Monday 27 November 2017

ஏகபோக கட்டத்தினுடைய உற்பத்தியின் சமூகமயமாதலும் அதன் தொடர்ச்சியாய் ஏற்படும் நெருக்கடிகளும் – லெனின்

(ஏகபோககட்டத்தில் திட்டமிட்ட உற்பத்தி ஏற்பட்டதினால் பொருளாதார நெருக்கடிகள் தவிர்க்கப்படுகிறது என்கிற தவறானதை லெனின் மறுத்து நெருக்கடிகள் ஏற்படும் என்பதை வலியுறுத்துகிறார்)

“(தடையில்லா) போட்டியானது ஏகபோகமாக மாற்றமடைந்து வருகிறது. உற்பத்தியின் சமூகமயமாக்கம் இதன் விளைவாகப் பிரமாதமாக முன்னேறியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் மேம்பாடுமாகிய வளர்ச்சிப்போக்கு சமூகமயமாக்கப்படுகிறது.

சிதறுண்டு, ஒருவருக்கொருவர் தொடர்பின்றி, தெரியாத ஒரு சந்தைக்காக உற்பத்தி செய்து கொண்டிருந்த தொழிலதிபர்களுக்கு இடையிலான பழைய தடையில்லாப் போட்டியிலிருந்து இது முற்றிலும் வேறான ஒன்றாகும். ஒரு நாட்டிலுள்ள, நாம் காணப் போகிறது போல் பல நாடுகளிலுங்கூட உள்ள, அல்லது அனைத்து உலகிலுமுள்ள மூலப் பொருள் ஆதாரங்கள் யாவற்றையும் (உதாரணமாக, இரும்புக் கணிப் படிவங்களை) ஏறத்தாழ மதிப்பீடு செய்வது சாத்திய மாகிவிடும் அளவுக்கு ஒன்றுகுவிப்பு வளர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட மதிப்பீடுகள் செய்யப்படுவது மட்டுமின்றி, இந்த ஆதாரங்கள் ராக்ஷஸ ஏகபோகக் கூட்டுகளால் கைப்பற்றிக் கொள்ளப்படுகின்றன. சந்தைகளின் கொள்ளளவும் உத்தேச அளவில் மதிப்பீடு செய்யப்படுகின்றது; ஏகபோகக் கூட்டுகள் உடன்பாட்டின் பேரில் இந்தச் சந்தைகளைத் தம் மிடையே "பங்கிட்டுக்கொள்கின்றன.” தேர்ச்சியுள்ள உழைப்பு ஏகபோகமாக்கிக் கொள்ளப்படுகிறது,

சிறந்த பொறியாளர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். போக்குவரத்துச் சாதனங்கள்-அமெரிக்காவில் ரயில் வேக்கள், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கப்பல் கம்பெனிகள்-கைப்பற்றிக் கொள்ளப்படுகின்றன. முதலாளித்துவம் அதன் ஏகபோகக் கட்டத்தில் உற்பத்தியானது மிக விரிவான அளவில் சமூக மயமாக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது; முதலாளிகளை, அவர்களது விருப்பத்துக்கும் உணர்வுக்கும் மாறாக, ஒரு வகைப் புதிய சமுதாய முறையினுள், அறவே தடையில்லாப் போட்டியிலிருந்து முற்றும் சமூகமயமாக்கப்படுதலுக்கு மாறிச்செல்வதற்கான இடைநிலையாகிய ஒன்றினுள் இழுத்துச் செல்கிறது எனலாம்.

உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனல் சுவீகரிப்பு தொடர்ந்து தனியார் வசமே உள்ளது. சமுதாய உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒருசிலரது தனிச் சொத்தாகவே இருக்கின்றன. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கிறது; அதே போது ஏகபோகக்காரர்கள் ஒருசிலர் ஏனைய மக்கள் தொகையோரின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை ஆதிக்கம் நூறு மடங்கு மேலும் கடுமையானதாய், அழுத்துவதாய், சகிக்க முடியாததாய் ஆகிறது.
….
சிறிய நிலையங்களுக்கும் பெரியவற்றுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நிலையங்களுக்கும் பின்தங்கியவற்றுக்கும் இடையிலான போட்டி அல்ல. ஏகபோகக்காரர்கள் தங்களுக்கும், தங்களது ஆதிக்கத்துக்கும், தங்களது நாட்டாண்மைக்கும் பணியாதவர்களை மென்னியைப் பிடித்து நெரிப்பதையே இங்கு காண்கிறோம்
…..
கார்ட்டல்களால் நெருககடிகளை இல்லாது ஒழித்துவிட முடியும் என்ற பேச்சு, முதலாளித்துவப் பொருளியலாளர்கள் பரப்பி வரும் ஒரு கட்டுக்கதை, இவர்கள், முதலாளித்துவத்தை எப்படியேனும் அனுகூலமானதாகக் காட்ட வேண்டுமென விரும்புகிறவர்கள். நெருக்கடிகளை ஒழிப்பதற்கு நேர்மாறாக, சில தொழிற் கிளைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் ஏகபோகமானது முதலாளித்துவ உற்பத்தி அனைத்துக்கும் உள்ளியல்பான அராஜகத்தை அதிகரிக்கவும் கடுமையாக்கவுமே செய்கிறது.”
(ஏகாதிபத்தயம்- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்)




No comments:

Post a Comment