Saturday 27 July 2019

தொழிலாளி வர்க்கமும் தேசியப் பிரச்சினையும் – 1913 - லெனின்

The Working Class and the National Question


ருஷ்யா, தேசிய இனங்கள் சம்பந்தப்பட்டவரை, ஒரு கதம்பமான நாடு. அரசாங்கக் கொள்கை- அது பூர்ஷ்வாக்களால் ஆதரிக்கப்படுகிற நிலவுடைமையாளர்களது கொள்கையேட - கறுப்பு நூற்றுவர் தேசிய வாதத்தில் ஊறியிருப்ப தாகும்.

ருஷ்யக் குடிமக்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ருஷ்ய மக்களினங்களின் பெரும்பான்மையினருக்கு விரோதமான வகையில் ஈட்டி போலத் தாக்குவது இந்தக் கொள்கை. இதற்குப் பக்கத்திலேயே மற்ற தேசிய இனங்களின் (போலிஷ், யூத, உக்ரேனிய, ஜார்ஜிய, இதரவை) பூர்ஷ்வா தேசிய வாதம் தன் தலையைத் தூக்குகிறது; ஒரு தேசியப் போராட்டம் அல்லது தேசியக் கலாச்சாரத்துக்கான போராட்டத்தின் மூலம் உழைப்பாளி வர்க்கத்தை, அதன் மகத்தான உலகு தழுவிய கடமைகளிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்கிறது.

வர்க்க உணர்வு கொண்ட எல்லாத் தொழிலாளர்களும் தேசியப் பிரச்சினையைத் தெளிவாக முன்வைப்பதும் தீர்ப்பதும் அவசியம்.

பூர்ஷ்வா வர்க்கம் மக்களோடு சேர்ந்து, உழைப்பில் ஈடுபடுகின்ற எல்லோருடனும் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அது தேசங்களின் முழு சுதந்திரத்துக்காகவும் சமமான உரிமைகளுக்காகவும் நின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள்-ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், நார்வே, மற்ற நாடுகள் - ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பின் கீழ் சுதந்திரமான தேசிய இனங்கள் சமாதானமாக எப்படி ஒத்து வாழ்கின்றன அல்லது ஒன்றுக் கொன்று எப்படி சமாதானமாகப் பிரிந்து விடுகின்றன என்பதற்கு நமக்கு உதாரணங்களைத் தருகின்றன.

இன்று பூர்ஷ்வாக்கள் தொழிலாளர்களைக் கண்டு அஞ்சி பிற்போக்காளர்களோடு, புரிஷ்கேவிச்சுகளோடு கூட்டணி ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்; அவர்கள் ஜனநாயகத்தைக் காட்டிக் கொடுத்து, தேசிய இனங்களுக்கிடையே ஒடுக்கு முறையை அல்லது சமத்துவமாக இல்லாத உரிமைகளை வலியுறுத்தித் தொழிலாளர்களைத் தேசியவாதக் கோஷங்களின் மூலம் கெடுக்கிறார்கள்.

நம் காலத்தில் தேசங்களின் உண்மையான சுதந் திரத்தையும் எல்லா தேசங்களின் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் காப்பாற்றுவது பாட்டாளி வர்க்கம் மட்டுமே.

பல தேசங்கள் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் ஒன்றுகூடி வாழ்வதற்கும் அல்லது பிரிந்து போய் வெவ்வேறு அரசுகளை அமைத்துக் கொள்வதற்கும் (அது அவர்களுக்கு அதிக வசதியாக இருக்குமானால், தொழிலாளி வர்க்கத்தினால் காப்பாற்றப்படுகிற முழுமையான ஜனநாயகவாதம் அவசியமாகும். எந்த தேசத்துக்கும் அல்லது எந்த ஒரு மொழிக்கும் தனியான சிறப்பு உரிமைகள் கிடையாது! ஒரு தேசியச் சிறுபான்மையைப் பொறுத்தவரையிலும் மிகக் குறைவான அளவுக்கு ஒடுக்குமுறை அல்லது மிகச் சிறிய அநீதி கூடக் கிடையாது! இவை தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் கொள்கைகள்.

முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் வெவ்வேறு தேசங்களின் தொழிலாளர்களைப் பிரித்து என்ன விலை கொடுத்தாவது பிரித்து வைத்திருக்க விரும்புகிறார்கள் ஆனால் ஆட்சியிலிருப்போர் கோடிக் கணக்கில் பணத்தைப் போட்டிருக்கும் லாபகரமான தொழில்களில் (லேனா தங்கச் சுரங்கங்களைப் போல) பங்குதாரர்கள் என்ற முறையில் சிறப்பான வகையில் கூடி வாழ்கிறார்கள்; மரபுவழிக் கிறிஸ்தவர்களும் யூதர்களும், ருஷ்யர்களும் ஜெர்மானியர்களும், போலிஷ்காரர்களும் உக்ரேனியர்களும், மூலதனத்தை வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் ஓன்றுசேர்ந்து எல்லா தேசங்களின் தொழிலாளர்களையும் சுரண்டுகிறார்கள்.

வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்கள் எல்லா தேசங்களின் தொழிலாளர்களுக்கும் இடையே ஒவ்வொரு தொழிலாளர் ஸ்தாபனத்திலும் கல்வி, தொழிற்சங்கம், அரசியல், இதரவை --முழு ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள். காடேட்டுகளான கனவான்கள் உக்ரேனியர்களுக்குச் சம உரிமைகள் வழங்குவதன் முக்கியத்துவத்தை மறுப்பது அல்லது குறைவாக மதிப்பதன் மூலம் தங்களையே அவமானப்படுத்திக் கொள்ளட்டும், எல்லா தேசங்களின் பூர்ஷ்வாக்களும் தேசியக் கலாச்சாரம், தேசியக் கடமைகள், இதரவை, இதரவை பற்றி பொய்யான சொற்களை உபயோகிப்பதன் மூலம் கிடைக்கின்ற சுகத்தை அனுபவிக்கட்டும்.

தேசியக் கலாச்சாரம், ''தேசிய-கலாச்சார சுயாட்சி'' பற்றிய இனிப்பான பேச்சுக்கள் தங்களைப் பிரித்து வைத்திருப்பதற்குத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் ஸ்தாபனங்களில் முழு சுதந்திரத்தையும் முழுமையான சமத்துவ உரிமைகளையும் காப்பாற்றி நிற்கிறார்கள் - அதுவே உண்மையான கலாச்சாரத்துக்கு உத்தரவாதம்.

உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் - சுதந்திரத்துக்கு ஆதரவாக, ஒடுக்கு முறைக்கு எதிராக இருப்பவர்கள் நெடுங்காலமாக இதற்குத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய உலகத்துக்கு, தேசிய ஒடுக்குமுறை, தேசிய சச்சரவு, தேசியத் தனிமை என்று உலகத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒரு புதிய உலகத்தை, எல்லா தேசங்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற உலகத்தை, எவ்விதமான தனி உரிமைகளும் அல்லது மிகச் சிறிய அளவுக்கு மனிதனை மனிதன் ஒடுக்கு வது கூட இல்லாத உலகத்தை எதிரே நிறுத்துகிறார்கள்
(பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் – பக்கம் – 78-81)

No comments:

Post a Comment