Monday 10 December 2018

அமெரிக்க ஏகாதிபத்திய அரசு கடைப்பிடிக்கும் இனவெறிக் கொள்கையை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு அழைப்பு- மாசேதுங்


உலகெங்கிலும் இருக்கின்ற தொழிலாளிகளையும் விவசாயிகளையும், புரட்சிகர அறிவுஜீவிகளையும், நியாய சிந்தனை கொண்ட முதலாளித்துவ அறிவுஜீவிகளையும், வெள்ளையோ கறுப்போ, மஞ்சளோ, பழுப்போ எந்த நிறத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அனைத்து அறிவுஜீவிகளையும் நான் அறைகூவிக் கேட்டுக் கொள்கின்றேன் - நீங்கள் இனவெறிக் கொள்கையை எதிர்த்துக் குரல் கொடுங்கள்; அமெரிக்க அரசின் இத்தகைய மோசமான கொள்கைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அமெரிக்க நீக்ரோ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக வலுவாகக் குரல் எழுப்புங்கள். ஒரு தேசியப் போராட்டம் என்பது வர்க்கப்போராட்டம் குறித்த ஒரு கேள்வியே ஆகும். அமெரிக்க வெள்ளையர்களின் பிற்போக்குவாத ஆளும் வர்க்கமே அமெரிக்க நீக்ரோ மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. ஆனால் மிகப் பெரும்பான்மையாக இருக்கின்ற அமெரிக்க வெள்ளை மக்கள் திரளின் தொழிலாளிகள், விவசாயிகள், புரட்சிகர அறிவுஜீவிகள், நியாய சிந்தனைப் படைத்த அறிவு ஜீவிகளின் பிரதிநிதியாக இந்த ஒரு பகுதி ஆளும் வர்க்கம் இல்லை, இருக்கவும் முடியாது.

அமெரிக்காவின் தலைமையிலான ஒரு சில ஏகாதிபத்திய நாடுகள், அதன் கூட்டாளிகள், பல்வேறு நாடுகளில் இருக்கின்ற பிற்போக்கு சக்திகள் ஆகியவர்கள்தான் உலகநாடுகளில் இருக்கின்ற ஆகப்பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவுகின்றார்கள், ஆக்கிரமிப்பைத் திணிக்கின்றார்கள். ஆனால் இந்தப் பிற்போக்குவாத சக்திகள் சிறுபான்மையினரே, நாம்தான் பெரும் பான்மையினர் என்பதே உண்மை. உலக மக்கள் தொகை முந்நூறு கோடி எனில் இப்பிற்போக்குவாத சக்திகளின் எண்ணிக்கையோ இதில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவே. நான் உறுதிபட நம்புகின் றேன் - உலகில் தொண்ணூறு விழுக்காடு இருக்கின்ற நியாயசிந்தனை படைத்த உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் அமெரிக்க நீக்ரோ மக்களின் போராட்டத்துக்கு உண்டு, அவர்களது போராட்டம் வெல்லும். பிற்போக்கு வாத கொடூரக் கொள்கைகளான காலனிய அமைப்பும் ஏகாதிபத்திய அமைப்பும், நீக்ரோ மக்களை அடிமைப் படுத்தி அவர்களை விற்பனை செய்வது என்ற கொடூரமான கொள்கை யுடன் சேர்ந்தேதான் வளர்ந்தன என்பது உண்மை. இன்று கொழுந்து விட்டு எரியும் நீக்ரோ மக்களின் போராட்டத் தீயில் கொடூரங்கள் அனைத்தும் வெந்து சாம்பலாகும் என்பது உறுதி.
(அமெரிக்க ஏகாதிபத்தியத்தன இனவேற்றுமைக் கொள்கையை எதிர்ப்போம்!-  
ஆகஸ்ட் 8, 1963
(தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்- 9)


No comments:

Post a Comment