Friday, 4 January 2019

ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் 02 - குரோபர் ஃபர்


(பல கிளைகளைக்கொண்ட 'வலதுசாரி டிராட்ஸ்கிய சதியின்' ஒரு கிளையில் குருச்சேவ் இரகசிய உறுப்பினராக இருந்திருக்கக் கூடும்.)

“துக்காசெவ்ஸ்கி கைது செய்யப்பட்டார் என்றும், அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் என்றும் தெரிந்த பிறகே புக்காரின் துக்காசெவ்ஸ்கியின் பெயரைக் குறிப்பிட்டார் என்பதை நாம் பார்த்தோம். ஆனால், ஒரு சக சதிகாரரான எஸோவ் - இன் பெயரை அவர் உயிரை விடும்வரை வெளிப்படுத்தவேயில்லை. எஸோவின் பெயரை வெளிபடுத்தாமலே உயிரைவிடுமளவுக்கு புக்காரினுக்கு உள்நோக்கம் இருந்ததென்றால், அவர் அதே உள்நோக்கத்திற்காக மற்ற சக சதிகாரர்களையும் அதேபோல பாதுகாத்திருக்க மாட்டாரா? என பின்னர் ஃப்ரினோவ்ஸ்கி குறிப்பிடுவது முக்கியமானது.

மறைந்திருந்த இந்த சதிகாரர்களில் குருச்சேவும் ஒருவரா?? அல்லது அவரைப்பற்றி புக்காரின் தெரிந்திருந்தாரா? என்பது நமக்கு தெரியாது. 1937 – 38 க்குப்பிறகு 23 சோவியத் சோசலிச குடியரசு ஒன்றிய அரசுக்கு எதிரான சதிகாரர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களில் சிலர் உயர்ந்த பதவிகளிலும் இருந்தார்கள். புக்காரின் இறந்து நீண்டநாள் ஆனப்பின்னும் குருச்சேவ் அவருக்கு | விசுவாசமாக இருந்தார் என்பதையும்கூட நாம் அறிவோம்.

பல கிளைகளைக்கொண்ட 'வலதுசாரி டிராட்ஸ்கிய சதியின்' ஒரு கிளையில் குருச்சேவ் இரகசிய உறுப்பினராக இருந்திருக்கக் கூடும். அதேபோல அவர் உறுதியாக ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான பிற சதிகளிலும் ஈடுபட்டிருந்தார் என்று நாம் அறிந்த உண்மைகளிலிருந்து தெரிகிறது:

*1953 மார்ச் 5-இல், - இன்னும் ஸ்டாலின் இறந்துவிடாத நிலையில்- பழைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து முந்தைய அக்டோபரில் 19-ஆவது கட்சிக் காங்கிரசில் ஏற்பளிக்கப்பட்ட விரிவடைந்த தலைமைக்குழுவை ஒழித்தனர். இது கிட்டத்தட்ட கட்சிக்குள் நிலவிய ஒரு சதி. இது வாக்களிக்கப்பட்டோ, அல்லது தலைமைக்குழுவிலோ அல்லது மத்தியக் குழுவிலோ விவாதிக்கப்பட்டோ முடிவெடுக்கவில்லை.”
(பக்கம் 306-307)
(விரிவாக நூலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்)

ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் 01 - குரோபர் ஃபர்


(ஸ்டாலினைப் பற்றிய பொய்களை குரோபர் ஃபர் ஒவ்வொன்றாக நூலில் அம்பலப்படுத்துகிறார். அம்பலப்படித்தியப் பின்பும் பழைய பொய்யை பலர் தொடர்கின்றனர். பதிலளிக்கப்பட்டதற்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஸ்டாலின் எழுதிய “சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள்” மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் தொடர்ச்சியாக செல்கிறது. அந்நூலையும் படித்து, நமது சித்தாந்த வளத்தை வளர்த்துக் கொள்வோம்.)


