Sunday 16 December 2018

அடித்தளத்தால் தீர்மானிக்கப்பட்ட மேற்கட்டமைப்பு (பொதுச் சட்டம் – அரசு - மதம்) பற்றி எங்கெல்ஸ்:-


“பொருளாதார உறவுகள் அரசையும் பொதுச் சட்டத்தையும் தீர்மானிக்கின்றன என்றால், அதேபோல் தனிநபர் சட்டத்தையும் அவையே தீர்மானிக்கின்றன. உண்மையிலேயே சாராம்சத்தில் இச்சட்டம் தனிநபர்களுக்கு இடையே நிலவி வருகின்ற, அந்தந்தச் சூழ்நிலைமைகளில் இயல்பாகக் காணப்படும் பொருளாதார உறவுகளை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் இதனுடைய நடைமுறை வடிவம் கணிசமாக வேறுபட முடியும். இங்கிலாந்தில் நடந்ததுபோல், மொத்த தேசிய வளர்ச்சிக்கு இசைவான வகையில், பழைய நிலப்பிரபுத்துவச் சட்டங்களின் வடிவங்களை மாற்றாமல் அவற்றுக்கு முதலாளித்துவ உள்ளடக்கம் தந்து, பிரதானமாக அவற்றைத் தக்கவைத்துக் கொள்வது சாத்தியமே.

உண்மையில், நிலப்பிரத்துவப் பெயருக்குள் ஒரு முதலாளித்துவ அர்த்தத்தை நேரடியாகப் படித்துக் கொள்வதாகும். மேற்கு ஐரோப்பாக் கண்டத்திலும் இதுபோலவே நடந்தது. அங்கு நிலவிய ரோமானியச் சட்டத்தை அடித்தளமாக எடுத்துக் கொள்ள முடியும். பண்டம் உற்பத்தி செய்யும் ஒரு சமுதாயத்தின் முதன்முதலான உலகச் சட்டமாகும் அது. சாதாரணப் பண்ட உடைமையாளர்களின் (வாங்குபவர்களும் விற்பனையாளர்களும், கடன் வாங்கியவர்களும் கொடுத்தவர்களும், ஒப்பந்தங்களும், கடமைப் பொறுப்புகளும், இன்னும் இதுபோன்ற பிறவும் உள்ளடங்கிய) இன்றியமையாத அனைத்துச் சட்ட உறவுகளையும் பற்றிய நேர்நிகரற்ற, நேர்த்தியுள்ள, விரிவான விளக்கத்தைக் கொண்டது.

அப்படியானால், இன்னமும் குட்டி–முதலாளித்துவ (petty-bourgeois), அரைநிலப்பிரபுத்துவத் தன்மை (semi-feudal) கொண்டதாக இருக்கும் சமுதாயத்தின் நன்மைக்காக, வெறுமே சட்ட நடைமுறை (பொதுச் சட்டம்) மூலமாக, அதை அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தின் தரத்துக்குத் தாழ்த்த முடியும். அல்லது அறிவொளி மிக்கவர்கள் என்று சொல்லப்படுகின்ற, நீதிநெறி பேசும் சட்ட வல்லுநர்களின் உதவியைக் கொண்டு, அப்படிப்பட்ட சமுதாயத் தரத்துக்குப் பொருந்தும் வகையில், அதைத் தனிச்சிறப்பான ஒரு சட்டத் தொகுதியாய் உருவாக்கிவிட முடியும்.

