Sunday 26 November 2017

முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றி எங்கெல்ஸ்

முதலாளியால் வேலைக்கமர்த்தப்படுகிற ஒவ்வொரு தொழிலாளியும் இருவகையான உழைப்பைச் செய்கிறான் என்பதை முந்திய கட்டுரையில் பார்த்தோம். வேலை நேரத்தின் ஒரு பகுதியின் போது தொழிலாளி, முதலாளியால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலியை ஈடுகட்டுகிறான். இப்பகுதியைத் தான் மார்க்ஸ் அவசியமான உழைப்பு என்று கூறுகிறார். ஆனால், அதற்குப் பின்னரும் தொழிலாளி தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அச்சமயத்தில் முதலாளிக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்து கொடுக்கிறான். இதில் ஒரு கணிசமான பகுதி லாபமாகிறது. இந்தப் பகுதிக்குத்தான் உபரி உழைப்பு என்று பெயர்.

தொழிலாளி தனது கூலியை ஈடு கட்டுவதற்காக மூன்று நாட்கள் வேலை செய்வதாகவும், முதலாளிக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்ய மூன்று நாட்கள் வேலை செய்வதாகவும் வைத்துக் கொள்வோம். வேறு வகையில் சொல்வதானால் இதன் பொருள், பன்னிரெண்டு மணி நேரம் கொண்ட வேலை நாளில், தினசரி தன் கூலிக்காக ஆறு மணி நேரமும், உபரி மதிப்பு உற்பத்திக்காக ஆறு மணி நேரமும் அவன் வேலை செய்கிறான். வாரத்திலோ ஆறு நாட்களுக்குத்தான் உழைப்பைப் பெற முடியும்; ஞாயிற்றுக்கிழமையைச் சேர்த்துக் கொண்டாலும், ஏழு நாட்களுக்குத்தான் பெறலாம். ஆனால் ஒரு வேலை நாளிலோ, ஆறு, எட்டு, பத்து, பன்னிரெண்டு பதினைந்து மணி நேரத்திற்கும் அவற்றிற்கு மேலும் உழைப்பைக் கறக்க முடியும். முதலாளியிடம் தொழிலாளி தன் ஒரு நாள் கூலிக்காக ஒரு வேலை நாளை விற்கிறான். ஒரு வேலை நாள் என்றால் என்ன? எட்டு மணி நேரமா அல்லது பதினெட்டு மணி நேரமா?

வேலை நாளை அதிக நேரம் கொண்டதாக எவ்வளவு நீட்டிக் கொண்டு போக முடியுமோ அவ்வளவு நீட்டிப்பது முதலாளிக்குச் சாதகமானது. எவ்வளவுக்கெவ்வளவு வேலை நாள் நீண்டதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உபரி மதிப்பு உற்பத்தியாகிறது. தனக்குக் கிடைக்கும் கூலியை ஈடு செய்த பின், அதற்கு மேலும் அவன் வேலை செய்யும் ஒவ்வொரு மணி நேர உழைப்பும், அநியாயமாக அவனிடமிருந்து அபகரிக்கப்படுகிறது என்று தொழிலாளர் நினைப்பது நியாயமானதே அளவுக்கு அதிகமான நேரம் வேலை செய்வது என்ன என்பதைத் தனது சொந்த உடல் சலிப்பால் உணர்கிறான்.

முதலாளி தனது லாபத்திற்காகப் போராடுகிறான். தொழிலாளியோ தன் தேக ஆரோக்கியத்திற்காகவும், தினசரி சில மணி நேர ஓய்வுக்காகவும் அவன் வேலை செய்வது, தூங்குவது சாப்பிடுவது தவிர ஒரு மனித ஜீவன் என்ற முறையில் இதர துறைகளில் அலுவல்களைச் செய்வதற்கு சாத்தியப்படுவதற்காகவும் போராடுகிறான். இந்த இடத்தில் தனிப்பட்ட முதலாளிகள் இம்மாதிரியான போராட்டத்தில் ஈடுபட விரும்புகிறார்களா இல்லையா என்பது அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பொறுத்ததல்ல என்று போகிற போக்கில் கூறி விடுவது நல்லது போட்டியானது, அவர்களில் மிகவும் உதாரகுணம் படைத்தவர்களையும் தனது சகாக்களுடன் சேர்ந்து நிற்கும்படி செய்து, வேலை செய்யும் நேரத்தை அவர்கள் எவ்வளவு நீண்டதாக ஆக்கிக் கொள்கின்றனரோ அவ்வளவு நீண்டதாகத் தாங்களும் ஆக்கிக் கொள்ள விதி செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறது.

