Monday 8 July 2019

08)மார்க்சிய - லெனினியத்தின் பலம், அதன் உயிர்நாடி எதிலிருக்கிறது? என்ற கேள்வியை ஸ்டாலின் கேட்டு பதிலளிக்கிறார்:-.


மார்க்சியம் - லெனினியத்தின் பலம், அதன் உயிர்நாடி எதிலிருக்கிறது? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டு அது தனது வேலைகளைச் செய்கிறது - சமுதாயத்தின் யதார்த்த வாழ்விலிருந்து எப்பொழுதும் தன்னைக் கத்தரித்துக் கொள்வது கிடையாது என்கிற உண்மையில் அடங்கியுள்ளது.

அப்படியென்றால், சமுதாயக் கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும், அரசியல் கண்ணோட்டங்களுக்கும், அரசியல் நிறுவனங்களுக்கும் சமுதாய வாழ்வில் ஒரு முக்கியத்துவமும் கிடையாது என்று முடிவு செய்வதா? சமுதாய நிலையையும், சமுதாய வாழ்வின் பொருளாயத நிலைமைகளையும் அவை பரஸ்பரம் பாதிப்பதில்லை என்று முடிவு கட்டுவதா? மார்க்சினுடைய வார்த்தைகளிலிருந்து எழுவது இந்த முடிவுதானா? இல்லவே இல்லை. சமுதாயக் கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும், கண்ணோட்டங்களுக்கும், அரசியல் நிறுவனங்களுக்கும் எது தோற்றுவாய் என்பதைப் பற்றித்தான் இது வரை நாம் பேசிக் கொண்டிருந்தோம்; அவை எப்படி உதிக்கின்றன என்பதைப் பற்றித்தான் - சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு நிலைமைகளின் பிரதிபலிப்புதான் அதன் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வு என்கிற விசயத்தைப் பற்றித்தான் - இது வரை நாம் பேசிக் கொண்டிருந்தோம்.

சமுதாயக் கருத்துக்கள், கொள்கைகள், அபிப்பிராயங்கள், அரசியல் நிறுவ னங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் என்ன? சமுதாயத்தில் அவை என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று கேட்கலாம். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அவற்றை மறுக்கவில்லை. மாறாக, சமுதாய வாழ்வில், சமுதாய வரலாற்றில், அவை வகிக்கும் முக்கியமான பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் அது வலியுறுத்துகிறது.

சமூகக் கருத்துக்களிலும், கொள்கைகளிலும் வெவ்வேறு வகைப் பட்டவை உண்டு. என்றோ மறைந்தொழிந்து போயிருக்க வேண்டிய பழைய கருத்துக்களும் கொள்கைகளும் இன்னும் இருந்து வருகின்றன. சமுதாயத்தில் நசிந்து வரும் சக்திகளின் நலன்களை அவை பேணிப் பாதுகாக்கின்றன. சமுதாயத்தின் வளர்ச் சிக்கும் முன்னேற்றத்தக்கும் குறுக்கே விழுந்து தடங்கல் செய்வதில்தான் இவற்றின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. மறுபுறம் புதிய முற்போக்கான கருத்துக்களும் கொள்கைகளும் உள்ளன.

சமுதாயத்திலுள்ள முற்போக்கான சக்திகளின் நலன்களுக்கு இவை சேவை புரிகின்றன. இவற்றின் முக்கியத்துவம் எதில் அடங்கியுள்ளது? சமுதாயத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் இவை சுலபமாக்குகின்றன என்பதில்தான் இவற்றின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. மேலும் சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை எவ்வளவுக்கெவ்வளவு, சரியாக அவை பிரதிபலிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு, அவற்றின் முக்கியத்துவம் அதிகமாகிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் - 26-27)

No comments:

Post a Comment