இந்தச் சூழ்நிலைமைகளில், சட்டக் கருத்துநிலையிலிருந்துங்கூட அது ஒரு மோசமான சட்டத் தொகுதியாகவே இருக்கும் (எடுத்துக்காட்டாக, பிரஷ்யாவின் நிலச்சட்டம்). எனினும், ஒரு மகத்தான முதலாளித்துவப் புரட்சிக்குப் பின், ஃபிரெஞ்சு குடிமைச் சட்டம் (French Code Civil) போன்ற முதலாளித்துவப் சமுதாயத்தின் அத்தகையதொரு மூலச்சிறப்பான சட்டத் தொகுப்பையுங்கூட, இதே ரோமானிய சட்டத்தின் அடிப்படையில் வகுப்பது சாத்தியமே. எனவே, முதலாளித்துவச் சட்ட விதிகள் சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை வெறுமனே சட்டத்தின் வடிவத்தில் வெளியிடுகின்றன எனில், சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு நன்றாகவோ, மோசமாகவோ அவற்றை வெளியிட முடியும்.

மனிதன் மேலிருக்கும் முதன்முதலான சித்தாந்த சக்தியாக அரசு தன்னை நம்மிடம் காட்டிக் கொள்கிறது. வெளிநாட்டு, உள்நாட்டுத் தாக்குதல்களிலிருந்து தன்னுடைய பொதுவான நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஓர் உறுப்பைச் சமுதாயம் தனக்கெனப் படைத்துக் கொள்கிறது. இந்த உறுப்பு அரசு அதிகாரம் ஆகும். இந்த உறுப்பு தோன்றிய மாத்திரத்தில், அது சமுதாயத்துக்கு எதிரே தன்னைச் சுதந்திரமானதாக ஆக்கிக் கொள்கிறது. உண்மையில், எவ்வளவு அதிகமாக அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பாக ஆகிறதோ, எவ்வளவு அதிகமாக அந்த வர்க்கத்தின் மேலாதிக்கத்தை அது நேரடியாய்ச் செயல்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக அரசு தன்னைச் சுதந்திரமானதாய் ஆக்கிக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் நடத்தும் மோதல், அவசியமாகவே ஓர் அரசியல் மோதலாக, எல்லாவற்றுக்கும் முதலாய், இவ்வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்துக்கு எதிரான மோதலாக ஆகிறது.

இந்த அரசியல் போராட்டத்துக்கும் அதன் பொருளாதார அடிப்படைக்கும் இடையே உள்ள பரஸ்பரத் தொடர்பு பற்றிய உணர்வு மங்கி விடுகிறது, இது முற்றாக மறைந்துவிடவும் முடியும். இப்போராட்டத்தில் பங்கெடுக்கிறவர்களின் விஷயத்தில் முழுதாக இப்படி நடப்பதில்லை என்ற போதிலும், வரலாற்று ஆசிரியர்களின் விஷயத்தில் அனேகமாக அப்படித்தான் எப்போதும் நடக்கிறது. ரோமானியக் குடியரசுக்குள் நடந்த போராட்டங்கள் பற்றிய பண்டைக்கால வரலாற்று ஆசிரியர்களில் அப்பியன் (Appian) ஒருவர் மட்டுமே அந்தப் போராட்டங்களுக்குரிய இறுதியான காரணம் நிலவுடைமை என்று தெளிவாகவும் துல்லியமாகவும் நமக்குக் கூறுகிறார்.

சமுதாயத்தின் எதிரே அரசு ஒரு சுதந்திரமான சக்தியாக ஆனதும் அது உடனே ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்குகிறது. உண்மையிலேயே, முழுநேர அரசியல்வாதிகள், பொதுச் சட்டக் கொள்கைவாதிகள், தனிநபர் சட்ட வல்லுநர்கள் ஆகியோரிடையேதான் பொருளாதார உண்மைகளோடு உள்ள தொடர்புகள் முற்றாகத் தப்பி விடுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்கிலும் சட்ட அங்கீகாரம் பெறும் பொருட்டு, பொருளாதார உண்மைகள் சட்டவியல் நோக்கங்கள் என்னும் வடிவத்தை எடுத்துத் தீர வேண்டியுள்ளது; அப்படிச் செய்கையில், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள சட்ட அமைப்புமுறை முழுவதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, அதன் பின்விளைவாக சட்டவியல் வடிவமே எல்லாமாகவும் பொருளாதார உள்ளடக்கம் ஒன்றுமில்லாமலும் ஆக்கப்பட்டு விடுகிறது. பொதுச் சட்டம், தனிநபர் சட்டம் ஆகிய இரண்டும் சுதந்திரமான துறைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொன்றும் அதற்கே உரிய வரலாற்று ரீதியான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், எல்லா உள்முரண்பாடுகளையும் உறுதியாக ஒழிப்பதன் மூலம் முறைப்படியான முன்வைப்புக்குத் தகுதி வாய்ந்ததாகவும், அத்தகைய முன்வைப்பு தேவைப்படுவதாகவும் உள்ளது.