“1930களில் நடந்த நியயப்படுத்த முடியாத ஒடுக்குமுறைகளை பெரும்பாலானவர்கள் மீது செலுத்தியதில் குருச்சேவுக்கு பெரும்பங்கு இருந்தது. அப்படியான தனது பங்கை யாராவது வெளிக்கொண்டு வருவதை தடுத்து நிறுத்தவும், அதற்கான பழியை ஸ்டாலின்மீது சுமத்தவும், அரசியல் ரீதியாக மறுவாழ்வு அளிக்கப்படுபவர்கள் குற்றவாளிகளோ அல்லது குற்றமற்ற வர்க ளோ அவர்களுக்கு அரசியல் ரீதியாக மறுவாழ்வுகளைத் துவக்குவதன் மூலம் கட்சியின் மேல்தட்டினர் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்று குருச்சேவ் கணக்கிட்டார். மாஸ்கோவிலும், உக்ரெய்னிலும்கூட பெரும்பாலானவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை வடிவமைத்தவர் என்று பெயர்பெற்ற, பரவலாக அறியப்பட்ட அவர் மீதான பொது மதிப்பீட்டை, அதற்கான பழியை இறந்து போன ஸ்டாலினுக்கு மாற்றுவதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களிடம் - குறிப்பாக தப்பித்து வாழும் அவர்கள் குடும்பத்தினரிடம் காணப்படும் தன் மீதுள்ள பகைமை உணர்வை; அதன் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று குருச்சேவ் கருதினார்.

குருச்சேவின் உரை இதுவரை மதிப்புமிக்கதாக இருந்து வந்தது. இங்கே வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் அவ்வாறு மதிப்பிடுவது தவறு என்கிறது. அது ஏராளமான கேள்விகளை நமக்கு விட்டுச்செல்கிறது. உண்மையான ஆவணங்களை மறைத்து, போலியான ஆய்வு மூலம் குருச்சேவ் தனது உரையை ஏன் நிகழ்த்தினார்? பொய்களைத்தவிர வேறொன்றும் இல்லாத அவ்வுரையின் மூலம் தனது நீண்டகால அரசியல் நிலைபாடுகளைத் தியாகம் செய்யும் அளவுக்கு ஏன் சென்றார்?

சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு ஒரு பதிலைக் கொண்டு வந்தது . குருச்சேவும் அவரது கூட்டாளிகளும் ஸ்டாலினின் தலைமையின்கீழ் நம்பிக்கையுடன் கடைப்பிடித்த அரசியல் பாதையை கைவிட்டு, முற்றிலும் மாறான வழியில் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தை கூர்மையாக வழிநடத்த விரும்பினார்கள். குருச்சேவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சில பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை விரிவாக நாம் குறிப்பிடுள்ளோம். அவற்றில் மார்க்சிய - லெனினிய கொள்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி பார்த்தது.

இந்தக் கோட்பாட்டில் சில உண்மைகள் உள்ளன. அதற்கான அடித்தள சிந்தனைகள் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்தன. இந்தக் கொள்கைகளின் பிறப்பிடமாக குருச்சேவும், அவரது சீடரான பிரஸ்னேவ் மற்றும் பிறரும் இருந்தனர். இவர்கள் குருச்சேவ் சோவியத் தலைமையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பிருந்தே இருந்தனர் என்றும்; அது ஸ்டாலின் இறந்ததும் உடனடியாக செயலில் இறங்கியது என்றும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. 1940-இன் பிந்தைய பகுதியிலும் மற்றும் 1950-இன் முந்தைய பகுதியிலுமான "ஸ்டாலின் மறைந்த'' காலகட்டம் அவற்றில் பலவற்றை சார்ந்து இருந்ததைக் காணலாம்.

இந்தக் கொள்கைகளை ஸ்டாலின் எந்த அளவுக்கு ஆதரித்தார் அல்லது எதிர்த்தார் என்பதை நுணுக்கமாகக் கண்டறிவது சிரமமானது. அவர் தனது கடைசி ஆண்டுகளில் அரசியல்ரீதியாக மிகமிக்குறைந்த அளவிலேயே செயல்பட்டார். காலத்துக்கேற்ற, கம்யூனிஸத்தை நோக்கிய வித்தியாசமான பாதையை உறுதிப்படுத்த ஸ்டாலின் முயற்சித்தார் என்று தெரிகிறது. அவரது கடைசி நூலான 'சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள்' (Economic Problems of Socialism in the USSR) என்ற நூலில் அது பிரதிபலிக்கிறது. பின்னர் 'நம்பமுடியாத அளவுக்கு ஸ்டாலினின் பங்கு இடது பிறழ்வாக இருந்தது என மிகோயியன் 1952 -இல் நடந்த 19-ஆவது கட்சி காங்கிரசில் எழுதிய எடுத்துக்காட்டு முக்கியமானதாகும். ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு உடனடியாக 'கூட்டுத்தலைமையில் இருந்த அனைவரும் ஸ்டாலினின் நூலில் குறிப்பிட்டிருந்த எல்லாவற்றையும் கைவிடவும், கட்சி நிர்வாகத்தை புதிய வழிமுறையில் கொண்டு செல்வதை கைவிடவும் ஒத்துக்கொண்டனர்.”
(பக்கம் 296-297)

