Sunday 16 December 2018

மார்க்சிய பொருள்முதல்வாதத்திற்கு முன்பான பொருள்முதல்வாதம் குறித்து எங்கெல்ஸ்:-


“சென்ற நூற்றாண்டின் [18-ஆம் நூற்றாண்டின்] பொருள்முதல்வாதம் பெருமளவுக்கு எந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லா இயற்கை விஞ்ஞானங்களுள் எந்திரவியல் (Mechanics) மட்டுமே, சொல்லப் போனால் வான்மண்டல, பூமண்டல சடப்பொருள்களின் எந்திரவியல் மட்டுமே, சுருங்கச் சொன்னால், ஈர்ப்புச் சக்தியின் (gravity) எந்திரவியல் மட்டுமே, ஏதோவொரு திட்டவட்டமான முடிவுக்கு வந்திருந்தது. அக்காலத்திய இரசாயனவியல் அதன் குழந்தைப் பருவத்தில், ஃபுளோஜிஸ்தான் (phlogistic) வடிவத்தில் மட்டுமே இருந்தது. [பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இரசாயனவியலில் நிலவிவந்த ஃபுளோஜிஸ்தான் கோட்பாடு. சில பொருள்களில் ஃபுளோஜிஸ்தான் என்னும் ஒரு பொருள் இருப்பதாலேயே அவை எரிகின்றன என்று கூறியது]. உயிரியல் இன்னும் தாலாட்டுப் பருவத்தில் இருந்தது. தாவர வகைகளும் விலங்கு உயிரினங்களும் மேலெழுந்த வாரியாக மட்டுமே ஆராயப்பட்டிருந்தன. அவை முற்றிலும் எந்திரவியல் காரணங்களாலேயே விளக்கப்பட்டன.

டெக்கார்ட்டேவுக்கு விலங்கு ஓர் எந்திரம்; அதைப்போலவே பதினெட்டாம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதிகளுக்கு மனிதன் ஓர் எந்திரம். இரசாயனவியல் மற்றும் அங்கக இயற்கையின் (organic nature) நிகழ்வுப்போக்குகளுக்கு எந்திரவியலின் விதிகளும் பொருந்துவனவே என்றாலும், அவ்விதிகள் மேலும் உயர்நிலையான இதர விதிகளால் பின்னணிக்குத் தள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொள்ளாமல் அத்தகைய வளர்ச்சிப் போக்குகளுக்கு எந்திரவியலின் அளவுகோல்களை மட்டுமே பொருத்திப் பார்த்தது, பாரம்பரிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் குறிப்பான முதலாவது குறைபாடாகும். அந்தக் காலகட்டத்தில் இது தவிர்க்க முடியாத குறைபாடே.

இந்தப் பொருள்முதல்வாதத்தின் குறிப்பான இரண்டாவது குறைபாடு, பிரபஞ்சத்தை ஒரு நிகழ்வுப்போக்காகவும் இடையறாத, வரலாற்று ரீதியான, வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் பருப்பொருளாகவும் புரிந்துகொள்ள முடியாத அதன் இயலாமை ஆகும். இது அக்கால கட்டத்திய இயற்கை விஞ்ஞானத்தின் தரத்துக்கும், அதனோடு தொடர்புடைய இயக்க மறுப்பியலுக்கும் அதாவது இயக்கவியலுக்கு எதிரான தத்துவப்படுத்தலுக்கும் ஏற்றவாறே இருந்தது எனலாம். இயற்கையானது நிரந்தரமான இயக்கத்தில் இருக்கிறது என்ற அளவுக்கு அறியப்பட்டிருந்தது. ஆனால் அக்காலத்தில் நிலவிய கருத்துகளின் அடிப்படையில், இந்த இயக்கமும்கூட நிரந்தரமாகவே ஒரு வட்டத்தில் சுற்றி வந்தது. ஆகவே, அந்த இடத்தைவிட்டு ஒருபோதும் நகரவில்லை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விளைவுகளையே உருவாக்கியது. அந்தக் காலகட்டத்தில் இத்தகைய கருத்துரு தவிர்க்க முடியாதது.