இன்னும் மேலான சித்தாந்தங்கள், அதாவது, பொருள் மற்றும் பொருளாதார அடிப்படையிலிருந்து மேலும் தொலைவாக நீக்கி வைக்கப்பட்டுள்ள சித்தாந்தங்கள், தத்துவம், மதம் என்னும் வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இங்கே கருத்துருக்களுக்கும், இருத்தலுக்கான அவற்றின் பொருளாயத நிலைமைகளுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு, இடைநிலைத் தொடுப்புகள் (intermediate links) மூலமாக மேலும் மேலும் சிக்கலாகி விடுகிறது; மேலும் மேலும் தெளிவற்றதாகி விடுகிறது. ஆனால் அந்தப் பரஸ்பரத் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து தொடங்கி மறுமலர்ச்சிக் காலகட்டம் (Renaissance Period) முழுவதுமே நகரங்களால், எனவே நகரத்தார்களால் ஏற்பட்ட இன்றியமையாத விளைவு ஆகும். அதனைத் தொடர்ந்து புதிய–விழிப்புப் பெற்ற தத்துவமும் இந்த வளர்ச்சியின் விளைவாகவே தோன்றியது.

சாராம்சத்தில், இத்தத்துவத்தின் உள்ளடக்கம், சிறிய, நடுத்தர நகரத்தார்கள் பெரும் முதலாளிகளாக மாறிய வளர்ச்சிக்குப் பொருத்தமான கருத்துகளின் தத்துவார்த்த வெளியீடாகவே இருந்தது. பெரும்பாலும் அரசியல் பொருளாதாரவாதிகளாக மட்டுமின்றி, தத்துவவாதிகளாகவும் திகழ்ந்த, கடந்த நூற்றாண்டின் ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுக்காரர்களிடையே இது தெளிவாகப் புலப்படுகிறது. ஹெகலியக் கருத்துப் பிரிவினரைப் பொறுத்தவரையில் இதனை நாம் ஏற்கெனவே நிரூபித்து விட்டோம்.

இப்போது நாம் அதோடு சேர்த்து, மதத்தைப் பற்றிச் சுருக்கமாக மட்டுமே கவனிப்போம். காரணம், மதம் பொருளாயத வாழ்க்கையிலிருந்து மேலும் விலகி நிற்கிறது, அதற்கு மிகவும் அந்நியமானதாகவும் தோன்றுகிறது. மிகப் புராதன காலத்தில், மனிதர்கள் தங்களுடைய சொந்த இயல்பு பற்றியும், அவர்களைச் சுற்றியிருந்த புறநிலை இயற்கை பற்றியும் கொண்டிருந்த தவறான, பழைய கருத்துருக்களிலிருந்து மதம் தோன்றியது. என்றபோதிலும், ஒவ்வொரு சித்தாந்தமும் தோன்றிய பிறகு அப்போது நிலவும் கருத்தோட்டங்களை ஒட்டி வளர்கிறது. அந்தக் கருத்தோட்டங்களை மேலும் வளர்க்கிறது, அப்படிச் செய்யாவிடில் அது ஒரு சித்தாந்தமாக இருக்க முடியாது. அதாவது, சுதந்திரமாய் வளர்ச்சியடைகின்ற, தமக்கே உரிய விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்ட, சுதந்திரமான சிந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் கொண்டதாக இருக்காது.

