Tuesday 28 November 2017

ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம் – லெனின்

ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம் என்பதன் மூலம், இப்பதத்தின் விரிவான பொருளில், நாம் குறிப்பது சமுதாயத்தின் வெவ்வேறு வர்க்கங்களும் அவற்றின் பொது சித்தாந்தத்தின் தொடர்பாக ஏகாதிபத்தியக் கொள்கை குறித்து அனுசரிக்கும் போக்கு ஆகும்.

பிரம்மாண்டப் பரிமாணங்களில் நிதி மூலதனம் ஒரு சிலரது கைகளில் ஒன்று குவிந்து, அசாதாரணமாய் அடர்ந்தும் பரந்தும் வலைப்பின்னலாய் அமைந்த உறவுகளையும் தொடர்புகளையும் தோற்றுவித்து, ஒரு புறத்தில் சிறிய, நடுத்தர முதலாளிகளை மட்டுமின்றி, சின்னஞ்சிறு முதலாளிகளையும் கைவினை அதிபர்களையுங்கூட இந்த வலைப்பின்னலால் கீழ்ப்படியச் செய்துவிடுகிறது; மறு புறத்தில் உலகின் பங்கீட்டுக்காகவும் பிற நாடுகளின்மீது ஆதிக்கம் பெறுவதற்காகவும் ஏனைய தேசிய-அரசு நிதியதிபதிக் கோஷ்டிகளை எதிர்த்து மேலும் மேலும் உக்கிரமான போராட்டம் நடத்தப்படு கிறது-இவற்றின் காரணமாய்ச் சொத்துடைத்த வர்க்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் தரப்புக்குச் சென்று விடுகின்றன. ஏகாதிபத்தியத்திற்குள்ள வருங்கால வாய்ப்பு கள் பற்றிய "பொதுவான" உற்சாகம், வெறிகொண்டு அதை ஆதரித்து நிற்றல், கவர்ச்சியான வண்ணங்களில் அதைச் சித்திரித்துக் காட்டுதல்-இவை யெல்லாம் இக் காலத்தின் அறிகுறிகளாகும். ஏகாதிபத்தியச் சித்தாந்தம் தொழிலாளி வர்க்கத்துள்ளும் ஊடுருவுகிறது. தொழிலாளி வர்க்கம் சீனத்துச் சுவரால் பிற வர்க்கங்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. ஜெர்மனியின் இன்றைய "சமூகஜனநாயகக்" கட்சி என்பதன் தலைவர்கள், "சமூக-ஏகாதிபத்தியவாதிகள்' என-அதாவது சொல்லில் சோஷலிஸ்டு களும் செயலில் ஏகாதிபத்தியவாதிகளுமாவர் என-முழு நியாயத்துடன்தான் அழைக்கப்படுகிருர்கள்;…
ஏகாதிபத்தியத்தின் அடிப்படையாக இருப்பதைச் சீர்திருத்துவது சாத்தியம்தானா, அது தோற்றுவிக்கின்ற முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவதையும் ஆழமாக்குவதையும் நோக்கி முன்னே செல்வதா?, அல்லது இம்முரண்பாடுகளைத் தணிப்பதை நோக்கிப் பின்னே செல்வதா? என்ற கேள்விகள், ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனத்தில் அடிப்படையான கேள்விகளாகும். நிதியாதிக்கக் கும்பலின் ஒடுக்குமுறையின் காரணமாகவும் தடையில்லாப் போட்டி அகற்றப்பட்டதன் காரணமாகவும் எங்கும் பிற்போக்கும் கூடுதலான தேசிய ஒடுக்குமுறையும்தான் ஏகாதிபத்தியத்தின் பிரத்தியேக அரசியல் இயல்புகளாக இருப்பதால், இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் அனேகமாய் எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் குட்டிமுதலாளித்துவ-ஜனநாயக எதிர்த்தரப்பு ஒன்று எழுந்தது. அதன் பொருளாதார அடிப்படையில் மெய்யாகவே பிற்போக்கானதாகிய இந்தக் குட்டி முதலாளித்துவச் சீர்திருத்தவாத எதிர்த்தரப்பினைக் காவுத்ஸ்கி எதிர்ப்பதற்கு முனையவும் இல்லை, எதிர்ப்பதற்கான திராணியும் அவரிடம் இல்லை என்பது மட்டுமின்றி, நடைமுறையில் அதனுடன் ஒன்றுசேர்ந்து கொண்டும் விட்டார். காவுத்ஸ்கி யும், விரிந்தமைந்த சர்வதேசக் காவுத்ஸ்கிவாதப் போக்கும் மார்க்சியத்தைத் துறந்துவிட்டு ஓடியது இங்குதான் காணக்கிடக்கிறது.
நிதி மூலதனச் சகாப்தத்தில் ஒருபிற்போக்கான குறிக்கோளை', 'அமைதியான ஜனநாயகத்தை', 'வெறும் பொருளாதாரக் காரணக் கூறுகளது செயற்பாட்டை’’ ஆதரிப்பதன் மூலம் காவுத்ஸ்கி மார்க்சியத்திலிருந்து முறித்துக் கொண்டுவிட்டார்; ஏனெனில் இக்குறிக்கோள் புறநிலை நோக்கில் நம்மை ஏகபோக முதலாளித்துவத்திடமிருந்து ஏகபோகமில்லாத முதலாளித்துவத்துக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது; இது சீர்திருத்தவாத மோசடியே ஆகும்.
காவுத்ஸ்கியின் வாதத்துக்கு வேறு எந்த அர்த்தமும் இருக்க முடியாது; இந்தஅர்த்தம்' அர்த்தமற்றதாகும். தடையில்லாப் போட்டி, எந்த விதமான ஏகபோகமும் இன்றி, முதலாளித்துவத்தையும் வாணிபத்தையும் இன்னும் துரிதமாக வளரச் செய்திருக்கலாம் என்பதாய் வைத்துக் கொள்வோம். ஆனல் வாணிபமும் முதலாளித்துவமும் எவ்வளவு துரிதமாக வளர்கின்றனவோ, உற்பத்தியின் ஒன்று குவிப்பும் மூலதன ஒன்று குவிப்பும் அவ்வளவு அதிகரித்து இந்த ஒன்று குவிப்பு ஏகபோகத்தைத் தோற்றுவிக்கிறது. ஏகபோகங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன-தடையில்லாப் போட்டியிலிருந்தே தான் எழுந்துள்ளன! ஏகபோகங்கள் இப்பொழுது முன்னேற்றத்துக்குத் தடை போட ஆரம்பித்திருப்பினும், தடையில்லாப் போட்டிக்கு இது ஆதரவான வாதமாகிவிடவில்லை. ஏனெனில், தடையில்லாப் போட்டியானது ஏகபோகத்தைத் தோற்றுவித்த பின் இப்போட்டி சாத்தியமற்றதாகியுள்ளது.

