Sunday 16 December 2018

அரசியல் போராட்டங்கள் - வர்க்க போராட்டங்கள் - பொருளாதார விடுதலை பற்றி எங்கெல்ஸ்


“அனைத்து அரசியல் போராட்டங்களும் வர்க்க போராட்டங்களாகும்; ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாகவே இருக்கின்றது; எனவே விடுதலைக்காக நடக்கும் எல்லா வர்க்கப் போராட்டங்களும், அவசியமாகவே அவை அரசியல் வடிவம் பெற்றிருந்த போதிலும், பொருளாதார விடுதலை என்னும் பிரச்சினை நோக்கியே முடிவாகத் திரும்புகின்றன – என்பதெல்லாம் குறைந்தபட்சம் நவீன கால வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்தபட்சம் இக்கால வரலாற்றிலாவது, அரசு அதாவது அரசியல் அதிகாரம் கீழடங்கிய அம்சமாகவும், குடிமைச் சமுதாயம் அதாவது பொருளாதார உறவுகளின் ஆட்சி தீர்மானகரமான அம்சமாகவும் உள்ளது. ஹெகலுங்கூட மரியாதை செலுத்திய மரபு வழிப்பட்ட கருத்தோட்டம் (traditional conception) அரசைத் தீர்மானகரமான அம்சமாகவும், குடிமைச் சமூதாயத்தை அரசால் தீர்மானிக்கப்படும் அம்சமாகவும் கண்டது. வெளித்தோற்றங்களும் இத்துடன் பொருந்துகின்றன.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய செயல்பாடுகளின் உந்து சக்திகள் அனைத்தும், அவனைச் செயலில் இறங்கச் செய்வதற்கு, அவன் மூளையினூடே சென்று தீர வேண்டும்; சென்று, அவனுடைய விருப்பத்தின் நோக்கங்களாகத் தம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதுபோலவே, குடிமைச் சமூதாயத்தின் தேவைகள் அனைத்தும் – எந்த வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருக்க நேர்ந்தாலும் – சட்டங்களின் வடிவத்தில் பொதுவான அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விருப்பத்தினூடே சென்று தீர வேண்டும். தன்னளவில் வெளிப்படையாகப் புலப்படும் இதுதான் விவகாரத்தின் முறையான அம்சம் ஆகும். எனினும், தனிநபரின் மற்றும் அரசின் வெறும் சம்பிரதாயமான இவ்விருப்பத்தின் உள்ளடக்கம் என்ன, இவ்வுள்ளடக்கம் எங்கிருந்து பெறப்படுகிறது? இதுமட்டும் ஏன் விரும்பப்பட்டது? ஏன் வேறெதுவும் இல்லை? என்னும் கேள்வி எழுகிறது. இதை நாம் ஆய்ந்து பார்த்தால், நவீன கால வரலாற்றில் குடிமைச் சமூதாயத்தின் மாறிவரும் தேவைகளும், ஏதோவொரு வர்க்கத்தின் மேலாதிக்கமும், கடைசியாக உற்பத்திச் சக்திகள் மற்றும் பரிவர்த்தனை உறவுகளின் வளர்ச்சியுமே மொத்தத்தில் அரசின் விருப்பத்தைத் தீர்மானிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறோம்.

ஆனால் பிரம்மாண்டமான உற்பத்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களைக் கொண்ட நமது நவீன சகாப்தத்திலுங்கூட, அரசானது ஒரு சுதந்திரமான வளர்ச்சியைக் கொண்ட, ஒரு சுதந்திரமான செயற்களமாக இல்லாமல், அதன் இருப்பும் வளர்ச்சியும் முடிவில் சமுதாய வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளைச் கொண்டே விளக்கப்பட வேண்டியுள்ளது எனில், முந்தைய காலங்கள் அனைத்திற்கும் இது மேலும் உண்மையாக இருந்தாக வேண்டும். காரணம், முந்தைய காலங்களில் மனிதனின் பொருளாயத வாழ்க்கைக்கான உற்பத்தி இத்தகைய ஏராளமான துணைச் சாதனங்களோடு நடைபெறவில்லை; ஆகவே, அக்காலங்களில் இப்படிப்பட்ட உற்பத்தியின் அவசியம் மனிதர்கள் மீது மேலும் பெரிதான ஆதிக்கம் செலுத்தி வந்திருக்க வேண்டும். பெரும் தொழில்துறை மற்றும் இரயில்வேக்களின் சகாப்தமான இன்றைய காலகட்டத்திலும்கூட, ஆக மொத்தத்தில் அரசு என்பது உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வர்க்கத்தினுடைய பொருளாதாரத் தேவைகளின் அழுத்தமான பிரதிபலிப்பு மட்டுமே.

அப்படி இருக்கையில், அன்றைய சகாப்தத்தில் இது மேலும் உண்மையாக இருந்திருக்க வேண்டும். காரணம், அன்றைக்கு மனிதர்களின் ஒவ்வொரு தலைமுறையும், பொருளாயதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள, அதன் மொத்த வாழ்நாளில் மிகப்பெரும் பகுதியைச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. எனவே, அன்றைய தலைமுறை இன்று நாம் இருப்பதைவிட மேலும் அதிகமாக அந்தத் தேவைகளைச் சார்ந்திருந்தது. வரலாற்றின் முந்தைய காலகட்டங்களை பற்றிய பரிசீலனை – இக்கோணத்திலிருந்து மிகுந்த அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட உடனேயே – இந்த உண்மையை நூறு மடங்கு அதிகமாகவே உறுதிப்படுத்துகிறது. ஆனால் இதை நாம் இங்கே ஆராய முடியாது என்பது உண்மையே.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


No comments:

Post a Comment