Sunday 16 December 2018

நமது சிந்தனை எதார்த்த உலகை அறிந்துணரும் திறன் கொண்டதா? - எங்கெல்ஸ்


“சிந்தனைக்கும் இருத்தலுக்கும் உள்ள உறவைப் பற்றிய பிரச்சினைக்கு மற்றொரு பக்கமும் உண்டு: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது சிந்தனைகள் இந்த உலகத்தோடு எத்தகைய உறவைக் கொண்டுள்ளன? நமது சிந்தனை எதார்த்த உலகை அறிந்துணரும் திறன் கொண்டதா? எதார்த்தமான உலகத்தைப் பற்றிய நமது கருத்துக்களிலும் எண்ணங்களிலும் எதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்க நம்மால் முடிகிறதா? தத்துவவியல் மொழியில் இந்தப் பிரச்சினையானது, சிந்தனை, இருத்தல் ஆகிய இரண்டின் முற்றொருமை பற்றிய பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது.

தத்துவவாதிகளில் மிக அதிகப் பெரும்பான்மையினர் இந்தப் பிரச்சனைக்கு உடன்பாடான பதிலையே தருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஹெகலைப் பொறுத்தவரை இந்த உடன்பாடான கருத்து மிகவும் வெளிப்படை. ஏனெனில் எதார்த்த உலகில் நாம் அறிந்துணர்வது, துல்லியமாக அதன் எண்ண உள்ளடக்கத்தைத்தான்; அந்த எண்ண உள்ளடக்கமே உலகத்தை நிரந்தரக் கருத்தின் (absolute idea) படிப்படியான மெய்யுருக்காட்சியாக ஆக்குகின்றது.

இந்த நிரந்தரக் கருத்து அனாதி காலம் தொட்டு எங்கேயோ, இந்த உலகத்துக்குச் சார்பின்றி, உலகத்துக்கு முன்பாகவே இருந்து வந்திருக்கிறதாம். தன்னளவில் எண்ணத்தின் உள்ளடக்கமாகவே இருக்கின்ற ஒன்றை, சிந்தனையால் அறிந்துணர முடியும் என்பது மேற்கொண்டு நிரூபணம் எதுவும் தேவையின்றி வெளிப்படையாக விளங்கக் கூடியது. இங்கே எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது ஏற்கெனவே முன்நிபந்தனைகளில் பூடகமாய் உள்ளடங்கியுள்ளது என்பதும் அதே அளவுக்கு வெளிப்படையாகும். ஆனால், சிந்தனை, இருத்தல் ஆகியவற்றின் முற்றொருமை பற்றிய தன்னுடைய நிரூபணத்திலிருந்து, ஹெகல் மேலும் ஒரு முடிவுக்கு வருவதை அது எவ்விதத்திலும் தடுக்கவில்லை.

அதாவது, அவருடைய தத்துவம் அவருடைய சிந்தனைக்குச் சரியாக இருக்கின்ற காரணத்தால் அது ஒன்று மட்டுமே சரியானது. மனிதகுலம் அவருடைய தத்துவத்தை உடனடியாகக் கருத்துநிலையிலிருந்து செயல்முறைக்குக் கொண்டுவந்து, உலகம் முழுவதையும் ஹெகலியக் கோட்பாடுகளின்படி மாற்றியமைப்பதன் மூலம், சிந்தனை, இருத்தல் ஆகிய இரண்டின் முற்றொருமை தன்னுடைய சரித்தன்மையை (validity) நிரூபித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த இந்தப் பிரமை அநேகமாக எல்லாத் தத்துவவாதிகளுக்கும் இருந்தது எனலாம்.
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


No comments:

Post a Comment