எந்த மனிதர்களின் மூளைகளுக்குள்ளே இந்தச் சிந்தனை நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த மனிதர்களின் பொருளாதய வாழ்க்கை நிலைமைகளே அந்நிகழ்வுப் போக்கின் ஓட்டத்தை இறுதியில் தீர்மானிக்கின்றன என்பது, தவிர்க்க இயலாதவாறு இந்த மனிதர்களுக்குத் தெரியாமலே இருந்து விடுகிறது. அப்படி இல்லாவிட்டால், அனைத்து சித்தாந்தங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். எனவே, குல உறவுள்ள மக்களினங்களின் ஒவ்வொரு குழுவுக்கும் பிரதானமாகப் பொதுவாக இருக்கும் அசலான மத நம்பிக்கைகள், அந்தக் குழு பிரிந்த பிறகு, ஒவ்வொரு மக்களினத்துக்கும் அதற்கே உரிய விசேஷ முறையில், அதற்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப வளர்கின்றன. அனேக மக்களினக் குழுக்களின், குறிப்பாக ஆரியர்களின் (இந்தோ–ஐரோப்பியர்கள் என்று சொல்லப்படுபவர்கள்) விஷயத்தில் ஒப்புநோக்குப் புராணவியல் (comparative–mythology) இந்த நிகழ்வுப்போக்கை விளக்கமாகக் காட்டியுள்ளது. ஒவ்வொரு மக்களினத்துக்குள்ளும் இவ்வாறு உருவாக்கப்பட்ட கடவுள்கள் தேசியக் கடவுள்களாக இருந்தனர். அவற்றின் ஆளுகை, அவை காத்தருள வேண்டியிருக்கும் தேசிய நிலப்பரப்புக்கு அப்பால் பரவவில்லை. அதன் எல்லைகளுக்கு அப்பால் வேறு கடவுள்கள் வில்லங்கமின்றி அதிகாரம் செலுத்தி வந்தன. தேசம் இருந்த வரையில் மட்டுமே கற்பனையில் அக்கடவுள்கள் தொடர்ந்து இருந்துவர முடிந்தது.

தேசத்தின் வீழ்ச்சியுடன் அவையும் வீழ்ந்தன. ரோமானிய உலகப் பேரரசின் – அதன் தோற்றம் பற்றி இங்கே நாம் பரிசீலிக்கத் தேவையில்லை – பொருளாதார நிலைமைகள், பழைய தேசிய இனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்தின. பழைய தேசியக் கடவுள்கள் நசிந்தன. ரோம் நகரத்தின் குறுகிய கூடங்களுக்கு மட்டுமே பொருந்தியதாக அலங்கரிக்கப்பட்ட ரோமானியர்களின் கடவுள்கள்கூட நசிந்து போயின. சிறிதே மதிக்கத்தக்க எல்லா வெளிநாட்டுக் கடவுள்களுக்கும் ரோம் நகரில் அங்கீகாரம் வழங்கவும், உள்ளூர் கடவுள்களுக்குப் பக்கத்திலேயே அவற்றுக்குப் பூஜா பீடங்கள் ஏற்படுத்தவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளிலே, உலக மதம் ஒன்றின் மூலமாக உலகப் பேரரசை முழுமையாக்க வேண்டியதன் தேவை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு புதிய உலக மதத்தைப் பேரரசின் ஆணை மூலமாக இந்தப் பாணியிலே உண்டாக்கிவிட முடியாது.

