Sunday 16 December 2018

இயக்கமறுப்பியலைப் பற்றி எங்கெல்ஸ்:-


“”இயக்கமறுப்பியல்” (metaphysical) என்று ஹெகல் அழைக்கின்ற, ஆய்வு மற்றும் சிந்தனை பற்றிய பழைய வழிமுறை, பொருள்களைக் கொடுக்கப்பட்டவாறே மாறாதவையாகவும், நிலையானவையாகவும் கருதி ஆய்வு செய்வதையே விரும்பியது. இந்த வழிமுறையின் மிச்ச மீதங்கள் இன்னமும் மக்கள் மனங்களில் வலுவுடன் குடி கொண்டுள்ளன. இவ்வழிமுறை செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் மிகப்பெரும் வரலாற்று நியாயத்தைக் கொண்டிருந்தது. நிகழ்வுப்போக்குகளைப் பரிசீலிப்பது சாத்தியமாவதற்கு முன்பாக, முதலில் பொருள்களைப் பரிசீலிப்பது அவசியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பொருள் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஒருவர் கவனிக்க முடிவதற்கு முன்பாக, அது எத்தகைய பொருள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டி இருந்தது. மேலும், இயற்கை விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை இந்த வகையைச் சேர்ந்ததே. பொருள்களை முற்றுப்பெற்ற பொருள்களாக ஏற்றுக் கொண்ட பழைய இயக்க மறுப்பியலானது, இறந்துபோன பொருள்களையும், வாழுகின்ற பொருள்களையும் முற்றுப்பெற்ற பொருள்களாகக் கருதி ஆய்வு மேற்கொண்ட ஓர் இயற்கை விஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகும். ஆனால், தீர்மானகரமான அடியை முன்னோக்கி எடுத்துவைப்பது சாத்தியமாகும் அளவுக்கு இந்த ஆய்வு முன்னேற்றம் கண்டபோது, அதாவது இயற்கைக்குள்ளேயே இந்தப் பொருள்கள் அடையும் மாற்றங்களை முறைப்படி ஆய்வு செய்யப் புகுவது சாத்தியமானபோது, தத்துவவியல் துறையிலும்கூட பழைய இயக்க மறுப்பியலுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டது. மேலும், உண்மையாகப் பார்த்தால், கடந்த நூற்றாண்டின் இறுதி வரைக்கும் இயற்கை விஞ்ஞானம் என்பது பெருமளவுக்கு ஒரு திரட்டித் தொகுக்கும் விஞ்ஞானமாக, முற்றுப்பெற்ற பொருள்களைப் பற்றிய விஞ்ஞானமாக இருந்தது.

நம் நூற்றாண்டிலோ அது சாராம்சத்தில் ஒரு முறைப்படுத்தும் விஞ்ஞானமாக, நிகழ்வுப்போக்குகளின் விஞ்ஞானமாக,, பொருள்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விஞ்ஞானமக, இயற்கையின் நிகழ்வுப்போக்குகள் அனைத்தையும் ஒரே மாபெரும் முழுமையாகப் பிணைத்து வைக்கின்ற பரஸ்பரத் தொடர்பு பற்றிய விஞ்ஞானமாக இருக்கிறது. தாவர, விலங்கு உயிரினங்களில் ஏற்படும் நிகழ்வுப் போக்குகளை ஆராய்கின்ற உடலியல், தனித்தனி உயிரினங்கள் மூலக்கரு நிலையிலிருந்து முதிர்ச்சிநிலை வரை அடைகின்ற வளர்ச்சியை ஆய்ந்தறியும் கருவியல், பூமியின் மேற்பரப்பு படிப்படியாக உருப்பெற்றதை ஆராய்கின்ற புவியியல் – இவை அனைத்தும் நம் நூற்றாண்டில் பிறந்தவை ஆகும்.

ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையினுடைய நிகழ்வுப்போக்குகளின் பரஸ்பரத் தொடர்பு பற்றிய நம்முடைய அறிவு எட்டுக்கால் பாய்ச்சலில் விரைந்து முன்னேறுவதற்கு மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன: முதலாவது, உயிரணு (cell) பற்றிய கண்டுபிடிப்பு. பல்கிப் பெருகுவதன் மூலமும், வேறுபடுவதன் மூலமும், மொத்தத் தாவர, விலங்கினங்களின் உடல் வளர்ச்சியடைவதற்கான அடிப்படை அலகு உயிரணு எனக் கண்டறியப்பட்டது. அதனால், எல்லா உயர்நிலை உயிரினங்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஒரே பொதுவான விதிக்கு ஏற்ப நடந்தேறுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, உயிரினங்கள் தமது வகைப்பிரிவை மாற்றிக் கொள்ள முடிவதற்கும், அதன்மூலம் தனித்தனியான வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சி பெறுவதற்குமான வழி உயிரணுவின் மாற்றம் அடைவதற்கான திறனில் அடங்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டாவது, ஆற்றலின் உருமாற்றம். இது நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளதாவது: உயிர்சாரா இயற்கையில் (inorganic nature) முதல்நிலையில் செயல்படுகின்ற, சக்திகள் என்று சொல்லப்படுபவை – எந்திர சக்தியும் ஒடுக்கநிலை ஆற்றல் (potential energy) என்று சொல்லப்படும் அதன் நிரப்புக்கூறும்,, வெப்பம், கதிரியக்கம் (ஒளி அல்லது கதிரியக்க வெப்பம்), மின்சக்தி, காந்த சக்தி, இரசாயன ஆற்றல் – அனைத்தும் முழுதளாவிய இயக்கத்தினுடைய வெளிப்பாட்டின் வெவ்வேறு வடிவங்களே. ஆற்றலின் வடிவங்கள் வரையறுக்கப்பட்ட அளவு விகிதங்களில் ஒன்று மற்றொன்றாக மாறிச் செல்கின்றன. அதனால் குறிப்பிட்ட அளவிலான ஆற்றலின் ஒரு வடிவம் மறைகின்ற இடத்தில், குறிப்பிட்ட அதே அளவிலான ஆற்றலின் மற்றொரு வடிவம் தோன்றுகிறது.

இவ்வாறாக, இயற்கையின் மொத்த இயக்கமுமே ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்ற இடைவிடாத நிகழ்வுப்போக்காகச் சுருங்கி விடுகிறது. கடைசியாக, தொடர்புபடுத்திய வடிவத்தில் டார்வின் (Darwin) முதலில் உருவாக்கிய நிரூபணம். அதன்படி, இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையினுடைய, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் தொகுதியானது, ஆதியில் ஓரணு கொண்ட மிகச்சில நுண்ணுயிரிகளிலிருந்து ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் ஒரு நீண்ட நிகழ்வுப்போக்கின் விளைவாகும். இந்த ஓரணு நுண்ணுயிரிகளும், இரசாயன முறைகளின் மூலம் தோற்றம் கொண்ட புரோட்டோபிளாசம் அல்லது அல்புமினிலிருந்து உருவானவை ஆகும்.

இந்த மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகளினாலும் இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்ட இதர மகத்தான முன்னேற்றங்களினாலும், இயற்கையிலுள்ள நிகழ்வுப்போக்குகளுக்கு இடையே நிலவும் பரஸ்பரத் தொடர்பினைக் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமல்ல, குறிப்பிட்ட இந்தத் துறைகளின் பரஸ்பரத் தொடர்பினையும் முழுமையாக நிரூபித்துக் காட்ட முடிகிற கட்டத்துக்கு நாம் இன்றைக்கு வந்துவிட்டோம். எனவே, பரிசோதனை வழிப்பட்ட இயற்கை விஞ்ஞானமே வழங்கியிருக்கும் உண்மைகளைக் கொண்டு இயற்கையில் நிலவும் பரஸ்பரத் தொடர்பு பற்றிய ஒரு முழுமையான பார்வையை ஓரளவுக்கு முறையான வடிவத்தில் நாம் முன்வைக்க முடிகிறது. இந்த முழுமையான பார்வையை வழங்குவது இயற்கைத் தத்துவவியல் என்று சொல்லப்படுவதன் பணியாக முன்பு இருந்தது. எதார்த்தமான, ஆனால் இதுவரையில் அறிந்திராத பரஸ்பரத் தொடர்புகளுக்குப் பதிலாக, இலட்சிய பூர்வமான, கற்பனையானவற்றை வைப்பதன் மூலமாகவும், விட்டுப்போன விவரங்களுக்குப் பதிலாக மனத்தின் கற்பனை விவரங்களை இட்டு நிரப்பி, உண்மையான இடைவெளிகளை வெறுமனே கற்பனையில் இணைத்து வைப்பதன் மூலமாகவும் மட்டுமே இயற்கைத் தத்துவவியல் இந்தப் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்தச் செயல்முறையின்போது அது பல மேதைமையான கருத்துகளுக்கு வித்திட்டது.

