Sunday 19 November 2017

முதலாளித்துவ சுரண்டலைப் பற்றி எங்கெல்ஸ்

முதலாளிகளும் தொழிலாளிகளும் நிலவி வந்துள்ள இவ்வுலகில் இது காலம் வரை தோன்றியுள்ள நூல்களில், நம்முன் உள்ள இந்த நூல் போன்று தொழிலாளிகளுக்கு இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் எதுவும் தோன்றியதில்லை. நமது இன்றைய சமூக அமைப்பு முழுவதும் எதை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறதோ, மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையே உள்ள அந்த உறவைப் பற்றி முதன்முதலில் விஞ்ஞான பூர்வமாகவும், ஒரு ஜெர்மானியனுக்கு மட்டுமே சாத்தியமான முறையில் முழுமையாகவும் கூர்மையாகவும் இங்கு இது விளக்கப்படுகிறது. ஒவன், சான்-சிமோன், ஃபூரியே ஆகியோரின் படைப்புகள் என்றென்றும் பெருமதிப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. எனினும், மிக உயர்ந்த சிகரத்தின் மீதிருந்து பார்க்கும் ஒருவருக்குக் கீழேயிருக்கிற மலைக்காட்சிகள் எவ்வளவு தெளிவாகவும் பூரணமாகவும் தெரியுமோ, அதேபோல நவீனகால சமூக உறவுகள் சம்பந்தப்பட்ட முழுக் களத்தினையும் தெளிவாகவும், பூரணமாகவும் பார்க்கக்கூடிய ஒரு சிகரத்தினை நோக்கி முதலில் ஏறும் பேறு ஒரு ஜெர்மானியனுக்கு மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

உழைப்பே எல்லாச் செல்வங்களுக்கும் ஊற்று என்றும், எல்லா மதிப்புகளுக்கும் அளவுகோலாகும் என்றும் இதுவரை நிலவிய அரசியல் பொருளாதாரம் நமக்குப் போதித்திருக்கிறது. ஆகவே உற்பத்தி செய்வதற்கு ஒரே உழைப்பு நேரம் பிடித்துள்ள இரு பொருள்கள் ஒரே மதிப்புடையன, ஒன்றுக்கொன்று மாற்றிப் பரிவர்த்தனை செய்யப்படக்கூடியவை. ஏனெனில், சராசரியான சம மதிப்பு உள்ளவை மட்டுமே ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளக் கூடியவை. அத்துடன் சேமித்து வைக்கப்பட்ட உழைப்பின் விசேஷ வகை ஒன்று இருக்கிறது. அதன் பெயர்தான் மூலதனம் என்றும் அது போதிக்கிறது. அந்த அரசியல் பொருளாதாரத்தின்படி, அந்த மூலதனத்தில் துணை ஆதார சக்திகள் அடங்கி இருப்பதால் அது உழைப்பாளியின் மெய்யான உழைப்பின் உற்பத்தித் திறனை நூறு மடங்கு ஆயிரம் மடங்கு அதிகப்படுத்துகிறது. அதற்குப் பலனாக ஒரு குறிப்பிட்ட நஷ்ட ஈட்டை மூலதனம் கோருகிறது. இதுவே லாபம் எனப்படுவது.

எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட தண்ட உழைப்பு மூலமான லாபம் மிகப்பெரும் அளவில் அதிகரித்துப் பெருகவும், முதலாளிகளின் மூலதனங்கள் எவ்வளவோ அதிகமாக ராட்சதத்தன்மை அடையவும் வழி செய்கிற முறையில் இது நடைபெறுகிறது. மறுபக்கத்தில் மெய்யான உழைப்பிற்கான கூலி தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது. கூலியை மட்டும் நம்பி வாழும் தொழிலாளிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் பெருகி அவர்கள் வறுமைக் கொடுமைக்கு ஆளாகின்றனர். இதை நாம் அறிவோம்.

அந்த முரண்பாட்டைத் தீர்ப்பதெப்படி? ஒரு தொழிலாளி தான் உற்பத்தி செய்கிற பொருளுக்கு எவ்வளவு உழைப்பைக் கொடுக்கிறானோ அதற்கான மதிப்பு முழுவதையும் அவன் திரும்பப் பெறும் பட்சத்தில் முதலாளிக்கு லாபம் எப்படி இருக்க முடியும்? சம மதிப்புகள் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட முடியும் என்பதனால் அப்படித்தான் நடக்க வேண்டும். மறுபுறத்தில், பொருளாதார நிபுணர்கள் பலர் ஏற்றுக் கொள்வது போல், உற்பத்தியான இந்தப் பொருள் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றால், சம மதிப்பின் பரிவர்த்தனை எப்படி சாத்தியமாகும்? தொழிலாளி தான் உற்பத்தி செய்த பொருளின் முழு மதிப்பையும் எப்படிப் பெற முடியும்?