சூரிய மண்டலத்தின் தோற்றத்தைப் பற்றிய கான்ட்டின் தத்துவம் அண்மைக் காலத்தில்தான் முன்வைக்கப்பட்டிருந்தது. [சுழலும் பிரகாசமான முகிற்படலத் திரளிலிருந்து சூரியனும் கிரகங்களும் தோன்றின எனக் கூறும் தத்துவம்]. ஆனால் அது இன்னமும் வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயமாகவே கருதப்பட்டது. பூமியின் வளர்ச்சி குறித்த வரலாறு, புவியியல் இவைபற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. எளிமையானதிலிருந்து சிக்கலானதுக்கு மாறிய வளர்ச்சிப்போக்கின் ஒரு நீண்ட தொடர்வரிசையின் விளைவுதான் இன்றைய இயற்கை உயிரினங்கள் என்னும் கருத்துருவை அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞான ரீதியாக அறவே முன்வைக்க முடியவில்லை. எனவே இயற்கையைப் பற்றிய வரலாற்றுப் புறம்பான ஒரு கண்ணோட்டம் தவிர்க்க முடியாதது. இதனடிப்படையில் நாம் பதினெட்டாம் நூற்றாண்டுத் தத்துவவாதிகளைக் குறை கூற அதிகமான காரணமில்லை. ஏனெனில், இதே குறை ஹெகலிடமும் காணப்படுகிறது.

ஹெகலின் கருத்துப்படி, இயற்கையானது, வெறுமனே கருத்தின் ”அந்நியம்” (alienation of idea) ஆகும்.எனவே அது. காலத்தோடு இயைந்து வளர்ச்சிபெற இயலாதது. அது தன்னுள் அடங்கியிருக்கும் அனைத்து வளர்ச்சிக் கட்டங்களையும் ஒரே சமயத்திலும், ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றொன்றையும் வெளிக்காட்டும்படியாக, அதன் பன்முகத் தன்மையை விண்வெளியில் விரித்துப் பரப்ப மட்டுமே திறன் கொண்டது; திரும்பத் திரும்ப அதே நிகழ்வுப் போக்குகளை நிரந்தரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளது என்று ஹெகல் கருதுகிறார். அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படை நிபந்தனையான காலப் பரப்புக்கு வெளியே, விண்வெளியில் வளர்ச்சி என்னும் அபத்தத்தை ஹெகல் இயற்கையின் மீது சுமத்துகிறார்.

புவியியல், கருவியல், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலியல், அங்கக இரசாயனவியல் ஆகியவை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அதே காலத்தில், பின்னர் தோன்றிய பரிணாமத் தத்துவத்தின் ஒளிமயமான முன்னறிகுறிகள் இந்தப் புதிய விஞ்ஞானங்களின் அடிப்படையில் எங்கெங்கும் தோன்றிக் கொண்டிருந்தபோது (எடுத்துக்காட்டாக, கோதே மற்றும் லாமார்க் ஆகியோர்) ஹெகல் இவ்வாறு செய்கிறார். ஆனால் ஹெகலின் அமைப்புமுறைக்கு அது தேவையாயிருந்தது. எனவே அமைப்புமுறையின் பொருட்டு, வழிமுறை தனக்குத் தானே பொய்யாக மாற வேண்டியிருந்தது.

வரலாற்றுக்குப் புறம்பான இதே கருத்துரு வரலாற்றுத் துறையிலும் நிலவியது. இங்கே மத்திய காலங்களின் மிச்ச மீதங்களுக்கு எதிரான போராட்டம் பார்வையை மறைத்தது. மத்திய காலங்கள் என்கிற வரலாற்றுக் கட்டம் ஆயிரம் ஆண்டுகால உலகளாவிய காட்டுமிராண்டித்தன வரலாற்றில் ஏற்பட்ட ஒரு குறுக்கீடாகவே கருதப்பட்டது. மத்திய காலங்களில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றம் – ஐரோப்பியக் கலாசாரப் பரப்பின் விரிவாக்கம், அங்கே அக்கம் பக்கமாக உருவெடுத்த நிலைபெறத் தக்க மாபெரும் நாடுகள், இறுதியாக, பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரும் தொழில்நுட்ப முன்னேற்றம் – இவையனைத்தும் பார்க்கப்படவில்லை. இவ்வாறாக, மாபெரும் வரலாற்று இடைத்தொடர்புகளைப் பற்றிப் பகுத்தறிவு பூர்வமான ஆழமான பார்வை இயலாமற் போனது. வரலாறு என்பது அதிகமாகப் போனால் தத்துவவாதிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான எடுத்துக்காட்டுகள், விளக்கப்படங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகவே விளங்கியது.