பொதுமைப்படுத்தப்பட்ட, கீழ்த்திசையின் – குறிப்பாக யூதர்களின் – இறையியலும், கொச்சைப்படுத்தப்பட்ட, கிரேக்க – குறிப்பாக ஸ்டோயிக் (Stoic) – தத்துவமும் கலந்த ஒரு கலவையிலிருந்து புதிய உலக மதமாகிய கிறிஸ்துவ மதம் ஏற்கெனவே ஓசையின்றித் தோன்றியிருந்தது. ஆதியில் கிறிஸ்துவ மதம் எவ்வாறு தோற்றமளித்தது என்பதை முதலில் சிரமப்பட்டுக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. காரணம், நமக்கு வாழையடி வாழையாக வந்துள்ள அதன் அதிகாரபூர்வமான வடிவம், வெறுமே, எந்த வடிவத்தில் அது அரசாங்க மதமாக ஆனதோ அந்த வடிவம் ஆகும்; அரசாங்க மதம் ஆக்கும் நோக்கத்துக்காக நிஸேயா பேரவையால்* (Council of Nicaea) தகவமைக்கப்பட்ட வடிவம் ஆகும்.

[*நிஸேயா பேரவை: ரோமப் பேரரசின் கிறிஸ்துவத் தலைமைப் பாதிரிகளின் அனைத்துலகப் பேரவை ஆகும். முதலாவது கான்ஸ்டான்டின் பேரரசரால் ஆசியா மைனரில் உள்ள நிஸேயா நகரில் 325-இல் கூட்டப்பட்டது. கிறிஸ்தவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகளை வகுத்துத் தந்தது. அவற்றைப் பின்பற்றாதவர்கள் அரசுத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர்.]

ஏற்கெனவே, 250 ஆண்டுகளுக்குப் பிறகு அது அரசாங்க மதமாக ஆகிவிட்ட உண்மை, அக்காலத்திய நிலைமைகளுக்குப் பொருத்தமான மதமாக அது இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானது. மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவ முறை வளர்ச்சி பெற்ற அதே அளவில், அந்த அமைப்புமுறைக்கு ஈடான மத வடிவமாக, அதற்குப் பொருத்தமான நிலப்பிரபுத்துவ படிநிலை அமைப்புடன் கிறிஸ்துவ மதம் வளர்ச்சி பெற்றது. மேலும், நகரத்தார்கள் செழிக்கத் தொடங்கியபோது, நிலப்பிரபுத்துவக் கத்தோலிக்கத்துக்கு எதிராகப் புரோட்டஸ்டென்ட் முரண்வாதம் வளர்ந்தது. தெற்கு ஃபிரான்சில் அல்பிவாசிகள்* (Albigenses) இடையே, அங்கிருந்த நகரங்கள் தமது மலர்ச்சியின் உச்ச நிலையை எட்டியிருந்த காலத்தில் முதலில் இது தோன்றியது.

[*அல்பிவாசிகள்: 12, 13–ஆம் நூற்றாண்டுகளில், தெற்கு ஃபிரான்ஸ், வடக்கு இத்தாலி நகரங்களில், வணிகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரிடையே விரிவாகப் பரவியிருந்த ஒரு மதப்பிரிவு. தெற்கு ஃபிரான்ஸிலுள்ள அல்பி நகரம் அதன் மையமாக இருந்தது. அல்பிவாசிகள் ஆடம்பரமான கத்தோலிக்கச் சடங்குகளையும், திருச்சபையின் படிநிலை அமைப்பையும் எதிர்த்தனர். நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிரான கண்டனத்தை மத வடிவத்தில் வெளியிட்டனர். 1209–இல் போப் மூன்றாம் இன்னொசன்ட் அல்பி வாசிகளுக்கு எதிராக சிலுவைப்போர் நடத்தினார். இருபது ஆண்டுகாலம் நடந்த இந்தப் போரினாலும் கடுமையான அடக்குமுறையாலும் அல்பிவாசிகள் இயக்கம் நசுக்கப்பட்டது.]

