், தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் மட்டும், விழாக் கொண்டாட்டங்களின் போது மட்டும் அவர்களுக்கு ''அரசியலைத்'' தெரியப்படுத்துவதுதான் சரியானது, பொருத்தமானதென நினைப்போராலும், எதேச்சாதிகாரத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்துக்குப் பதிலாய் எதேச்சாதிகாரத்திடமிருந்து தனிப்பட்ட சலுகைகள் சிலவற்றைப் பெறுவதற்கான கோரிக்கைகளைப் பரிவுடன் மேற்கொள்வோராலும், இந்தத் தனிப்பட்ட சலுகைகளுக்கான கோரிக்கைகள் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான புரட்சிகரத் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கான முறையான விட்டுக் கொடுக்காத போராட்டத்தின் நிலைக்கு உயரும்படி உறுதி செய்வதற்குப் போதிய தொலைவு போகாதிருப்போராலும் இப்பணி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
….
பலம் மிக்கதாய் ஒழுங்கமைந்த ஒரு கட்சி நம்மிடம் இருக்குமாயின், தனியொரு வேலைநிறுதம் அரசியல் ஆர்ப்பாட்டமாய், அரசாங்கத்தின் மீதான ஓர் அரசியல் வெற்றியாய் மாறிவிடலாம். பலம்  மிக்கதாய் ஒழுங்கமைந்த ஒரு கட்சி நம்மிடம் இருக்குமாயின், தனியோர் இடத்தில் ஏற்படும் எழுச்சி வெற்றிகரப் புரட்சியாய் வளர்ந்துவிட முடியும். தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அரசாங்கத்துடன் நடைபெறும் போராட்டங்களும் நாம் வென்று கொள்ளும் குறிப்பிட்ட சில சலுகைகளும் பகைவனுடனுன சிறிய கைகலப்புகளே, இடை வழிகளில் பகைவனுடன் ஏற்படும் சந்திப்புகளே என்பதையும், முடிவான போர் இனிமேல்தான் நடைபெறப் போகிறது என்பதையும் நாம் மனதிற் கொண்டாக வேண்டும். பகைவனது கோட்டை அதன் முழு பலத்துடன் நம் எதிரே வானுற உயர்ந்து நிற்கிறது, நம்மீது குண்டும் வெடியும் பொழிந்து நமது தலைசிறந்த வீரர்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கோட்டையை நாம் பிடித்தாக வேண்டும்.

விழித்தெழும் பாட்டாளி வர்க்கத்தின் எல்லா சக்திகளையும் ருஷ்யப் புரட்சியாளர்களது எல்லா சக்திகளுடனும் ஒன்றுபடச் செய்து ருஷ்யாவில் ஜீவ ஆற்றலும் நேர்மையும் கொண்டயாவற்றையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு கட்சியாய் இணைத்திடுவோமாயின் நிச்சயம் நாம் இந்தக் கோட்டையைப் பிடித்து விடலாம். “கோடிக் கணக்கான தொழிலாளர்களின் திண்கரம் உயர்த்தப்படும், படையாட்களது துப்பாக்கி முனைகளால் பாதுகாக்கப்படும் எதேச்சாதிகார ஒடுக்குமுறை தகர்த்துத் தவிடு பொடியாக்கப்படும்என்று ருஷ்யத் தொழி லாளி-புரட்சியாளர் பியோத்தர் அலெக்சேயெவ் வருவது அறிந்து கூறிய அந்த உன்னத வாக்கு அப்பொழுது நிறை வேற்றப்படும்.”

 (1900 அக்டோபரிலும் நவம்பர் )
(வெகுஜனங்களிடையே கட்சியின் பணி- தொகுப்பு)

No comments:

Post a Comment