Tuesday 28 November 2017

சர்வாதிகாரப் பிரச்சினைப் பற்றி - லெனின்

“எந்த விதிவிலக்குமில்லாமல் எல்லா முதலாளித்துவ நாடுகளிலுமுள்ள நவீனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைப் பற்றிய பிரச்சினையே அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றைப் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். சர்வதேச அளவில், பொதுவாக புரட்சிகரமான சர்வாதிகாரம், குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகிய போதனையின் வரலாறு புரட்சிகரமான சோஷலிசத்தின், குறிப்பாக மார்க்சியத்தின் வரலாற்றோடு பொருந்தி வருகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட வர்க்கங்கள் தங்களைச் சுரண்டியவர்களுக்கு எதிராக நடத்திய எல்லாப் புரட்சிகளின் வரலாறும் சர்வாதிகாரத்தைப் பற்றிய பிரச்சினையில் நம்முடைய அறிவுக்கு ஆதாரப் பொருளையும் தோற்றுவாயையும் பிரதானமாகக் கொடுக்கிறது; இதுவே எல்லாவற்றையும் காட்டிலும் மிக முக்கியமானதாகும். எந்தப் புரட்சிகரமான வர்க்கத்தின் வெற்றிக்கும் சர்வாதிகாரம் அவசியமென்பதை யாராவது புரிந்து கொள்ள வில்லை என்றால் அவருக்குப் புரட்சிகளின் வரலாற்றைப் பற்றி ஒன்றும் தெரியாது, அல்லது இந்தத் துறையில் அவர் எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.
வெகுஜன வேலைநிறுத்தங்களும் ஆயுதந்தாங்கிய எழுச்சிகளும் புரட்சிகரமான ஆட்சியதிகாரத்தையும் சர்வாதிகாரத்தையும் பற்றிய பிரச்சினையை இயற்கையாகவே எழுப்பின. ஏனென்றால் இத்தகைய போராட்ட வடிவங்கள் தவிர்க்க முடியாத வகையில்-முதலில் ஸ்தல மட்டத்தில் பழைய ஆட்சி அதிகாரிகளை வெளியேற்றுவதற்கும் பாட்டாளி வர்க்கம் மற்றும் இதர புரட்சிகரமான வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் நிலவுடைமையாளர்களை விரட்டுவதற்கும், சில சமயங்களில் தொழிற்சாலைகளைக் கைப்பற்றுவதற்கும் இன்னும் இதரவைகளுக்கும் இட்டுச் சென்றன. அப்பொழுது ஏற்பட்ட வெகுஜனப் புரட்சிகரமான போராட்டம் தொழிலாளர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள், அதனைத் தொடர்ந்து படைவீரர்கள் பிரதி நிதிகளின் சோவியத்துகள், விவசாயிகள் கமிட்டிகள் இன்னும் இதர அமைப்புக்களை, உலக வரலாறு இதற்கு முன்பு அறிந்திராத அமைப்புக்களைத் தோற்றுவித்தது. ஆகவே இன்று உலக முழுவதிலும் வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் அடிப்படையான பிரச்சினைகள் (சோவியத் ஆட்சியதிகாரம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) செய்முறை வடிவத்தில் 1905ம் வருடக் கடைசியிலேயே முன்வைக்கப்பட்டன. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கம் மற்றும் போலித்தனம் அல்லாத மார்க்சியத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகளான ரோஸா லுக்சம்பர்க் போன்றவர்கள் இந்தச் செய்முறை அனுபவத்தின் முக்கியத்துவத்தை உடனடியாக உணர்ந்தார்கள், பொதுக் கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் அதைப் பற்றி விமர்சன ஆய்வு செய்தார்கள் என்ற போதிலும் அதிகார பூர்வமான சமூக-ஜனநாயக மற்றும் சோஷலிஸ்ட் கட்சிகளின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளில் அதிகமான பெரும்பான்மையினர் (சீர்திருத்தவாதிகள் மற்றும் எதிர்காலத்தில் * காவுத்ஸ்கிவாதிகளும்' 'லொங்கேவாதிகளும்' அமெ ரிக்காவில் ஹில் குவிட்டைப் பின்பற்றுவோரும் இதரர் ஆகிய இருதரப்பினரும் இதில் அடங்குவர்) இந்த அனுபவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவும் புரட்சியாளர்கள் என்ற முறையில் தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கும், அதாவது இந்த அனுபவத்தின் படிப்பினைகளை ஆராய்வதற்கும் பரப்புவதற்கும் முற்றிலும் தகுதியற்றவர்களாகத் தங்களை நிரூபித்துக் கொண்டார்கள்.
(சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி-21/10/1920- (பகுதி))

No comments:

Post a Comment