மத்திய காலம், தத்துவம், அரசியல், சட்டவியல் ஆகிய பிற சித்தாந்த வடிவங்கள் அனைத்தையும் இறையியலுடன் ஒட்ட வைத்தது. அவற்றை இறையியலின் உட்பிரிவுகளாக ஆக்கி விட்டது. இதன்மூலம், ஒவ்வொரு சமுதாய மற்றும் அரசியல் இயக்கத்தையும் இறையியல் வடிவம் எடுத்துக் கொள்ள நிர்ப்பந்தித்தது. மக்கள் திரளின் உணர்வுப் பசிக்கு மதத் தீனி மட்டுமே ஊட்டப்பட்டது. மற்றவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. எனவே, ஒரு துடிப்பான இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு, அவர்கள் தங்களின் சொந்த நலன்களையே மத வேடத்தில் மறைத்து, முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட சமுதாயப் படிநிலை எதையும் சேராத, பின்னால் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடிகளான, நகர்ப்புறத்துச் சொத்தில்லாத தொழிலாளிகள், தினக்கூலிகள் மற்றும் எல்லா விதமான வேலையாட்களைக் கொண்ட ஒரு தொங்கு சதையைத் தொடக்கத்திலிருந்தே நகரத்தார்கள் தோற்றுவித்ததைப் போலவே, மத முரண்வாதம் விரைவில் நகரத்தார்–மிதவாத முரண்வாதமாகவும், தொழிலாளர்–புரட்சிகர முரண்வாதமாகவும் பிரிந்துவிட்டது. புரட்சிகர முரண்வாதம் நகரத்தார் முரண்வாதிகளின் வெறுப்புக்குரிய ஒன்றாக இருந்தது.

எழுச்சி பெற்றுவரும் நகரத்தார்களை எப்படித் தோற்கடிக்க முடியாமல் இருந்ததோ, அவ்வாறே புரோட்டஸ்டென்ட் முரண்வாதமும் ஒழிக்க முடியாததாய் இருந்தது. இந்த நகரத்தார்கள் போதுமான அளவு பலம் பெற்றபோது, நிலப்பிரபுத்துவப் பெருங்குடிக்கு எதிரான அவர்களது போராட்டம், அதுவரையில் பெரும்பாலும் உள்ளூர் அளவில் இருந்தது, தேசிய அளவிலான பரிமாணம் பெறத் தொடங்கியது. மாபெரும் முதல் நடவடிக்கை ஜெர்மனியில் நிகழ்ந்தது – மதச்சீர்திருத்தம் (Reformation) என்ற பெயரில். நகரத்தார்கள், கலகப்போக்குக் கொண்ட மீதியுள்ள சமூகப் பிரிவினரை – நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கீழ்நிலையிலுள்ள பிரபு வம்சத்தினர், நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் ஆகியோரைத் தங்கள் பதாகையின்கீழ் ஒன்றுபடுத்த முடிகிற அளவுக்கு ஆற்றலோ, போதுமான வளர்ச்சியோ பெற்றிருக்கவில்லை. தொடக்கத்தில் பிரபு வம்சத்தினர் தோற்கடிக்கப்பட்டனர். விவசாயிகள் கிளர்ந்து எழுந்தனர். அதுவே புரட்சிகரப் போராட்டம் முழுமைக்கும் உச்சமாக விளங்கியது. ஆனால் நகரங்கள் அவர்களை நட்டாற்றில் கைவிட்டன.