      பிற்காலத்தில் ஏற்பட்ட பல கண்டுபிடிப்புகளை முன்னறிந்து கூறியது. ஆனால், கணிசமான அளவுக்கு முட்டாள்தனத்தையும் அது உருவாக்கியது. சொல்லப் போனால் அது வேறுவிதமாக இருந்திருக்கவும் முடியாது. இன்றைக்கு, நம் காலத்துக்குப் போதுமான “இயற்கையின் அமைப்புமுறை” ஒன்றைக் கண்டடையும் பொருட்டு, இயற்கை வழிப்பட்ட விஞ்ஞான ஆய்வின் விளைவுகளை இயக்கவியல் அடிப்படையில், அதாவது அவ்விளைவுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பின் அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்த பரஸ்பரத் தொடர்பின் இயக்கவியல் தன்மை, இயக்கமறுப்பியல் முறையிலே பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை விஞ்ஞானிகளுடைய மனங்களின் உள்ளேகூட, அவர்களுடைய சித்தத்தையும் மீறி தன்னை வலுவுடன் புகுத்திக் கொண்டு வருகிறது. இத்தகைய தருணத்தில் இன்றைக்கு இயற்கைத் தத்துவவியல் முடிவாக கழித்துக் கட்டப்பட்டுவிட்டது. அதற்குப் புத்துயிர் கொடுக்கச் செய்யப்படுகின்ற ஒவ்வொரு முயற்சியும் தேவையற்றது மட்டுமல்லாமல் ஓரடி பின்னோக்கியதாகவும் இருக்கும்.

சமூகம்

ஆனால் இயற்கைக்கு உண்மையாக இருப்பது – வளர்ச்சியின் வரலாற்று ரீதியான நிகழ்வுப்போக்காகவும் இங்கே ஒப்புக் கொள்ளப்பட்டதானது – அதுபோலவே, சமுதாயத்தின் வரலாற்றில் அதன் அனைத்துப் பிரிவுகளுக்கும், மானுட (மற்றும் தெய்வீக) விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைத்து விஞ்ஞானங்களின் ஒட்டுமொத்தத்துக்கும் உண்மையானதாகும். இங்கேயும்கூட வரலாறு, சட்டம், மதம் மற்றும் பிறவற்றின் தத்துவம், நிகழ்வுகளில் நிரூபித்துக் காட்டப்பட வேண்டிய எதார்த்தமான பரஸ்பரத் தொடர்புக்குப் பதிலாகத் தத்துவவாதியின் மனதில் இட்டுக் கட்டப்பட்ட ஒரு பரஸ்பரத் தொடர்பினைக் கொண்டதாக இருந்தது. வரலாற்றை ஒரு முழுமையாகவும் அதன் தனித்தனிப் பகுதிகளிலும் புரிந்து கொள்வது என்பது, கருத்துக்களை – இயல்பாகவே அந்தந்தத் தத்துவவாதிக்குப் பிரியமான கருத்துக்களை – படிப்படியாக நடைமுறை ஆக்குவது எனக் கருதிக் கொண்டது.

இக்கருத்தின்படி, வரலாறு என்பது, முன்னரே வரையறுக்கப்பட்ட ஓர் இலட்சியக் குறிக்கோளை நோக்கி – எடுத்துக்காட்டாக, ஹெகலைப் பொறுத்தவரை அவருடைய தனிமுதலான கருத்தின் நடைமுறையாக்கத்தை (realisation of absolute idea) நோக்கி – தன்னையறியாமல் ஆனால் அவசியத்தின் பொருட்டு இயங்குகிறது. மேலும், இந்தத் தனிமுதலான கருத்தை நோக்கிச் செல்கின்ற மாற்றப்பட முடியாத போக்கே வரலாற்று நிகழ்வுகளில் உள்ளார்ந்த பரஸ்பரத் தொடர்பாக அமைந்திருந்தது. இவ்வாறாக, எதார்த்தமான, இதுவரை அறியப்படாத பரஸ்பரத் தொடர்பின் இடத்தில், உணர்வற்ற அல்லது படிப்படியாக உணர்வு பெற்று வருகிற, ஒரு புதிய மர்மமான பரம்பொருள் வைக்கப்பட்டது. ஆகவே இயற்கைத் துறையில் செய்தது போலவே, இங்கும் எதார்த்தமான பரஸ்பரத் தொடர்புகளைக் கண்டறிவதன் மூலமாக இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட, செயற்கையான பரஸ்பரத் தொடர்புகளை ஒழித்துக்கட்டுவது அவசியமாயிற்று. முடிவாகப் பார்க்கும்போது, இந்தப் பணியானது, மனித சமுதாயத்தின் வரலாற்றில் ஆட்சி புரியும் விதிகளாகத் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் பொதுவான இயக்க விதிகளைக் கண்டுபிடிப்பது என்றாகிறது.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


No comments:

Post a Comment