ஜெர்மனியில் 1850-களில் பொருள்முதல்வாதத்தில் பரிசோதனை நிகழ்த்திக் கொண்டிருந்த, கொச்சைப்படுத்தும் சில்லரைப் பிரச்சாரகர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் இக்குறைபாட்டிலிருந்து எவ்வகையிலும் மீளவே இல்லை. இதற்கிடையில் ஏற்பட்ட, இயற்கை விஞ்ஞானத்தின் அனைத்து முன்னேற்றங்களும் உலகத்தைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எதிரான புதிய சான்றுகளாக மட்டுமே அவர்களுக்கு உதவின. உண்மையில், அவர்களின் தத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்கும் பணியில் அவர்கள் சிறிதும் ஈடுபடவில்லை.

கருத்துமுதல்வாதம் தனது கடைசிக் கட்டத்தில் இருந்த போதிலும், 1848 புரட்சி அதற்கு மரண அடி கொடுத்திருந்த போதிலும், அந்தத் தருணத்தில் பொருள்முதல்வாதம் இன்னும் கீழே வீழ்ந்துவிட்டதைக் காணும் திருப்தி அதற்குக் கிடைத்தது. ஃபாயர்பாக் இத்தகைய பொருள்முதல் வாதத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள மறுத்தது கேள்விக்கிடமின்றி மிகச் சரியே. ஆனால் இந்த ஊர்சுற்றிப் போதகர்களின் கோட்பாடுகளைப் பொதுவான பொருள்முதல்வாதத்துடன் போட்டுக் குழப்பியிருக்கக் கூடாது.

எனினும் இங்கே இரண்டு விஷயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும். முதலாவதாக, ஃபாயர்பாக்கின் வாழ்நாளின்போதே இயற்கை விஞ்ஞானம், தீவிரமாக நொதித்துப் பொங்கும் நிகழ்வுப் போக்கில்தான் இன்னும் இருந்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளில்தான் அது தெளிவுகொடுக்கும் ஒரு சார்புநிலை முடிவை எட்டியுள்ளது. இதுகாறும் கேள்விப்பட்டிராத அளவுக்குப் புதிய விஞ்ஞான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு இடையேயான உறவுநிலைகளை நிலைநாட்டுவதும், அதன்மூலமாக, ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கமாய்த் தொடர்ந்துவந்த கண்டுபிடிப்புகளின் குழப்பத்துக்கு நடுவே ஒழுங்கை ஏற்படுத்துவதும் மிகவும் அண்மைக் காலத்தில்தான் சாத்தியமாகியுள்ளது.

தீர்மானகரமான கண்டுபிடிப்புகளுள், உயிரணு, ஆற்றலின் உருமாற்றம், டார்வினுடைய பெயர் சூட்டப்பட்ட பரிணாமத் தத்துவம் ஆகிய மூன்று கண்டுபிடிப்புகளையும் காண்கின்ற வரை ஃபாயர்பாக் உயிரோடிருந்தார் என்பது உண்மையே. ஆனால், அந்தக் காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞானிகளே இன்னும் கேள்விக்குள்ளாக்கிய அல்லது போதிய அளவுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்திராத கண்டுபிடிப்புகளை, அவற்றின் முழு மதிப்பையும் அறிந்து பாராட்டும் வகையில், கிராமப்புறத் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தன்னந்தனியான தத்துவவாதியால், விஞ்ஞான முன்னேற்றங்களைப் போதிய அளவுக்கு எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இதற்கு, ஜெர்மனியில் நிலவிய படுகேவலமான நிலைமைகளை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும். அவற்றின் விளைவாக, மணலில் கயிறு திரிக்கும், கதம்பவாதக் கொசுவேட்டைக்காரர்கள் தத்துவவியல் துறையின் தலைமைப் பதவிகளைக் கைப்பற்றியிருக்க, அவர்கள் அனைவருக்கும் மேலான சிறப்புக் கொண்ட ஃபாயர்பாக், ஒரு சிறு கிராமத்தில் மனம் துருப்பிடித்துப் புழுங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. எனவே இப்பொழுது சாத்தியமாகிவிட்டதும், பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் ஒருதலைச் சார்பானவை அனைத்தையும் அகற்றியதுமான, இயற்கையைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்துரு (historical conception of nature) ஃபாயர்பாக்குக்குக் கைவரப் பெறாமலே போனதற்கு அவரைக் குற்றம் சொல்ல முடியாது.