வேலை நாளை நிர்ணயம் செய்வதற்கான போராட்டம் சுதந்திரமான தொழிலாளிகள் வரலாற்றில் முதலில் தோன்றிய காலம் முதல் இன்று வரை தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. பல்வேறு தொழில்களில் மரபு முறையில் நிர்ணயிக்கப்பட்ட வெவ்வேறு வேலை நாட்கள் நிலவுகின்றன. ஆனால் உண்மையில் அவை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. எங்கு சட்டத்தின் மூலம் வேலைநாள் நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அமலாக்கம் கண்காணிக்கப்படுகின்றதோ அங்குதான் உண்மையில் வரம்புக்குட்பட்ட வேலை நாள் அமலிலிருக்கிறது எனக் கூற முடியும். ஆனால் இதுவரை இந்த நிலை இங்கிலாந்தில் தொழிற்சாலை மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. இங்கு எல்லாப் பெண்களுக்கும், 13க்கும் 18க்கும் இடையிலான வயதுடைய இளைஞர்களுக்கும் பத்து மணி நேரம் கொண்ட வேலை நாள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது (5 நாட்களுக்கு 10 1/2 மணி நேரமும், சனிக்கிழமை 7 1/2 மணியும்) இவர்கள் இல்லாமல் ஆண்கள் வேலை செய்ய முடியாதாகையால் அவர்களுக்கும் 10 மணி நேர வேலை நாள் அமலாக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் பிரிட்டிஷ் ஆலைத் தொழிலாளிகள் பல்லாண்டுகள் கொடுமைகளைச் சகித்து, ஆலை சொந்தக்காரர்களுடன் நடத்திய உறுதியான விடாப்பிடியான போராட்டத்தினால் தான் பெறப்பட்டது, பத்திரிகை சுதந்திரம், சங்கம் சேரும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, அதேபோல் ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளைச் சாமர்த்தியமாக உபயோகித்துக் கொள்வது ஆகியவற்றால் தான் இது சாத்தியமாயிற்று. இச்சட்டம் பிரிட்டிஷ் தொழிலாளிகளின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அது படிப்படியாகப் பெருமளவு தொழில் துறையின் எல்லாப் பிரிவுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. சென்ற வருடம் ஏறக்குறைய எல்லாத் தொழில்துறை நிறுவனங்களுக்கும், குறைந்தபட்சம் பெண்களும் குழந்தைகளும் வேலை பார்க்கும் தொழில் துறை நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இங்கிலாந்தில் வேலை நாள் பற்றி சட்டப்பூர்வமான ஒழுங்கு விதிகளின் சரித்திரம் பற்றி மிக விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது இந்நூல். அடுத்துக் கூடும் வடக்கு ஜெர்மன்ரைஹ்ஸ்டாக்” தொழிற்சாலை விதித் தொகுப்பை இயற்றவிருக்கிறது, அதோடு ஆலைத்தொழிலாளரின் உழைப்பு ஒழுங்கு விதிகளைப் பற்றி விவாதிக்கப் போகிறது. ஜெர்மன் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் மார்க்சின் நூலைப் பூரணமாகப் படித்து முன்கூட்டியே புரிந்து கொள்ளாமல், அந்த மசோதாவை விவாதிக்கச் செல்ல மாட்டார்கள் என்று நாம் எதிர் பார்க்கிறோம். அங்கே நிறைய சாதிக்க முடியும். இங்கிலாந்தில் என்றுமே இல்லாதிருந்த அளவில் ஜெர்மன் ஆளும் வர்க்கத்தினருக்குள் உள்ள பிளவு தொழிலாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது. ஏனென்றால் பொது வாக்குரிமை தொழிலாளிகளின் தய்வை நாடும்படி ஆளும் வர்க்கத்தை நிர்பந்திக்கிறது.

பாட்டாளி வர்க்கத்தின் நான்கைந்து பிரதி நிதிகள் இச்சூழ்நிலைமையில் தங்கள் ஸ்தானத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று தெரிந்திருந்தால், விவாதிக்கப்படும் பிரச்சனை பற்றி தெரிந்திருந்தால் முதலாளித்துவ வர்க்கத்தினருக்குத் தெரியாததையும் அவர்கள் தெரிந்திருந்தால், பெரும் சக்தியாக விளங்குவார்கள். இதற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் மார்க்சினுடைய நூல் தயாராகத் தொகுத்துத் தந்திருக்கிறது.