இவ்வாறாக, நிலப்பிரபுத்துவ இளவரசர்களின் படைகளுக்குப் புரட்சி அடிபணிந்தது. அவர்களே புரட்சியின் முழுப்பலனையும் அறுவடை செய்தனர். அதனைத் தொடர்ந்து, மூன்று நூற்றாண்டு காலத்துக்கு, வரலாற்றில் சுதந்திரமான, துடிப்பான பாத்திரம் வகிக்கும் நாடுகளின் அணிகளிலிருந்து ஜெர்மனி மறைந்து விடுகிறது. ஆனால், ஜெர்மானிய லூதரைப் (Luther) போன்று ஃபிரெஞ்சுக்கார கால்வின் (Calvin) தோன்றினார். உண்மையான ஃபிரெஞ்சு மதிநுட்பத்துடன் மதச் சீர்திருத்த வாதத்தின் முதலாளித்துவத் தன்மையை முன்னணியில் நிறுத்தினார், திருச்சபையைக் குடியரசுத் தன்மை கொண்டதாக்கினார், ஜனநாயகப்படுத்தினார். ஜெர்மனியில் லூதரிய மதச்சீர்திருத்தம் சிதைவுற்று நாட்டைப் படுநாசப்படுத்திய காலத்தில், கால்வினிய மதச்சீர்திருத்தம் ஜெனீவாவிலும் ஹாலந்திலும் ஸ்காட்லாந்திலும் குடியரசுவாதிகளுக்கு ஒரு பதாகையாகப் பயன்பட்டது.

ஸ்பெயினிடமிருந்தும், ஜெர்மன் பேரரசிடமிருந்தும் ஹாலந்தை விடுவித்தது. இங்கிலாந்தில் நடந்துவந்த முதலாளி வர்க்கப் புரட்சி நாடகத்தின் இரண்டாவது அரங்கேற்றத்துக்கு வேண்டிய சித்தாந்த ஆடைகளை வழங்கியது. இங்கே கால்வினியம் (Calvinism) அக்காலத்திய முதலாளி வர்க்க நலன்களுக்குரிய உண்மையான மத முகமூடியாகத் தன்னை நியாயப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக, பிரபு வம்சத்தின் ஒரு பகுதிக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசத்தில் 1689–இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது, கால்வினியம் முழு அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஆங்கில அரசின் திருச்சபை மீண்டும் நிறுவப்பட்டது. ஆனால் அரசனைத் தனது போப்பாகக் கொண்டிருந்த முந்தைய கத்தோலிக்கிய வடிவத்தில் அல்ல. மாறாக, அது பலமாகக் கால்வினிய மயமாக்கப்பட்டிருந்தது. பழைய அரசுத் திருச்சபை மகிழ்ச்சிகரமான கத்தோலிக்க ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடி வந்தது. சுவையற்ற கால்வினிய ஞாயிற்றுக்கிழமைக்கு எதிராகப் போராடி வந்தது. புதிய, முதலாளித்துவ மயமாக்கப்பட்ட திருச்சபை பின்னதை அறிமுகப்படுத்தியது. அது இன்றுவரைக்கும் இங்கிலாந்தை அணி செய்கிறது.

ஃபிரான்சில் 1685–இல் கால்வினியச் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டனர். அவர்கள் ஒன்று கத்தோலிக்க மயமாக்கப்பட்டனர் அல்லது நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர். ஆனால் அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? அக்காலப் பகுதியில் ஏற்கெனவே பியெர் பெயில் (Pierre Bayle) என்னும் சுதந்திரச் சிந்தனையாளர் உச்ச நிலையில் செயலாற்றி வந்தார். 1694–இல் வால்டேர் (Valtaire) பிறந்தார். பதினான்காவது லூயி மன்னனின் (Louis XIV) பலவந்த நடவடிக்கைகள், பிரெஞ்சு முதலாளி வர்க்கம் தன்னுடைய புரட்சியை, மதத் தன்மையற்ற, முற்றிலும் அரசியல் வடிவத்தில் எளிதாக நடத்தி முடிப்பதற்கே உதவின. புரட்சியின் இந்த வடிவம்தான் வளர்ச்சி பெற்ற முதலாளி வர்க்கத்துக்குப் பொருத்தமானதாக இருந்தது. புரோட்டஸ்டென்டுகளுக்குப் பதிலாகச் சுதந்திரச் சிந்தனையாளர்கள் தேசியச் சட்டமன்றங்களில் இடம் பெற்றனர். இவ்வாறாகக் கிறிஸ்துவ மதம் அதன் இறுதிக் கட்டத்தில் நுழைந்தது.