காவுத் ஸ்கியின் வாதத்தை எந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தாலும், அதில் பிற்போக்கையும் முதலாளித்துவச் சீர்திருத்தவாதத்தையும் தவிர வேறென்றையும் காண்பதற்கில்லை.
லன் ஸ்பர்க் வேடிக்கையான குட்டிமுதலாளித்துவ நீதிநெறியை வந்தடைகிறார்: கடன்களுடன் இணைக்கப்பட்ட ஏற்றுமதி வாணிபம் எவ்வளவு நிலையற்றதாகவும் ஒழுங்குமுறை இல்லாததாகவும் ஆகிவிடுகிறது, உள்நாட்டுத் தொழில் துறையை 'இயற்கையாகவும், ‘இசைவாகவும்' வளர்ப்பதற்குப் பதிலாக மூலதனத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வது எவ்வளவு கேடானது, கடன்களைத் திரட்டும்போது குருப் கோடிக் கணக்கில் இனம் கைப்பணம் தர வேண்டியிருப்பது எவ்வளவு பெரியசெலவாகிவிடுகிறது' என்றும் இன்ன பலவாறாகவும் கூறுகினர். ஆனல் மேற்கண்ட உண்மைகள் தெளிவாகவே நமக்குக் கூறுகின்றன: ஏற்றுமதியின் வளர்ச்சி நிதி மூலதனத்தின் இந்த ஏமாற்று வித்தைகளுடன்தான் இணைக்கப்பட்டுள்ளது: நிதி மூலதனத்துக்கு முதலாளித்துவ நீதிநெறி குறித்துக் கவலையில்லை, அதன் நாட்டமெல்லாம் ஒன்றுக்கு இரண்டு தரம் காளையிடமிருந்து தோலுரித்து எடுக்கலாம் என்பது தான்-முதலில், கடனிலிருந்து வரும் லாபங்களே அது மூட்டை கட்டுகிறது; பிறகு குருப்பிடமிருந்து பண்டங்கள் வாங்கவோ, எஃகு சிண்டிக்கேட்டிலிருந்து ரயில்வேத் தளவாடங்கள் வாங்கவோ இன்ன பிறவற்றுக்கோ கடனாளி இதே கடன் தொகையை உபயோகிக்கும்போது கிடைக்கும் பிற லாபங்களையும் மூட்டை கட்டுகிறது.
.
ஏகாதிபத்தியத்தைப் பற்றிய காவுத்ஸ்கியின் தத்துவார்த்த விமர்சனத்துக்கும் மார்க்சியத்துக்கும் பொதுவானது ஏதும் இல்லை. சந்தர்ப்பவாதிகளுடனும் சமூக-தேசிய வெறியர்களுடனும் சமாதானமும் ஒற்றுமையும் காண்பதற்கான பிரசாரத்துக்குப் பீடிகையாவதற்கே இவ்விமர்சனம் ஏற்றது; ஏனென்றால் இது ஏகாதிபத்தியத்தினுடைய மிகவும் ஆழமான, அடிப்படையான முரண்பாடுகளை தட்டிக் கழிக்கிறது, மூடி மறைக்கிறது: ஏகபோகத்துக்கும் அதன் கூடவே இருந்துவரும் தடையில்லாப் போட்டிக்கும் இடையிலுள்ள முரண்பாடு; நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட "செயற்பாடு களுக்கும் (பிரம்மாண்ட லாபங்களுக்கும்) தடையில்லாச் சந்தையிலான 'நேர்மையான’ வாணிபத்துக்கும் இடையிலான முரண்பாடு; ஒரு பக்கம் கார்ட்டல்களும், டிரஸ்டுளுமானவற்றுக்கும் மறு பக்கம் கார்ட்டல் மயமாகாத தொழிலுக்கும் இடையிலான முரண்பாடு முதலானவை.