பெரும்பாலும் தத்துவார்த்த முறையில் அக்கறைக்குரிய இதர பல சிறந்த ஆராய்ச்சிகளை விட்டு விட்டு மூலதனத் திரட்சி பற்றியதான கடைசி அத்தியாயத்திற்கு வருவோம். முதலாளித்துவ உற்பத்தி முறை அதாவது ஒரு புறம் முதலாளிகளும் மறுபுறம் கூலித் தொழிலாளிகளும் இருப்பதை முன் நிபந்தனையாகக் கொண்டுள்ள முறையானது, முதலாளியின் மூலதனத்தை மீண்டும் மீண்டும் இடைவிடாது மறு உற்பத்தி செய்து கொள்வதுடன் அதே சமயத்தில் தொழிலாளிகளுடைய ஏழ்மையை மீண்டும் மீண்டும் இடைவிடாது மறு உற்பத்தி செய்கின்றது என்பது இங்கு முதன்முதலாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இதனால், வாழ்க்கைத் தேவைக்கான சாதனங்கள், மூலப்பொருள்கள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றுக்கு உடைமையாளர்களாக இருக்கும் முதலாளிகள் ஒருபுறத்திலும், தாம் வேலை செய்து வாழ்வதற்கும், உழைக்க வல்ல உடல் படைத்த புதிய தலைமுறை பாட்டாளிகளை வளர்த்து ஆளாக்க மட்டுமே போதும் போதாதென்ற வாழ்க்கைச் சாதனங்களைப் பெறுவதற்குமென தம் உழைப்பு சக்தியை அம்முதலாள்ரிகளுக்கு விற்கும் படியான கட்டாயத்திலுள்ள தொழிலாளிகளைக் கொண்டுள்ள பெரும் திரள் மறுபுறத்திலும் எப்போதும் நிலைத்து வருவது உத்தரவாதம் செய்யப்படுகின்றது. ஆனால் மூலதனம் மறு உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்ல, அது தொடர்ந்து பெருகுகிறது, பன்மடங்காகிறது. அதற்கேற்றாற்போல் சொத்தற்ற வர்க்கமான தொழிலாளிகளின் மீது அதனுடைய ஆதிக்கமும் பெருகுகிறது. மேலும் மேலும் அதிகமான அளவில் மூலதனம் மறு உற்பத்தி முறையானது, மேலும் மேலும் அதிக அளவிலும் எண்ணிக்கையிலும் சொத்தற்ற தொழிலாளிகளைச் சிருஷ்டிக்கிறது.

மூலதனத் திரட்சி முதலாளித்துவ உறவை மேலும் அதிகமான அளவில் மறு உற்பத்தி செய்கிறது: ஒரு துருவத்தில் அதிகமான முதலாளிகளும் பெரும் முதலாளிகளும் சிருஷ்டியாகிறார்கள். எனவே மூலதனத் திரட்சி என்பது பாட்டாளி வர்க்கம் பெருகுவது என்பதாம்எனினும் இயந்திரத் தொழிலின் வளர்ச்சியால், வளர்ச்சி பெற்ற விவசாயத்தால், இவை போன்ற பிறவற்றால், முன்னால் உற்பத்தி செய்த அதே அளவு பொருள்களை உற்பத்தி செய்ய மேலும் மேலும் குறைவான தொழிலாளிகளே தேவைப்படுகிறார்கள். தொழிலாளிகளின் எண்ணிக்கை தேவை கடந்த அளவுக்குச் செல்வது என்ற நிகழ்ச்சி மூலதன வளர்ச்சியை விட வேகமாக நடக்கிறது. இந்த முடிவின்படி எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே போகும் தொழிலாளர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்கள் தொழில்துறையில் சேமிப்புப் பட்டாளமாக ஆகிறார்கள். வியாபாரத்தில் மந்தம் அல்லது மோசமான நிலை ஏற்படும்போது அவர்களுக்கு உழைப்பின் மதிப்பைவிடக் குறைவாகக் கூலி கொடுக்கப்படுகிறது; அவர்கள் தொடர்ந்தாற்போல் அல்லாமல் விட்டுவிட்டு வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் அல்லது ஏழையர் உதவிச் சட்டப்படியுள்ள பராமரிப்பு ஏற்பாடுகளின் கீழ் வருகிறார்கள். இங்கிலாந்தில் தெளிவாகத் தெரிவதைப் போல, தொழில் விசேஷமாக சுறுசுறுப்பு அடையும்போது, முதலாளிகளின் வர்க்கத்துக்கு இந்தச் சேமிப்புப் பட்டாளம் நிச்சயமாக இன்றியமையாததாகிறது.