எதிர்காலத்தில் எந்த முற்போக்கு வர்க்கத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கு ஏற்ற சித்தாந்த வேடம் பூண்டு சேவை புரியக் கிறிஸ்துவ மதம் திறனற்றுப் போனது. மேலும் மேலும் ஆளும் வர்க்கங்களின் தனிப்பட்ட உடைமையாகி விட்டது. ஆளும் வர்க்கங்கள், கீழ்நிலை வர்க்கங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகக் கிறிஸ்துவ மதத்தை வெறுமே ஓர் அரசாங்கச் சாதனமாகப் பயன்படுத்தின. மேலும், வெவ்வேறு வர்க்கங்களுள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய பொருத்தமான மதத்தைப் பயன்படுத்துகிறது: நிலம் படைத்த பிரபு வம்சத்துக்கு – கத்தோலிக்க ஏசுயியவாதம் அல்லது மரபுவழிப் புரோட்டஸ்டென்டு வாதம். மிதவாத, தீவிரவாத முதலாளி வர்க்கத்துக்கு – பகுத்தறிவுவாதம். இந்தக் கனவான்கள் தத்தமக்கு உரிய மதங்களில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல.

எனவே, நாம் காண்பதாவது: அனைத்துச் சித்தாந்தத் துறைகளிலும் மரபு ஒரு மாபெரும் பழைமைவாத சக்தியாக இருப்பதைப் போல, மதம் உருவாக்கப்பட்டவுடன், எப்போதும் மரபு வழிபட்ட கருத்துகளையே கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்துகளில் நாளடைவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் வர்க்க உறவுகளிலிருந்து உருவாகின்றன. அதாவது, இம்மாற்றங்களைச் செயல்படுத்துகின்ற மக்களின் பொருளாதார உறவுகளிலிருந்து தோன்றுகின்றன. இங்கே இது போதும்.

மேலே கண்ட நூல்பகுதியில், வரலாற்றைப் பற்றிய மார்க்ஸின் கருத்தோட்டத்தை, அதிகபட்சமாக ஒரு சில எடுத்துக்காட்டுகளோடு சேர்த்து, ஒரு பொதுவான சுருக்கவுரையாகக் கொடுப்பதே நமது பிரச்சினையாக இருந்திருக்க முடியும். இதற்கு வரலாற்றிடமிருந்தே நிரூபணத்தைத் தருவிக்க வேண்டும். இது தொடர்பாகப் பிற நூல்களில் போதுமான அளவுக்கு விளக்கப்பட்டுள்ளது என்று கூறிக் கொள்ள என்னை அனுமதிப்பீராக. எனினும், இயற்கை பற்றிய இயக்கவியல் கருத்தோட்டம் இயற்கை பற்றிய தத்துவங்கள் அனைத்தையும் ஒருங்கே தேவையற்றதாகவும் சாத்தியமற்றதாகவும் ஆக்குவதுபோல், வரலாறு பற்றிய மார்க்ஸியக் கருத்தோட்டம், வரலாற்றுத் துறையில் தத்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. எந்தத் துறையிலும் அதிலுள்ள பரஸ்பரத் தொடர்புகளை மூளைக்குள் கற்பனையில் கண்டறிவதல்ல, அவற்றை உண்மை விவரங்களிலே கண்டுபிடிப்பதே இனிமேற்பட்ட பிரச்சினை ஆகும். இயற்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள தத்துவத்துக்குக் கலப்பற்ற சிந்தனைத் துறை மட்டுமே, அதுவும் அது விட்டுவைக்கப்பட்டுள்ள அளவுக்கு மட்டுமே எஞ்சுகிறது. சிந்தனையினுடைய நிகழ்வுப்போக்கின் விதிகள் பற்றிய கோட்பாடு, தர்க்கவியல் மற்றும் இயக்கவியல் ஆகியவை மட்டுமே அதற்கு மிஞ்சுகின்றன.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


No comments:

Post a Comment