இரண்டாவதாக, இயற்கை–விஞ்ஞானப் பொருள்முதல்வாதம் (natural-scientific materialism) உண்மையில் “மானுட அறிவு என்ற மாளிகையின் அடித்தளம், ஆனால் அதுவே மாளிகை ஆகிவிடாது” என்று ஃபாயர்பாக் மிகச் சரியாகவே வலியுறுத்தினார். ஏனெனில், நாம் இயற்கையில் மட்டுமின்றி, மனித சமுதாயத்திலும் வாழ்கிறோம். இயற்கைக்குச் சற்றும் குறையாத அளவிலே, மனித சமுதாயமும் தனக்கென வளர்ச்சியின் வரலாற்றையும் தனக்கான விஞ்ஞானத்தையும் கொண்டிருக்கிறது. ஆகவே, சமுதாயம் பற்றிய விஞ்ஞானத்தை அதாவது, வரலாற்றியல், தத்துவவியல் விஞ்ஞானங்கள் என்று சொல்லப்படுவனவற்றின் மொத்தத் தொகையைப் பொருள்முதல்வாத அடித்தளத்துடன் இசைவுபடுத்துவதையும், இந்த அடித்தளத்துக்கு ஏற்ப அவற்றை மறுநிர்மாணம் செய்வதையும் பற்றிய பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் இதை நிறைவேற்றும் பேறு ஃபாயர்பாக்குக்குக் கிட்டவில்லை. அந்த “அடித்தளம்” இருந்தும்கூட, அவர் மரபுவழிப்பட்ட கருத்துமுதல்வாதத் தளைகளினால் கட்டுண்டு கிடந்தார். இந்த உண்மையை அவரே பின்வரும் சொற்களில் ஒத்துக் கொள்கிறார்: “பின்னோக்கில் நான் பொருள்முதல்வாதிகளோடு உடன்படுகிறேன். ஆனால் முன்னோக்கியல்ல”. ஆனால் இங்கே, சமுதாயத் துறையில் “முன்னோக்கிச்” செல்லாததும், 1840 அல்லது 1844-ஆம் ஆண்டின் தன்னுடைய கருத்துநிலைக்கு அப்பால் போகாததும் ஃபாயர்பாக்குதான். இதற்கும் அவருடைய தனித்தொதுங்கிய வாழ்க்கையே தலையாய காரணம்.

எல்லாத் தத்துவவாதிகளையும்விட அவர்தான் சமுதாயத்தில் ஒன்றுகலந்து உறவாடுவதில் மேலான விருப்பம் கொண்டிருந்தார். ஆனாலும், தன்னையொத்த தகுதியுடைய பிறருடன் சுமூகமான மற்றும் எதிரான வாதப் பிரதிவாதங்களின் மூலமாகச் சிந்தனைகளை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாகத் தன் ஒற்றைத் தலையிலிருந்தே சிந்தனைகளை உற்பத்தி செய்யும் நிலைக்கு, அவரது தனித்தொதுங்கிய வாழ்க்கை அவரைக் கட்டாயப்படுத்தியது. இந்தத் துறையில் அவர் எந்த அளவுக்குக் கருத்துமுதல்வாதியாகவே இருந்துவிட்டார் என்பதை நாம் பின்னர் விரிவாகக் காண்போம்.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)



No comments:

Post a Comment