பொதுவாக எல்லாச் சூழ்நிலைமைகளிலும் முறைப்படி வேலைக்கமர்த்தப் பட்டுள்ள தொழிலாளிகளின் எதிர்ப்பு பலத்தை உடைக்கவும் அவர்கள் கூலி உயராமல் தடுக்கவும் இந்தச் சேமிப்பு பட்டாளம் உபயோகப்படுகிறது. "எவ்வளவுக்கெவ்வளவு சமூகச் செல்வம் அதிகரிக்கிறதோ. அந்த அளவுக்குத் தொழில் துறையில் சேமிப்புப் பட்டாளம் (ஒப்பளவில் உபரி ஜனத்தொகை) பெருகுகிறது. ஆனால், செயல் தன்மையுள்ள முறைப்படி வேலைக்கமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் பட்டாளத்தை விட இந்தச் சேமிப்புப் பட்டாளம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகுமோ, தமது வாழ்க்கை வறுமையானது உழைப்பு வாதனைக்கு எதிர் விகிதத்தில் அதிகமாய் உள்ள நிரந்தரமான தொழிலாளர் உபரி ஜனத்தொகை அந்த அளவுக்குப் பெருகுகிறது. முடிவாக, இந்தப் பஞ்சைகளான தொழிலாளர் வர்க்கப் பகுதியும், தொழில் துறை சேமிப்புப் பட்டாளமும் எவ்வளவுக்கு விரிவடைகிறதோ அவ்வளவுக்கு அதிகார பூர்வமான தரித்திரம் அதிகமாகிறது. இதுதான் முதலாளித்துவத் திரட்டலின் பொதுவான முழுமையான விதியாகும்”

இவையே திட்டவட்டமான விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கப் பட்ட தற்போதைய முதலாளித்துவ சமூக அமைப்பின் சில முக்கியமான விதிகள் ஆளும் வர்க்கத்தின் அதிகார பூர்வமான பொருளியலாளர்கள், இவற்றை மறுப்பதற்கு முயற்சி செய்வதைக் கூடச் சர்வ ஜாக்கிரதையாகத் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இத்துடன் எல்லாம் சொல்லி முடித்தாகி விட்டதாகக் கருத முடியுமா? இல்லை. மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தியின் தீய அம்சங்களை எவ்வளவு கூர்மையாகச் சுட்டிக் காட்டுகிறாரோ, அதேபோல சமுதாயத்தின் உறுப்பினர் அனைவரும் மானுடஜீவிகள் என்ற தகுதியுடன் வாழ சமமான வளர்ச்சியை சாத்தியமாக்கக் கூடிய தரத்துக்கு சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்க்க, இந்தச் சமூக அமைப்பு அவசியமாகிறது என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறார். இதற்கு முன்பிருந்த எல்லா சமூக அமைப்புகளும் இந்தப் பணியை நிறைவேற்ற வலுவற்றவையாக இருந்தன. முதன்முதலாக முதலாளித்துவ உற்பத்தி முறையானது இதற்கு அவசியமான செல்வத்தையும் உற்பத்தி சக்திகளையும் சிருஷ்டிக்கிறது. அதே சமயம், இந்தச் செல்வாதாரங்களும் உற்பத்தி சக்திகளும் இன்று இருப்பதைப் போல ஏகபோக வர்க்கத்திற்கு மட்டும் உடைமையாக இல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன்பட வேண்டுமென்று வற்புறுத்தும் கட்டாயத்திலிருக்கிற அடக்கப்பட்ட தொழிலாளர்கள் என்னும் சமூக வர்க்கத்தையும் சிருஷ்டிக்கிறது.
(கா.மார்க்ஸ் “மூலதனம்” முதல் தொகுதி பற்றிய மதிப்புரை -1868, மார்ச் 2, 13)

No comments:

Post a Comment