முந்தைய அரசியல் பொருளாதாரம் இதுவரை இந்த முரண்பாட்டை எதிர்கொள்ள இயலாமல் இருந்தது, சக்தியற்றிருந்தது; அர்த்தமற்ற குழப்பமான சொல்லடுக்குகளை எழுதி திக்குமுக்காடிக் கூறியது. சோஷலிச அடிப்படையிலிருந்து இதற்கு முன் அரசியல் பொருளா தாரத்தை விமர்சனம் செய்தவர்களும் கூட இம்முரண்பாட்டை வலியுறுத்திச் சுட்டிக்காட்டுவதைத் தவிர எதுவும் மேற்கொண்டு செய்ய முடியவில்லை. அந்த முரண்பாட்டை யாராலும் தீர்க்க முடியவில்லை. கார்ல் மார்க்ஸ்தான் இந்த லாபம் என்பது எங்கிருந்து முளைக்கிறது? அது ஏற்படும் முறையென்ன என்பதை அதன் பிறப்பிடம் வரையில் சென்று தேடிப் பிடித்து அதன் மூலம் அனைத்தையும் இறுதியாகத் தெளிவாக்கி விட்டார்.

மார்க்ஸ், மூலதனம் பற்றிய ஆராய்ச்சியில், முதலாளிகள் தங்கள் மூலதனத்தைப் பரிவர்த்தனை மூலம் அதிகப்படுத்துகின்றனர் என்ற சாமானியமான, ஊரறிந்த கண்கூடான மெய் விவரத்தில் இருந்து தொடங்குகிறார். அவர்கள் தங்கள் பணத்துக்குப் பண்டங்களை வாங்கி, பிற்பாடு தங்கள் அடக்க விலையை விட அதிகப் பணத்திற்கு விற்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு முதலாளி 1000 தேலருக்குப் பருத்தி வாங்கி அதை 100 தேலருக்கு விற்பதன் மூலம் 100 தேலர் லாபம் சம்பாதிக்கிறான் ஆரம்ப முதலீட்டை விட அதிகமாகக் கிடைக்கும் 100 தேலர் மதிப்புள்ள மீதத்தை உபரி மதிப்பு என்று மார்க்ஸ் கூறுகிறார். இந்த உபரி மதிப்பு எங்கிருந்து கிடைக்கிறது? பொருளாதார வாதிகளின் கூற்றுகளின்படி சம மதிப்புகள் மட்டுமே பரிவர்த்தனை யாகின்றன. சூட்சுமமான தத்துவத் துறையில் இது சரிதான். ஒரு வெள்ளித் தேலரைக் கொடுத்து விட்டு முப்பது வெள்ளி குரோஷன்" நாணயங்களைப் பெறுவதாலோ, அல்லது இந்தச் சிறு நாணயங்களைக் கொடுத்து அதற்கேற்ற வெள்ளித் தேலரை திரும்பப் பெறுவதாலோ, ஒருவன் பணக்காரனாகவோ, ஏழையாகவோ ஆவதில்லை. இந்தப் பரிவர்த்தனையில் உபரி மதிப்பு விளைந்து வருவதில்லை. அதேபோல பருத்தியை வாங்கிய பின்னர் அதே பருத்தியை விற்பதில் உபரி மதிப்பு கிடைத்திருக்காது. மேலும் விற்பவன் தனது பண்டங்களின் மதிப்பைவிட அதிகமான விலைக்கு அவற்றை விற்பதாலோ, அல்லது வாங்குபவன் அதன் மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு வாங்குவதாலோ உபரி மதிப்பு உண்டாகி விடுவதில்லை. ஒவ்வொருவரும் ஒரு சமயத்தில் விற்பவராகவும், பிறிதொரு சமயத்தில் வாங்குபவராகவும் இருக்கிறார்கள். அதனால் ஒன்றையொன்று சரிக்கட்டிப் போய்விடுகிறது. ஒருவரை ஒருவர் விஞ்சிவிடுகிற போதும் புதிய மதிப்போ உபரி மதிப்போ உண்டாவதில்லை. ஏனெனில் இது இருக்கும் மூலதனத்தை வேறுவிதமாக முதலாளிகளுக்குள் விநியோகிப்பதாகத் தான் இருக்கும். முதலாளிகள் பண்டங்களை அதற்குண்டான மதிப்பிற்கு ஏற்ப வாங்கி அதே மதிப்பிற்கு ஏற்ப அவற்றை விற்றாலும் கூட முதலாளிக்கு அவர் அதில் போட்ட மதிப்பை விட அதிகமான மதிப்பு கிடைக்கிறது. இது எப்படித் திரும்பவும் நிகழ்கிறது?

