Sunday 16 December 2018

ஹெகலிய இயக்கவியல் பற்றி எங்கெல்ஸ்:-


“ஹெகலியக் கருத்துப்போக்கின் சிதைவிலிருந்து, அங்கே இன்னுமொரு போக்கு வளர்ச்சி பெற்றது. அந்தவொரு போக்கு மட்டுமே உண்மையான பலனை நல்கியுள்ளது. இந்தப் போக்கு முக்கியமாக மார்க்ஸின்1 பெயரோடு இணைந்திருக்கிறது.

இங்குப் பொருள்முதல்வாதக் கருத்துநிலைக்குத் திரும்பி வருவதன் விளைவாக ஹெகலியத் தத்துவத்திலிருந்து பிரிந்து செல்ல நேர்கிறது. அதாவது, எதார்த்தமான உலகத்தை – இயற்கை, வரலாறு இரண்டையும் – முன்னரே மனதில் உருவாக்கிக் கொண்ட கருத்துமுதல்வாத கட்டுக்கதைகள் எதுவுமில்லாமல் அணுகுகின்ற ஒவ்வொரு வருக்கும் அது எப்படிக் காட்சி தருகிறதோ, அப்படியே புரிந்து கொள்வதென இக்கருத்துப் பிரிவினர் முடிவெடுத்தனர் என்பது இதன் பொருளாகும். கற்பனாவாத விளக்கங்கள் இல்லாமல், தாமாகவே உருவான மெய்விவரங்களோடு பொருத்திப் பார்க்க முடியாத கருத்துமுதல்வாதக் கட்டுக்கதை ஒவ்வொன்றையும் பலியிடுவதென்று ஈவிரக்கமின்றித் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொருள்முதல்வாதம் என்பதற்கு இதைக்காட்டிலும் கூடுதலான அர்த்தம் ஏதுமில்லை. ஆனால், இங்கே பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டம் முதல்முறையாக உண்மையிலேயே அக்கறையோடு கவனிக்கப்பட்டது. தொடர்புடைய அறிவுத் துறைகள் அனைத்திலும் – குறைந்தபட்சம் அதன் அடிப்படைக் கூறுகளிலாவது – முரணின்றி எடுத்துச் சொல்லப்பட்டது.

ஹெகல் வெறுமனே ஒதுக்கி வைக்கப்படவில்லை. மாறாக, மேலே விளக்கப்பட்ட அவருடைய தத்துவத்தின் புரட்சிகரமான பகுதியே அதாவது இயக்கவியல் வழிமுறையே தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழிமுறை அதன் ஹெகலிய வடிவத்தில் பயன்படுத்த முடியாததாய் இருந்தது. ஹெகலின் கருத்துப்படி, இயக்கவியல் என்பது கருத்துருவின் சுயவளர்ச்சியே (self-development of the concept) ஆகும். [ஹெகலின் கருத்துப்படி] தனிமுதலான கருத்துரு (absolute concept) ஊழிக் காலந்தொட்டு நிலவி வருவது மட்டுமல்ல – எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை – இன்று நிலவுகின்ற மொத்த உலகத்தின் மெய்யான உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவாகவும் இருக்கிறது. [ஹெகலின்] தர்க்கவியல் (Logic) நூலில் மிக விரிவாக விளக்கப்படுகின்ற தொடக்கநிலைக் கட்டங்கள் அனைத்தின் வழியாகவும் அது தன்னை நோக்கித் தனக்குள்ளேயே வளர்ச்சி அடைகிறது. அக்கட்டங்கள் அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கின்றன. பிறகு அது இயற்கையாக மாறுவதன் மூலம் தன்னை “அந்நியமாக்கிக் கொள்கிறது” (alienates). அங்கே தன்னுடைய சுய உணர்வு இல்லாமலே, இயற்கையின் கட்டாயம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு, அது ஒரு புதிய வளர்ச்சிக்கு உள்ளாகிறது. இறுதியில் மறுபடியும் மனிதனுக்குள் சுய உணர்வாக வந்து சேர்கிறது. தனிமுதலான கருத்து, அதன் செழுமையற்ற வடிவத்திலிருந்து முடிவில் ஹெகலின் தத்துவத்தில் முழுமையாக அதன் மூல வடிவத்துக்கு மீண்டும் வந்து சேரும் வரையில், இந்த சுய உணர்வு, வரலாற்றில் மறுபடியும் தலை தூக்குகிறது. ஆகவே, ஹெகலின் கருத்துப்படி, இயற்கையிலும் வரலாற்றிலும் காணப்படுகின்ற இயக்கவியல் வளர்ச்சி, அதாவது, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு நடைபெறுகின்ற முற்போக்கு இயக்கத்தின் காரண வகைப்பட்ட இடைத்தொடர்பு, கோணல் மாணலான இயக்கங்கள் அனைத்திலும், தற்காலிகமான பின்னடைவுகளிலும், தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்கிறது. அது, ஊழிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற கருத்துருவினுடைய சுய-இயக்கத்தின் ஒரு நகல் மட்டுமே. அது எங்கே போகிறதென்று யாரும் அறிந்ததில்லை. ஆனால் எவ்வாறாயினும் சரி, எந்தவொரு சிந்திக்க வல்ல மனித மூளையையும் சாராமல் சுதந்திரமாக இயங்குகிறது. இந்தச் சித்தாந்த நெறிபிறழ்வை ஒழித்தாக வேண்டியிருந்தது.

