Sunday 16 December 2018

வர்க்கங்கள் எப்படித் தோன்றின? -எங்கெல்ஸ்


“வர்க்கங்கள் எப்படித் தோன்றின? முன்னாளில் நிலப்பிரபுத்துவ முறையில் அமைந்த மாபெரும் நிலச் சொத்துடைமையின் தோற்றத்துக்கு – குறைந்த பட்சம் முதல் நிகழ்வில் – அரசியல் காரணங்கள், பலவந்தமாகக் கைவசப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றின் மீது பழிபோடுவது முதல் பார்வையில் இப்போதும் சாத்தியமே என்றாலும், முதலாளி வர்க்கம், பட்டாளி வர்க்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை இத்தகைய காரணங்களைக் கற்பிக்க முடியாது. இங்கே இவ்விரண்டு மாபெரும் வர்க்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும், தெளிவாகவும், வெளிப்படையாகவும், முற்றிலும் பொருளாதார வகைப்பட்ட காரணங்களிலே உள்ளதைக் காணலாம். முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும், அதைவிடக் குறையாத அளவில் நிலவுடைமை வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும், முதலாவதாகவும் முதன்மையானதாகவும் இருப்பது பொருளாதார நலன்களைப் பற்றிய பிரச்சனையே என்பதும், அந்தப் பொருளாதார நலன்களை மேலும் பெருக்கிக் கொள்ள வெறும் சாதனமாகச் சேவை புரிவதே அரசியல் அதிகாரத்தின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டும் பொருளாதார நிலைமைகளில், இன்னும் சரியாகச் சொன்னால் உற்பத்தி முறையில், மாற்றம் ஏற்பட்டதன் பின்விளைவாகவே உதித்தன. முதலில் கைவினைஞர்களின் கைத்தொழிலிருந்து பட்டறை உற்பத்திக்கும், அதன்பிறகு பட்டறை உற்பத்தியிலிருந்து நீராவி மற்றும் எந்திர ஆற்றலைக் கொண்டு நடக்கிற பெரிய அளவிலான தொழில்துறைக்கும், உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றமே இவ்விரு வர்க்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று. முதலாளி வர்க்கம் இயக்கி விட்ட புதிய உற்பத்தி சக்திகளும் – முதல்நிலையில் உழைப்புப் பிரிவினையும், ஒரே எளிய வேலைக் கூறை செய்துவரும் பல தொழிலாளிகளை ஒரு பொதுவான பட்டறைத் தொழிலில் இணைப்பதும் – இந்த உற்பத்திச் சக்திகளின் மூலம் வளர்க்கப்பட்ட பரிவர்த்தனையின் நிலைமைகளும் தேவைப்பாடுகளும், வரலாற்றினால் வழங்கப்பட்டு, சட்டத்தால் புனிதப்படுத்தப்பட்ட, நடப்பிலிருந்த உற்பத்தி முறையோடு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொருந்தாதனவாய் ஆகிவிட்டன. அதாவது, அவை கைவினைஞர் சங்கத்தின் சிறப்புரிமைகளோடும், நிலப்பிரத்துவ சமூக அமைப்புமுறையின் எண்ணற்ற பிற தனிப்பட்ட மற்றும் உள்ளூர் சிறப்புரிமைகளோடும் (சமூகத்தில் உரிமையற்ற பிரிவினருக்கு இவை அனைத்தும் கைவிலங்குகளாகவே இருந்தன) பொருந்தாதனவாய் ஆகிவிட்டன.

முதலாளி வர்க்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி சக்திகள், நிலப்பிரபுக்களும் கைவினைஞர் சங்க எஜமானர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி முறையை எதிர்த்துக் கலகம் செய்தன. அதன் விளைவு தெரிந்ததே: நிலப்பிரபுத்துவக் கைவிலங்குகள் இங்கிலாந்தில் படிப்படியாகவும் ஃபிரான்சில் ஒரே அடியிலும் உடைத்தெறியப்பட்டன. ஜெர்மனியில் இந்தச் செயலாக்கம் இன்னும் முடிவு பெறவில்லை. ஆனாலும், பட்டறைத் தொழில்முறை அதனுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையோடு மோதிக் கொண்டதைப் போலவே, இப்போது பெரிய அளவிலான தொழில்துறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையோடு ஏற்கெனவே மோதிக் கொண்டிருக்கிறது. இந்த உற்பத்தி முறையாலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் குறுகிய வரம்புகளாலும் கட்டிப் போடப்பட்டுள்ள இந்தப் பெரிய அளவிலான தொழில்துறை, ஒருபுறத்தில் மாபெரும் மக்கள் திரளை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகப் பட்டாளி வர்க்கமயமாக்கலையும்,, மறுபுறத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான விற்றுத் தீர்க்க முடியாத பொருள்களையும் உற்பத்தி செய்கிறது. மிகை உற்பத்தியும் திரளான மக்களின் வறுமையும் ஒன்றுக்கொன்று காரணமாக அமைகின்றன. இந்த அபத்தமான முரண்பாடுதான் பெரும் தொழில்துறையின் விளைவு. உற்பத்தி முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, உற்பத்தி சக்திகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியம் என இம்முரண்பாடு அறைகூவி அழைக்கிறது.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

No comments:

Post a Comment