காவுத்ஸ்கியால் புனையப்பட்ட "அதீத-ஏகாதிபத்தியம் என்ற அபகீர்த்தி வாய்ந்த தத்துவமும் இதே போல் பிற்போக்கனதுதான்.
...
ஏகாதிபத்தியத்தின் மிகவும் ஆழமான முரண்பாடுகளைக் காவுத்ஸ்கி மூடி மறைப்பதானது, தவிர்க்க முடியாதபடி ஏகாதிபத்தியத்தைப் பளிச்சிடும் வண்ணங்களில் தீட்டுவதாய் முடிவுறும் இது, ஏகாதிபத்தியத்தின் அரசியல் இயல்புகளைப் பற்றிய இந்த எழுத்தாளரின் விமர்சனத்திலும் தனது சுவடுகளைப் பதித்துச் செல்கிறது. ஏகாதிபத்தியமானது சுதந்திரத்துக்கான முயற்சியை அல்ல, ஆதிக்கத்துக்கான முயற்சியையே எங்கும் புகுத்திடும் நிதி மூலதனத்துக்கும் ஏகபோகங்களுக்கும் உரித்தான சகாப்தமாகும். அரசியல் அமைப்பு எதுவாய் இருப்பினும் இந்தப் போக்குகளால் ஏற்படும் விளைவு எங்கும் பிற்போக்கும், இத்துறையில் பகைமைகள் மிதமிஞ்சிக் கடுமையாவதும்தான். தேசிய ஒடுக்குமுறையும் பிரதேசக் கைப்பற்றல்களுக்கான முயற்சியும், அதாவது தேச சுதந்திரத்தை மிதிப்பதும் (ஏனெனில் பிரதேசக் கைப் பற்றலானது தேசங்களின் சுய நிர்ணய உரிமையை நசுக்குவதே ஆகும்) குறிப்பிடத்தக்கவாறு தீவிரமடைகின்றன.
ஏகாதிபத்தியத்தைப் பற்றிய காவுத்ஸ்கியின் தத்துவார்த்தப் பகுத்தாய்வும், ஏகாதிபத்தியத்தைப் பற்றிய அவருடைய பொருளாதார, அரசியல் விமர்சனமும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை முரண்பாடுகளை மூடிமறைத்து மெருகிடுவதும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்துடனான ஒற்றுமையை, தகர்ந்துவரும் இந்த ஒற்றுமையைப் பழுதின்றி எப்படியேனும் பாதுகாப்பது மாகிய, மார்க்சியத்துக்கு சிறிதும் ஒவ்வாத மனப்பாங்கில் முழுக்க முழுக்க ஊறியதாகும்.
(ஏகாதிபத்தயம்- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்)



No comments:

Post a Comment