Sunday 16 December 2018

வரலாற்றின் உந்து விசையைப் பற்றி எங்கெல்ஸ்:-


“வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களுடைய நோக்கங்களின் பின்னே – தன்னுணர்வுடன் அல்லது தன்னுணர்வின்றி, உண்மையில் மிக அடிக்கடி தன்னுணர்வின்றி – இருக்கும் உந்து ஆற்றல்களையும், வரலாற்றின் உண்மையான தீர்மானகர உந்து சக்திகளாக இருப்பவற்றையும் ஆய்வு செய்வதுதான் இப்போதைய பிரச்சினையாக இருக்கும்போது, எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், தனிநபர்களின் நோக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பிரச்சினையாக இருக்கவில்லை. மாபெரும் மக்கள் திரள்கள், மொத்த மக்களினங்கள், ஒவ்வொரு இனத்திலுமுள்ள மக்களின் மொத்த வர்க்கங்கள் ஆகியவற்றை இயங்கச் செய்யும் நோக்கங்களைப் பற்றிய, அதுவும்கூட, சுடர்விட்டு எரிந்து விரைவிலே அணைந்து போகும் வைக்கோல் தீபோன்ற நொடிநேர இயக்கம் போலன்றி, ஒரு மகத்தான வரலாற்று மாற்றத்தில் முடிகிற, என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு செயல்பாட்டுக்கான நோக்கங்களைப் பற்றிய பிரச்சினையாகத்தான் இது உள்ளது.
     
இங்கே செயலாற்றும் மக்கள் திரளின் மனத்திலும், மகத்தான மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற அவர்களுடைய தலைவர்களின் மனத்திலும் தெளிவாகவோ, தெளிவின்றியோ, நேரடியாகவோ அல்லது ஒரு சித்தாந்த, வடிவத்தில்கூட உணர்வுபூர்வமான நோக்கங்களாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கும் இயக்கு காரணங்களைக் கண்டறிகின்ற பாதை ஒன்றுதான், வரலாறு முழுவதிலும், அதன் குறிப்பிட்ட காலகட்டங்களிலும், குறிப்பிட்ட நாடுகளிலும் ஆட்சி செலுத்தும் விதிகளைக் கண்டுபிடிக்க உதவி செய்யும். மனிதர்களை இயக்கத்தில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய மனங்களினூடே சென்று தீர வேண்டும். ஆனால் அது மனத்தில் என்ன வடிவம் எடுத்துக் கொள்ளும் என்பது, சூழ்நிலைமைகளையே பெருமளவு பொருத்திருக்கும். ரைன் மாநிலத்தில் 1848-ஆம் ஆண்டு வரையிலும்கூட தொழிலாளிகள் செய்ததைப்போல் இனிமேலும் வெறுமே எந்திரங்களை உடைத்துப் போடாவிட்டாலும், அவர்கள் எவ்வகையிலும் முதலாளித்துவ எந்திரத் தொழிலுடன் சமரசப்பட்டுப் போகவில்லை.

ஆனால், இதற்கு முந்தைய காலகட்டங்கள் அனைத்திலும் வரலாற்றின் இந்த உந்து காரணங்களை ஆய்வு செய்வது, அவற்றுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையேயுள்ள சிக்கலான, மறைவான பரஸ்பரத் தொடர்புகளின் காரணத்தால், அனேகமாகச் சாத்தியமற்றிருந்தது. அவ்வாறிருக்கும்போது, நம்முடைய இன்றைய காலகட்டம் புதிரை விடுவிக்க முடிகிற அளவுக்கு இந்தப் பரஸ்பரத் தொடர்புகளை எளிதாக்கி விட்டிருக்கிறது. பெரிய அளவிலான தொழிலகங்கள் நிலைநாட்டபட்ட காலத்திலிருந்து, அதாவது, குறைந்தபட்சம் 1815-இல் ஐரோப்பாவில் அமைதி ஏற்பட்ட காலத்திலிருந்து, இங்கிலாந்தின் மொத்த அரசியல் போறாட்டமும் நிலம் படைத்த பிரபு வர்க்கம் (landed aristocracy), முதலாளி வர்க்கம் (நடுத்தர வர்க்கம்) என்னும் இரண்டு வர்க்கங்களின் மேலாட்சிக்கான கோரிக்கைகளை அச்சாணியாகக் கொண்டிருந்தது என்பது இங்கிலாந்து நாட்டிலுள்ள எந்த மனிதருக்கும் எப்போதுமே இரகசியமாக இருந்திருக்கவில்லை.

ஃபிரான்சில் பவர்பான் (Bourbon) அரச வம்சத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது இதே உண்மையைப் புலப்படச் செய்தது. மத்திய காலத்திலிருந்து ஃபிரெஞ்சு வரலாறு முழுவதையும் புரிந்து கொள்ள அதுவே திறவுகோல் என்று தியேரி (Thierry) முதல் கிஸோ (Guizot), மின்யே (Mignet), தியேர் (Thiers) வரையிலான முடியரசு மீட்சிக் காலத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் அதைப்பற்றி எங்கும் பேசுகிறார்கள். 1830 முதல் இவ்விரு நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்தை, பட்டாளி வர்க்கத்தை மூன்றாவது போட்டியாளனாக அங்கீகரித்துள்ளனர். நவீன கால வரலாற்றின், குறைந்தபட்சம், மிகவும் முன்னேறிய இவ்விரு நாடுகளின் உந்து சக்தியை, இம்மூன்று மாபெரும் வர்க்கங்களின் போராட்டத்திலும் அவர்களுடைய நலன்களின் மோதலிலும் காணலாம். அவ்வாறு பார்க்காமலிருப்பதற்கு ஒருவர் வேண்டுமென்றே கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நிலைமைகள் எளிதாகியுள்ளன.”
 (லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

No comments:

Post a Comment