Monday 27 November 2017

முதலாளித்துவக் கூட்டுகிடையே உலகம் பங்கிடப்படுதல் - லெனின்

“முதலாளித்துவ ஏகபோகக் கூட்டுகளும் கார்ட்டல்களும் சிண்டிக்கேட்டுகளும், டிரஸ்டுகளும் முதலில் உள்நாட்டுச் சந்தையைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டு தமது நாட்டின் தொழில் துறையை அனேகமாய் முழு அளவுக்குக் கைப்பற்றிக் கொள்கின்றன. ஆனால் முதலாளித்துவத்தில் உள் நாட்டுச் சந்தை தவிர்க்க முடியாதவாறு வெளிநாட்டுச் சந்தையுடன் பிணைந்திருக்கிறது. நெடுங் காலத்துக்கு முன்பே முதலாளித்துவம் உலகச் சந்தையைத் தோற்றுவித்துவிட்டது. மூலதன ஏற்றுமதி பெருகியதையும், மிகப் பெரிய ஏக போகக் கூட்டுகளின் அந்நியத் தொடர்புகளும் காலனித் தொடர்புகளும் "செல்வாக்கு மண்டலங்களும்'' எல்லா வழிகளிலும் விரிவடைந்ததையும் தொடர்ந்து இக்கூட்டுகளுக் கிடையில் சர்வதேச உடன்பாடு ஏற்படுவதற்கும், சர்வ தேசக் கார்ட்டல்கள் அமைக்கப்படுவதற்கும் விவகாரங்கள் ''இயற்கையாக''  இட்டுச் சென்றன.

மூலதனத்திலும் உற்பத்தியிலும் உலக அளவிலான ஒன்றுகுவிப்பில் இது ஒரு புதிய கட்டமாகும், முந்திய கட்டங்களைக் காட்டிலும் ஒப்புயர்வல்லாதபடி மிகவும் உயர்ந்த கட்டமாகும்.
…..
உண்மையில் ஒரே அமைப்பாய் உலக முழுவதும் பரந்தமைந்து, பல நூறு கோடி மூலதனத்தைத் தன் பிடியில் கொண்டு, உலகின் ஒவ்வொரு முடுக்கிலும் தனது ''கிளை களையும்'' ஏஜென்ஸிகளையும் பிரதிநிதிகளையும் தொடர்புகளையும் இன்ன பிறவற்றையும் பெற்றுள்ள இந்த டிரஸ்டுடன் போட்டியிடுவது எவ்வளவு கடினமென்பது கூறாமலே விளங்கும். ஆனால் சக்திமிக்க இரு டிரஸ்டுகளுக்கிடையே உலகம் பங்கிடப்பட்டுக் கொள்ளப்பட்டதானது, ஏற்றத் தாழ்வான வளர்ச்சியாலும் யுத்தத்தாலும் போண்டியாவதாலும் பிற காரணங்களாலும் சக்திகளின் உறவு நிலையில் மாற்றம் ஏற்படுமாயின் மறுபங்கீட்டினைத் தவிர்த்துவிடவில்லை.
……
சர்வதேசக் கார்ட்டல்கள் மூலதனம் சர்வதேச மயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகும் ஆதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் (முன்பு, உதாரணமாக 1909 ல், தாம் அனுசரித்து வந்த மார்க்சிய நிலையை அடியோடு விட்டொழித்து விட்ட கார்ல் காவுத்ஸ்கியும் இப்போது இந்த எழுத்தாளர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்).

தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் இது குதர்க்கவாதமும் (Sophistry), படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும். முதலாளித்துவ ஏகபோகங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்பதையும், பல்வேறு முதலாளித்துவக் கூட்டுகளுக்கிடையே நடைபெறும் போராட்டத்தின் நோக்கம் என்ன என்பதையும் சர்வதேசக் கார்ட்டல்கள் காண்பிக்கின்றன. கடைசியாகக் கூறப்பட்ட நிலைமைதான் மிகவும் முக்கியமானது; இது மட்டும்தான் தற்போது நடைபெறுவதன் வரலாற்று-பொருளாதார அர்த்தத்தை நமக்குக் காண்பிக்கிறது; ஏனெனில் மாறுகிறவையும் ஒப்பளவில் பிரத்தியேகமானவையும் தாற்காலிகமானவையும் ஆகிய காரணங்களுக்கு ஏற்ப, போராட்டத்தின் வடிவங்கள் மாற்றமடையக்கூடும், இடையருது மாற்றமடையவும் செய்கின்றன, ஆனால் போராட்டத்தின் சாராம்சம், அதன் வர்க்க உள்ளடக்கம், வர்க்கங்கள் இருந்து வரும் வரை நிச்சயம் மாற்றமடைய முடியாது.
,,,
உலகை அவர்கள் ''மூலதனத்தின் விகிதத் தில்'' , ''வலிமையின் விகிதத்தில்'' பங்கிட்டுக் கொள்கிறார்கள், ஏனெனில் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியிலும் முதலாளித்துவத்திலும் வேறு எந்தப் பங்கீட்டு முறையும் இருக்க முடியாது. ஆனால் வலிமையானது பொருளாதார, அரசியல் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றமடைகிறது; என்ன நடை பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, வலிமையில் ஏற்படும் மாற்றங்களால் தீர்க்கப்படும் பிரச்சினைகள் எவை என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்த மாற் றங்கள் "தூய்மையான'' பொருளாதாரத் தன்மையானதா, அல்லது பொருளாதாரமல்லாத பிறிதொரு தன்மையானதா (உதாரணமாக இராணுவத் தன்மையனவா) என்ற கேள்வி இரண்டாந்தரமான ஒன்று; முதலாளித்துவத்தின் மிக அண்மையதான இந்தச் சகாப்தத்தைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களைக் கிஞ்சித்தும் பாதிக்க முடியாத ஒரு கேள்வி இது. முதலாளித்துவக் கூட்டுகளிடையிலான போராட்டம், உடன்பாடுகள் ஆகியவற்றின் சாராம்சத்தைப் பற்றிய பிரச்சினைக்குப் பதிலாக, இவற்றின் வடிவத்தை (இன்று சமாதான மானதும், நாளைக்குப் போர் வழிப்பட்டதும், நாளை மறுநாள் மீண்டும் போர் வழிப்பட்டதுமான இந்த வடிவத்தைப்) பற்றிய பிரச்சினையை எடுப்பது குதர்க்கவாதியின் நிலைக்கு இழிவுற்றுவிடுவதே ஆகும்.

முதலாளித்துவத்தின் மிகவும் அண்மைய கட்டத்துக்குரிய இந்தச் சகாப்தம் நமக்குத் தெளிவுபடுத்துவது என்ன வெனில்: உலகின் பொருளாதாரப் பங்கீட்டின் அடிப்படையில் முதலாளித்துவக் கூட்டுகளிடையே குறிப்பிட்ட சில உறவுகள் வளருகின்றன; அதேபோது இதற்கு இணைவாகவும் இதனுடன் தொடர்பு கொண்டும் உலகின் பிரதேசப் பங்கீட்டின் அடிப்படையில், காலனிகளுக்கான போராட்டத்தின், ' ‘செல்வாக்கு மண்டலங்களுக்கான போராட்டத்தின்'' அடிப்படையில் அரசியல் கூட்டணிகளுக்கு இடையில், அரசுகளுக்கு இடையில் குறிப்பிட்ட சில உறவுகள் வளருகின்றன என்பதுதான்.

(ஏகாதிபத்தயம்- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்)

No comments:

Post a Comment