Monday 10 December 2018

சரியான சிந்தனைகள் எங்கேயிருந்து தோன்றுகின்றன? - மாசேதுங்


சரியான சிந்தனைகள் எங்கேயிருந்து தோன்றுகின்றன? வானத்திலிருந்து குதிக்கின்றனவா? அல்லது நமது மூளையில் பிறக்கும்போதே பதிந்துள்ளனவா? அல்ல. சமூகத்தில் தொடர்ந்து இயங்குவதால் மட்டுமே சரியான சிந்தனைகள் தோன்ற முடியும், அதுவன்றி வேறல்ல. சமூக இயக்கம் மூன்று வகைப்படும் - உற்பத் திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், அறிவியல் பரிசோதனைக் களம். சமூகத்தின் ஒரு அங்கமாக மனிதன் இயங்கும் போதுதான் அவனது சிந்தனையும் அதன் அடிப்படையில் வடிவமைக்கப் படுகின்றது. ஒரு முன்னேறிய வர்க்கத்தின் சிந்தனைகளை சமூகம் உள்வாங்கிக் கொண்டு புரிந்து கொள்ளும்போது, இந்த சிந்தனைகள் செயல் வடிவம் பெறுகின்றன; சிந்தனைகள் செயல் வடிவங்கள் பெறும்போது சமூகம் இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுகின்றது, உலகமும் மாறுகின்றது.

சமூக இயக்கத்தின் ஊடாகத் தானும் ஓர் அங்கமாக இயங்கும்போது, மனிதன் பல்வேறு போராட்ட அனுபவங்களைப் பெறுகின்றான். இந்தப் போராட்டங்களில் சில வெற்றிகளை அவன் அடையலாம், சில தோல்விகளையும் அடையக்கூடும். இரண்டிலிருந்தும் அவன் பாடங்களைக் கற்றுக்கொள்கின்றான். புறஉலகின் அனைத்து இயக்கங்களும் குறித்த கருத்துகளை ஐம்புலன்களின் உணர்வு வழியாக கிரகித்து மூளையில் பதிய வைத்துக் கொள்கின்றான். பார்ப்பது, கேட்பது, முகர்வது, சுவைப்பது, தொடுவது - இவையே ஐந்து உணர்வுகள். தொடக்கத்தில் அறிவு என்பது புலன்வழி உணர்ந்தது என்னவோ அந்த அளவிலேயே நிற்கின்றது. இதன் வளர்ச்சியானது கருத்து வழியே, அதாவது காரணகாரியங்களை உணர்ந்து அதன் வழியே பெறப்படும் அறிவாக உருப்பெறுகின்றது.

மனிதனின் அறிவாற்றல் திறன் மேம்படும் வளர்ச்சிக் கட்டத்தில் இது ஒரு படி. முதல் படியும் அதுவே. புறப்பொருளை மட்டுமே உணர்ந்திருந்த கட்டத்திலிருந்து அகநிலை உணர்வு நிலைக்கு உயர்த்தப்படுவதும், வெறும் புலன்வழி உணர்வு நிலையிலிருந்து முன்னேறி சிந்தனை செய்யும் நிலைக்கு உயர்த்தப்படுவதும் இந்தக் கட்டத்தில் தான். இந்தக் கட்டத்தில் ஒருவனது புரிதல் திறனும் சிந்தனைத் திறனும் (கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள், மதிப்பீடுகள் உட்பட), புறநிலை உலகின் யதார்த்த விதிகளைச் சரியாக பிரதிபலிக் கின்றனவா என்பதை உறுதியாகக் கூறமுடியாது; அவை சரியானவை தான், அல்ல தவறானவையே என்று பகுத்துணரும் ஆற்றலும் இருக்காது.

அடுத்தக் கட்டம் என்ன? வெறும் அகநிலை உணர்வு நிலையிலிருந்து கருத்தியல் நிலையை உணர்வதும், சிந்தனைகளிலிருந்து யதார்த்த நிலையை உணர்வதும் அடுத்தகட்டம். இக்கட்டத்தில், முதல் கட்டத்தில் கைவரப்பெற்ற அறிவை, சமூகவாழ்வில் பொருத்திப் பார்த்து அனுபவப்பூர்வமாக உணர்வது என்ற நிலைக்கு உயர்கின்றான். தனது கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள், மதிப்பீடுகள் ஆகியவை சரியானவைதானா, வெற்றிகரமானவைதானா என்பதை இக்கட்டத்தில் மனிதன் அனுபவப்பூர்வமாக உணர்கின்றான். பொதுவாகச் சொன்னால், வெற்றிபெற்றவை யாவும் சரியானவை, தோல்வி கண்டவை யாவும் தவறானவை என்று முடிவுக்கு வரலாம். குறிப்பாக இயற்கையுடனான மனிதனின் போராட்டம் என்ற தளத்தில் இந்த மதிப்பீடு உண்மையாகவே இருக்கின்றது.

