Monday 8 July 2019

11)புதிய உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயே முளைக்கின்றன என்பது பற்றி ஸ்டாலின்:-


புதிய உற்பத்திச் சக்திகளும் சரி, அவற்றிற்குகந்த உற்பத்தி உறவுகளும் சரி பழைய சமுதாய அமைப்பு முறைக்கு அப்பால் நின்றபடி, அந்த அமைப்பு முறை அழிந்து போன பிறகு தனியே முளைத்தெழுவதில்லை, அதற்குப் பதிலாக, அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயேதான் அவை முளைக்கின்றன. மனிதன் ஆர அமரச் சிந்தித்து உணர்வுபூர்வமாக வேலை செய்வதன் விளைவாக அவை எழுவது மில்லை. போகிற போக்கிலே உணர்வற்ற வகையிலே மனிதச்சித்தத்திற்கு அப்பாற்பட்டுத் தன்னியல்பாக அவை உதிக்கின்றன. போகிற போக்கிலே, மனித சித்தத்திற்கு அப்பாற்பட்டு அவை நிகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவதாக, இந்த உற்பத்தி முறை வேண்டுமா அல்லது அந்த உற்பத்திமுறை வேண்டுமா என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள மனிதர்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பது ஒரு காரணம். ஏனென்றால், ஒவ்வொரு புதிய தலைமுறையும் பிறந்து வாழத் தொடங்கும் போது, தனக்கு முன் சென்ற தலைமுறைகளின் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகளையும், உற்பத்தி உறவுகளையும் அது காண்கிறது. எனவே, உற்பத்தித் துறையில் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள எல்லா வற்றையும் அந்தத் தலைமுறை ஏற்றுக் கொண்டு, அவற்றிற்கு ஏற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முதன் முதலில் ஏற்படுகிறது. அப்படிச் செய்தால்தான் பொருளாய்த செல்வங்களை அதனால் உற்பத்தி செய்ய இயலும்.

இரண்டாவதாக: ஏதாவதொரு உற்பத்திக் கருவியை முக்கிய மாகக் கருது கிற காலத்தில் - உற்பத்தி சக்திகளின் ஏதாவதொரு அம்சத்தை முதன்மைப்படுத்துகிற காலத்தில் - அப்படி முக்கியப் படுத்து வதனால் சமுதாயத் துறையில் என்ன விளைவுகள் உண்டாகும் என்று மனிதர்கள் அறிவதில்லை; புரிந்து கொள்வது மில்லை, சிந்திக்கவும் காத்திருப்பதில்லை. தங்களுடைய அன்றாட நலன்களைப் பற்றித்தான், தங்களுடைய உழைப்பின் பளுவை எப்படிக் குறைப்பது என்பதைப் பற்றித்தான் - தமக்கு ஏதாவது நேரடியாகக் கை மேல் கிடைக்கக்கூடிய உருப்படியான பலன் களைப் பெறுவதைப் பற்றித்தான் - அவர்களின் சிந்தனை உள்ளது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் 49-50)


No comments:

Post a Comment