எதார்த்தமான பொருள்களைத் தனிமுதலான கருத்துருவின் (absolute concept) ஏதோவொரு கட்டத்தின் பிரதிபிம்பங்களாகக் கருதுவதற்குப் பதிலாக, எங்கள் மூளையில் இருந்த கருத்துருக்களை எதார்த்தமான பொருள்களின் பிரதிபிம்பங்களாக, மீண்டும் ஒருமுறை பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொண்டோம். இவ்வாறாக, இயக்கவியல் என்பது, வெளிப்புற உலகம், மனித சிந்தனை ஆகிய இரண்டின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளின் விஞ்ஞானமாகத் தன்னை எளிதாக்கிக் கொண்டது. இயக்க விதிகளின் இந்த இரண்டு தொகுதிகளும் சாராம்சத்தில் ஒத்த தன்மை கொண்டவை. ஆனால், எந்த அளவுக்கு மனித மனம் அவற்றை உணர்வு பூர்வமாகச் செயல்படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமது வெளிப்பாட்டில் வேறுபடுகின்றன. இயற்கையிலும் இன்று வரையுள்ள மனித வரலாற்றின் மிகப் பெரும்பகுதியிலும், புறநிலைத் தேவை என்ற வடிவத்திலே, தற்செயலானதாகத் தோற்றமளிக்கும் முடிவில்லாத தொடர்வரிசையான நிகழ்வுகளின் நடுவே, இந்த விதிகள் உணர்வுகளைச் சாராமலேயே தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இதன்மூலம், கருத்துருக்களின் இயக்கவியலுங்கூட, எதார்த்த உலகின் இயக்கவியல் வழிப்பட்ட இயக்கத்தின் வெறும் உணர்வுபூர்வமான பிரதிபலிப்பு ஆயிற்று. இவ்வாறாக, ஹெகலின் இயக்கவியல் புரட்டிப் போடப்பட்டது. அல்லது சரியாகச் சொல்வதெனில், தலையை ஊன்றி நின்று கொண்டிருந்ததைத் திருப்பிப் போட்டுக் காலால் நிற்கும்படி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக எங்களின் மிகச் சிறந்த உழைப்புக் கருவியாகவும், எங்களின் மிகக் கூர்மையான ஆயுதமாகவும் இந்தப் பொருள்முதல்வாத இயக்கவியல் இருந்து வருகின்றது. குறிப்பிடத் தக்க செய்தி என்னவெனில், இதனை நாங்கள் மட்டுமே கண்டுபிடிக்கவில்லை. எங்களைச் சாராமலும், ஹெகலையும்கூடச் சாராமலும், சுயேச்சையான முறையில், ஜோசஃப் டித்ஸ்கென்* (Joseph Dietzgen) என்ற ஒரு ஜெர்மன் தொழிலாளியும் கண்டுபிடித்துள்ளார். (பார்க்க: மனித மூளைச் செயல்களின் சாரம், உடலுழைப்பாளரால் சொல்லப்படுவது2. ஹாம்புர்க், மாஸ்னர்).

இந்த முறையில், ஹெகலியத் தத்துவத்தின் புரட்சிகரக் கூறு ஒருவாறாக மீண்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதே வேளையில் அதன் முரணில்லாத செயலாக்கத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு ஹெகல் பயன்படுத்திய கருத்துமுதல்வாத அலங்காரத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

1. *ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு: இங்கே சொந்த முறையில் ஒரு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும். அண்மைக் காலமாக, இந்தக் கோட்பாட்டில் என்னுடைய பங்கைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் இங்கே சில விவரங்களைச் சொல்லாமலிருக்க முடியாது. மார்க்சுடன் எனக்கிருந்த நாற்பது ஆண்டுகால ஒத்துழைப்பின் போதும், அதற்கு முன்னரும், இந்தக் கோட்பாட்டுக்கான அடித்தளத்தை உருவாக்குவதிலும், மேலும் குறிப்பாக, அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் சற்றே சுதந்திரமான பங்கு எனக்கிருந்தது என்பதை நான் மறுக்க முடியாது. ஆனால் அதன் முtதன்மையான அடிப்படைக் கொள்கைகளில், சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், மேலும் அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும். ஒரு சில தனிச்சிறப்பான துறைகளில் என்னுடைய பணியைத் தவிர்த்து, என்னுடைய பங்களிப்பினைத் தாராளமாக மார்க்ஸ் என் உதவியின்றியே செய்திருக்க முடியும். ஆனால் மார்க்ஸ் செய்து முடித்ததை நான் ஒருபோதும் சாதித்திருக்க முடியாது. எங்களுள் மற்ற எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயாந்து நின்றார், தொலைநோக்குடன் பார்த்தார், பரந்த விரைவான பார்வையைக் கொண்டிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதையாக விளங்கினார். மற்றவர்களாகிய நாங்கள், அதிகமாகச் சொல்லிக் கொள்வதென்றால், திறமைசாலிகளாக இருந்தோம். அவர்மட்டும் இல்லையென்றால், இந்தக் கோட்பாடு இன்று உள்ளதுபோல் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, இக்கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது பொருத்தமே.

2. [*டித்ஸ்கென் எழுதிய மனித மூளைச் செயல்களின் சாரம், உடலுழைப்பாளரால் சொல்லப்படுவது. சுத்தமான நடைமுறைப் பகுத்தறிவு பற்றிய புதிய விமர்சனம் என்னும் நூலை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.]


No comments:

Post a Comment