இன்றைய சமூக நிலைமைகளில், பண்ட மார்க்கெட்டில் ஒரு பிரத்தியேக குணம் படைத்த பண்டத்தை முதலாளி கண்டுபிடிக்கிறான். அப்பண்டத்தைப் பயன்படுத்துவது புதிய மதிப்பிற்கு ஒர் ஊற்றாகவும் புதிய மதிப்பைப் படைப்பதாயும் இருக்கிறது. அந்தப் பண்டம் தான் உழைப்பு சக்தி என்பது.

உழைப்பு சக்தியின் மதிப்பு என்ன? ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் உழைப்பின் அளவைக் கொண்டு அளவிடப்படுகின்றது. உழைப்பு சக்தி என்பது உயிர் வாழும் உழைப்பாளியின் உருவத்தில் இருக்கின்றது. அந்த உழைப்பாளிக்குத் தனக்கும் அவன் இறந்த பின்னும் உழைப்பு சக்தி தொடர்ந்து கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அவன் குடும்பத்துக்கும் வேண்டி ஒரு குறிப்பிட்ட அளவு வாழ்க்கைத் தேவைகள் அவசியமாகின்றன. எனவே அத்தேவைகளை உற்பத்தி செய்ய எவ்வளவு உழைப்பு நேரம் அவசியப்படுகிறதோ அந்த உழைப்பு நேரம் தான் உழைப்பு சக்தியின் மதிப்பு ஆகிறது. முதலாளி ஒரு வாரக் கூலியைக் கொடுத்து அதன் மூலம் ஒரு தொழிலாளியின் ஒரு வார உழைப்பை விலைக்கு வாங்கிக் கொள்கிறான். பொருளியலாளர் கனவான்கள், உழைப்பு சக்தியின் மதிப்பு பற்றி இந்த அளவுக்கு நாம் சொல்வதைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்வார்கள்.

முதலாளி, அந்தத் தொழிலாளியிடம் வேலை வாங்குகிறான். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அத்தொழிலாளி தன் வாரக் கூலிக்குச் சமமான அளவு உழைப்பைக் கொடுத்து விட்டிருப்பான். உதாரணமாக, தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட வாரக்கூலி மூன்று நாள் வேலைக்குச் சமம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் திங்கட்கிழமை வேலை ஆரம்பித்தால் புதன் மாலையுடன் தனக்குக் கொடுத்த கூலியின் முழு மதிப்பையும் தொழிலாளி முதலாளிக்கு ஈடு செய்திருப்பான். ஆனால் அத்துடன் அவன் வேலை செய்வதை நிறுத்திக் கொள்கிறானா? இல்லவே இல்லை. முதலாளி தொழிலாளியினுடைய ஒரு வார உழைப்பை அல்லவா விலைக்கு வாங்கியிருக்கிறான். வாரத்தில் கடைசி மூன்று நாட்களும் கூட தொழிலாளி தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். தனக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடு செய்யத் தேவையானதை விட அதிகமான இந்த உபரி உழைப்புத்தான், உபரி மதிப்பிற்கும் லாபத்திற்கும், தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும் மூலதனத் திரட்சிக்கும் தோற்றுவாய்

தனக்குக் கொடுக்கப்பட்ட கூலியைத் தொழிலாளி மூன்று நாட்களில் சம்பாதித்து விடுகின்றான், மற்ற மூன்று நாட்களில் முதலாளிக்காக வேலை செய்கிறான் என்பது ஏதோ தன்னிச்சையான கற்பனைப் புனைவு என்று கருத வேண்டாம், தனது சம்பளத்தை ஈடு செய்ய, தொழிலாளி சரியாக மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறானா, இரண்டு அல்லது நான்கு நாட்கள் எடுத்துக் கொள்கிறானா என்பது இங்கு முற்றிலும் முக்கியமல்ல. அது பல்வேறு சூழ்நிலைமைகளையும் பொறுத்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால், தான் கொடுக்கும் ஊதியத்தின் அளவுக்கு முதலாளி உழைப்பைப் பெறுவதுடன் தான் ஊதியம் கொடுக்காத உழைப்பையும் சேர்த்துப் பெற்றுக் கொள்ளுகிறான். இது தன்னிச்சையான கற்பனைப் புனைவு அல்ல. ஏனென்றால், தான் கூலியாகக் கொடுக்கிற அளவுக்குரிய உழைப்பை மட்டும் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து தொழிலாளியிடம் பெற்றால், முதலாளி தனது தொழிற்சாலையை மூடிவிடுவான், ஏனெனில் அவனது லாபம் முழுவதும் இல்லாது போய்விடும்.

மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் அனைத்திற்கும் இங்குதான் ஒரு முடிவைக் காண முடிகிறது. இப்போது உபரி மதிப்பின் (முதலாளியின் லாபம் இதில் முக்கிய பகுதியாகிறது) தோற்றுவாய் உள்ளபடியே மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது. உழைப்பு சக்தியின் மதிப்பிற்கு விலை கொடுக்கப்படுகிறது. ஆனால் அப்படிக் கொடுக்கப்படுகிற மதிப்பானது முதலாளி உழைப்பு சக்தியிலிருந்து பிழிந்து எடுக்கும் மதிப்பை விட மிகக் குறைவானது. இந்த வித்தியாசந்தான், விலை கொடுக்கப்படாத உழைப்புதான் முதலாளியின், ஏன் கறாராகக் கூறப் போனால் முதலாளி வர்க்கத்தின் பங்காக அமைகிறது.

மேலே சொன்ன உதாரணத்தில், பருத்தி வியாபாரத்தில் விற்பனையாளனுக்குக் கிடைத்த லாபங்கூட பருத்தி விலை உயராமலிருந்திருந்தால், விலை கொடுக்கப்படாத உழைப்பைக் கொண்டதாகத்தானிருக்கும். வியாபாரி தனது சரக்கைப் பஞ்சாலை முதலாளிக்கு விற்றிருக்க வேண்டும். அந்த முதலாளி தனது உற்பத்திப் பொருளிலிருந்து, மேற்சொன்ன 100 தேலர் கிட்டியதற்கும் மேல் தனக்கென ஒரு லாபத்தையும் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் முதலாளி தான் எடுத்துக் கொண்டுள்ள விலை கொடுக்கப்படாத உழைப்பை வியாபாரியுடன் பங்கு போட்டுக் கொள்கிறான். பொதுவாக இந்தச் சமூகத்தில் உழைக்காத நபர்களையெல்லாம் பராமரித்து வருவது இந்த விலை கொடுக்கப்படாத உழைப்புத்தான். முதலாளி வர்க்கத்தின் மீது போடப்படுகிற அரசாங்க ஊராட்சி வரி, நிலப்பிரபுக்களுக்கான நிலவரி முதலியனவெல்லாம் இந்த விலை கொடுக்கப்படாத உழைப்பில் இருந்துதான் கொடுக்கப்படுகின்றன. இன்று நிலவி வரும் சமுதாய அமைப்பு முழுவதும் இதன் மீதுதான் நிற்கிறது.

மேலும், ஒருபுறம் முதலாளிகளும் மறுபுறம் கூலித் தொழிலாளிகளும் பொருள்களை உற்பத்தி செய்கிற இன்றைய சமூக சூழ்நிலைமையில்தான், விலை கொடுக்கப்படாத உழைப்பு தோன்றியது என்று நினைப்பது முட்டாள்தனமாகும். அதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட வர்க்கம் எல்லாக் காலகட்டங்களிலும் விலை தரப்படாத உழைப்பைச் செய்து வர வேண்டியிருந்தது. அடிமை முறை உழைப்பு ஒழுங்கமைப்பின் முக்கிய வகையாக அமலில் இருந்த நீண்ட காலகட்டம் முழுவதிலும் அடிமைகள் தங்கள் வாழ்க்கைத் தேவைகள் வடிவில் திரும்பப் பெற்றதை விடவும் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது. பண்ணையடிமை முறையின் கீழும், விவசாயிகள் கூலியில்லாமல் கட்டாய உழைப்பு செலுத்த வேண்டும் எனும் முறை ஒழிக்கப்படுகிற காலம் வரை இதே நிலைதான். அதன் கீழ் விவசாயி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேலை செய்யும் நேரமும், மேற்கொண்டு நிலப்பிரபுவிற்காக உபரியாக உழைக்கும் நேரமும் வெவ்வேறாகத் தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது. நிலப்பிரபுவிற்கென வேலை செய்வது தனக்கென வேலை செய்வதிலிருந்து வேறாகத் தனித்து செய்யப்படுவதாலேயே இது தெளிவாகிறது. இப்போது வடிவம் மாற்றப்பட்டு விட்டது. ஆனால் சாரம் அப்படியே இருக்கிறது. "சமுதாயத்தின் ஒரு பகுதி உற்பத்திச் சாதனங்களின் ஏகபோக உடைமையை வைத்திருக்கிற வரையில், உழைப்பாளர் சுதந்திரமாக இருந்தாலும் சரி அப்படி இல்லாவிட்டாலும் சரி அவன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்கு அவசியமான உழைப்பு நேரத்துடன், உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் வாழ்வதற்காக அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் அதிகப்படி நேர உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்”

(கா.மார்க்ஸ் “மூலதனம்” முதல் தொகுதி பற்றிய மதிப்புரை -1868, மார்ச் 2, 13)

No comments:

Post a Comment