சமூகப் போராட்டத்தில், முன்னேறிய வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள் சில சமயம் தோல்வியுற நேரலாம். இதன் பொருள், அவற்றின் கொள்கைகள் தவறானவை என்பதல்ல; மாறாக, சமூகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற சக்திகளுக்குள், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த சக்தி வலிமையாக விளங்குகின்றதோ அதன் கை ஓங்கிவிடுகின்றது. பிற்போக்கு சக்திகளின் கை வலிமையுடன் இருந்தால் முற்போக்கு சக்திகள் தற்காலிகமாக ஒரு தோல்வியைச் சந்திக்கக் கூடும். ஆனால் நாளையோ அதன்பிறகோ முற்போக்கு சக்திகள் வெல்லும் என்பது உறுதி.

சமூகவாழ்வின் அனுபவங்கள் கற்றுத் தரும் பாடமானது மனிதனின் அறிவுத்திறனை மேலும் ஒருபடி உயர்த்துகின்றது. இந்தப் பாய்ச்சல் கட்டம்தான் முன்பைவிட மிக முக்கியமான கட்டம் ஆகும். முதல்கட்டத்தில், புற உலகின் யதார்த்த நிலையை உள் வாங்கிய அனுபவத்தில் கட்டப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் யாவும் சரியானவைதானா தவறானவையா என்பதை மெய்ப்பிக்கும் முக்கியமான கட்டம் இதுதான். உண்மையை உண்மைதான் என்று மெய்ப்பிக்க இதைத்தவிர வேறு வழியில்லை.

புறஉலகை அறிந்து கொள்ள வேண்டும். இது பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய கடமை. சரி, ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? இந்த உலகை மாற்றி அமைக்க வேண்டும். இது மட்டுமே, இது ஒன்றுதான் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கம். கருத்தியல் நிலையிலிருந்து அகநிலை உணர்வுக்குச் செல்வது; மீண்டும் கருத்தியல் நிலைக்குத் திரும்புவது - இந்தச் சுழற்சி நிலை மீண்டும் மீண்டும் இயங்கும் போதுதான் மனிதனின் அறிவுத்திறன் வளப்படுகின்றது; சரியான நிலையில் செல்கின்றது. அதாவது அனுபவத்திலிருந்து அறிவு வளர்வதும், மீண்டும் அனுபவம் பெறுவதுமான சுழற்சி நிலை.

மார்க்சியம் கூறுகின்ற அறிவு பற்றிய விதி இதுவே - இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்னும் விதி இதுவே. நமது தோழர்களில் பலரும்கூட மார்க்சியம் கூறுகின்ற இந்த விதியை இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றார்கள். ''உங்களது கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், செயல்முறைகள், திட்டங்கள், மதிப்பீடுகள், நீண்ட சொற்பொழிவுகள், நீண்ட கட்டுரைகள் ஆகியவற்றை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? அவற்றின் மூலத்தைக் கூற முடியுமா?'' என்று கேட்டுப் பாருங்கள், அவர்கள் உங்கள் கேள்வியை விநோதமாகப் பார்ப்பார்கள், ஆனால் பதில் கூறத் தெரியாது. கருத்தியல் சிந்தனையை அகநிலை உணர்வாக மாற்ற முடியும், அதேபோல் அகநிலை உணர்வை கருத்தியல் சிந்தனைகளாக மாற்ற முடியும் என்பதைக்கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை; அன்றாட வாழ்வில் இதுதான் நடக்கின்றது என்பதும் அவர்களுக்குப் புரிவதில்லை. எனவே, இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் பற்றி நமது தோழர்களுக்குப் புரியவைப்பது மிக முக்கியமான கடமையாக உள்ளது.

நமது தோழர்களின் சிந்தனை மட்டம் உயர வேண்டுமெனில், அவர்களது கல்வியறிவும் ஆய்வுத்திறனும் மேம்படவும் அவர்களது அனுபவங்களின் செறிவிலிருந்து பகுத்துணரவும் சிரமங்களை எதிர் கொள்ளவும், குறைந்தபட்சத் தவறுகள் மட்டுமே செய்வார்கள் என்பதை உறுதி செய்யவும் தங்களது கடமைகளைச் செவ்வனே செய்வதை உறுதிப்படுத்தவும் மார்க்சியக் கல்வி அவசியமாகின்றது. கூடவே, சீனதேசத்தை பலம்வாய்ந்த சோசலிச சக்தியாக உயர்த்தவும், உலகெங்கும் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் கசக்கப்படுகின்ற சாமானிய மக்கள் சமுத்திரத்திற்கு உதவவும் ஆன சர்வதேசக் கடமையை ஆற்றவும், நமது தோழர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை கற்றுணர வேண்டியது அவசியமாகின்றது.
மே, 1963

(தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்- 9)

No comments:

Post a Comment