Monday 10 December 2018

இனம் பற்றிய கேள்வி வர்க்கம் பற்றிய கேள்வியே! - மாசேதுங்

(The Racial Question Is A Class Question)

ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த விருந்தினர்களை இன்று (1963 ஆகஸ்டு 8) தலைவர் மாவோ வரவேற்றார். இவர்களை வரவேற்றுப் பேசிய மாவோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இனவெறிப் பாகுபாட்டிற்கு எதிராக ஒன்றிணைந்து திரண்டு எழுமாறும், வெட்கப்படத்தக்க இந்த இனவெறிக்கு எதிரான அமெரிக்க நீக்ரோ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் உலகமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

ஆப்பிரிக்க விருந்தினர்களுடனான சந்திப்பு மிகவும் இணக்கமாகவும் நட்புணர்வு அடிப்படையிலும் அமைந்தது. இந்தச் சந்திப் பின்போது, அமெரிக்க ஏகாதிபத்தியமும் தென்ஆப்பிரிக்க காலனிய வாத ஆட்சியாளர்களும் இவர்களைப் போன்ற ஆக்கிரமிப்பாளர் களும் கடைப்பிடிக்கின்ற இனவெறி அடக்குமுறைகளை மாவோ கண்டித்தார். ''இனவெறிப் பாகுபாடு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் கூடவே உலகின் பல நாடுகளிலும் கடைப் பிடிக்கப்படு கின்றது. இனம் குறித்த கேள்வி, உண்மையில் அதன் உள்ளடக்கத்தில் வர்க்கம் குறித்த கேள்வியே. நமது ஒற்றுமை என்பது இன அடிப் படையிலான ஒற்றுமை அல்ல; தோழர்களிடையே நண்பர்களிடையே நிலவக்கூடிய ஒற்றுமைதான் நம்மிடையே இருக்கும் ஒற்றுமை. நமது ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவோம்; ஏகாதிபத்தியத் துக்கும் காலனியவாதிகளுக்கும் அவர்களது எடுபிடிகளுக்கும் எதிராக நமது பொதுவான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம், முழுமையான நிறைவான தேசிய விடுதலையையும் சுதந்திரத்தையும் நாம் அடைவோம்'' என்று தோழர் மாவோ அறைகூவல் விடுத்தார்.

சீனப் புரட்சி எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்பதை விளக்கிய மாவோ பின்வருமாறு கூறினார்: "மக்களால் நடத்தப்படும் புரட்சி வெற்றி பெறும் என்பதையும், ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடிகளையும் புறமுதுகிடச் செய்ய முடியும் என்பதை யும்தான் சீனப்புரட்சி மெய்ப்பிக்கின்றது. ஆப்பிரிக்கா முழுமையும் ஓர் அலை வீசுகின்றது - ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, காலனிய வாதத்துக்கு எதிரான அலைதான் அது . உலக நாடுகளில் பல இன்னும் கூட விடுதலைப் பெறாமல் அடிமைப்பட்ட தேசங்களாக வும் கிடக்கின்றன. இன்றில்லாவிட்டாலும் நிச்சயம் நாளை ஒரு நாள் இந்த நாடுகள் முழுமையாக விடுதலைப்பெறும், சுதந்திரத்தை சுவாசிக்கும்; ஆப்பிரிக்க மக்களுக்கு சீனமக்களின் அனைவரின் உறுதியான ஆதரவு உண்டு. விடிகின்ற ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க மக்களின் விழிப்புணர்வு மேலும் தெளிவாகிக் கொண்டே இருக் கின்றது: ஆப்பிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் விடுதலையை விரும்பும் மக்களின் விழிப்புணர்வு மேலும் தெளிவாகிக் கொண்டே இருக்கின்றது. தொழிலாளிகள், விவசாயிகள், புரட்சிகர அறிவு ஜீவிகள், புரட்சிகரச் சிந்தனைக் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களும் - இவர் கள் புறஉலகில் தொண்ணூறு விழுக்காடுக்கும் அதிகமானவர்கள் - ஒன்றுதிரள வேண்டும், புரட்சி வெற்றியடைவதற்கான போராட்டப் பாதையில் தங்களை ஒன்று திரட்டிக் கொள்ள வேண்டும்'',

"தங்களது ஒட்டுமொத்த விடுதலைக்கான போராட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் தொடக்கத்தில் தமது சொந்தப் பலத்தை நம்பி களத்தில் இறங்குகின்றார்கள்; இதன்பிறகுதான், இதன்பிறகு மட்டுமே, சர்வதேச மக்களின் ஆதரவுடன் களத்தில் இறங்குகின்றார்கள். ஏற்கனவே புரட்சியை வென்றெடுத்து விட்ட உலக மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன், தமக்கான விடுதலைக்காக இன்று போராடிக் கொண்டிருக்கும் பிறபகுதி மக்களுக்கு நீங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கவேண்டும். இது நமது சர்வதேசக் கடமை ஆகும் என்பதை மறக்க வேண்டாம்.
ஆகஸ்டு 9, 1963
(தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்- 9)


No comments:

Post a Comment