Sunday, 16 December 2018

மார்க்சிய பொருள்முதல்வாதத்திற்கு முன்பான பொருள்முதல்வாதம் குறித்து எங்கெல்ஸ்:-


“சென்ற நூற்றாண்டின் [18-ஆம் நூற்றாண்டின்] பொருள்முதல்வாதம் பெருமளவுக்கு எந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லா இயற்கை விஞ்ஞானங்களுள் எந்திரவியல் (Mechanics) மட்டுமே, சொல்லப் போனால் வான்மண்டல, பூமண்டல சடப்பொருள்களின் எந்திரவியல் மட்டுமே, சுருங்கச் சொன்னால், ஈர்ப்புச் சக்தியின் (gravity) எந்திரவியல் மட்டுமே, ஏதோவொரு திட்டவட்டமான முடிவுக்கு வந்திருந்தது. அக்காலத்திய இரசாயனவியல் அதன் குழந்தைப் பருவத்தில், ஃபுளோஜிஸ்தான் (phlogistic) வடிவத்தில் மட்டுமே இருந்தது. [பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இரசாயனவியலில் நிலவிவந்த ஃபுளோஜிஸ்தான் கோட்பாடு. சில பொருள்களில் ஃபுளோஜிஸ்தான் என்னும் ஒரு பொருள் இருப்பதாலேயே அவை எரிகின்றன என்று கூறியது]. உயிரியல் இன்னும் தாலாட்டுப் பருவத்தில் இருந்தது. தாவர வகைகளும் விலங்கு உயிரினங்களும் மேலெழுந்த வாரியாக மட்டுமே ஆராயப்பட்டிருந்தன. அவை முற்றிலும் எந்திரவியல் காரணங்களாலேயே விளக்கப்பட்டன.

டெக்கார்ட்டேவுக்கு விலங்கு ஓர் எந்திரம்; அதைப்போலவே பதினெட்டாம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதிகளுக்கு மனிதன் ஓர் எந்திரம். இரசாயனவியல் மற்றும் அங்கக இயற்கையின் (organic nature) நிகழ்வுப்போக்குகளுக்கு எந்திரவியலின் விதிகளும் பொருந்துவனவே என்றாலும், அவ்விதிகள் மேலும் உயர்நிலையான இதர விதிகளால் பின்னணிக்குத் தள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொள்ளாமல் அத்தகைய வளர்ச்சிப் போக்குகளுக்கு எந்திரவியலின் அளவுகோல்களை மட்டுமே பொருத்திப் பார்த்தது, பாரம்பரிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் குறிப்பான முதலாவது குறைபாடாகும். அந்தக் காலகட்டத்தில் இது தவிர்க்க முடியாத குறைபாடே.

இந்தப் பொருள்முதல்வாதத்தின் குறிப்பான இரண்டாவது குறைபாடு, பிரபஞ்சத்தை ஒரு நிகழ்வுப்போக்காகவும் இடையறாத, வரலாற்று ரீதியான, வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் பருப்பொருளாகவும் புரிந்துகொள்ள முடியாத அதன் இயலாமை ஆகும். இது அக்கால கட்டத்திய இயற்கை விஞ்ஞானத்தின் தரத்துக்கும், அதனோடு தொடர்புடைய இயக்க மறுப்பியலுக்கும் அதாவது இயக்கவியலுக்கு எதிரான தத்துவப்படுத்தலுக்கும் ஏற்றவாறே இருந்தது எனலாம். இயற்கையானது நிரந்தரமான இயக்கத்தில் இருக்கிறது என்ற அளவுக்கு அறியப்பட்டிருந்தது. ஆனால் அக்காலத்தில் நிலவிய கருத்துகளின் அடிப்படையில், இந்த இயக்கமும்கூட நிரந்தரமாகவே ஒரு வட்டத்தில் சுற்றி வந்தது. ஆகவே, அந்த இடத்தைவிட்டு ஒருபோதும் நகரவில்லை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விளைவுகளையே உருவாக்கியது. அந்தக் காலகட்டத்தில் இத்தகைய கருத்துரு தவிர்க்க முடியாதது.

சூரிய மண்டலத்தின் தோற்றத்தைப் பற்றிய கான்ட்டின் தத்துவம் அண்மைக் காலத்தில்தான் முன்வைக்கப்பட்டிருந்தது. [சுழலும் பிரகாசமான முகிற்படலத் திரளிலிருந்து சூரியனும் கிரகங்களும் தோன்றின எனக் கூறும் தத்துவம்]. ஆனால் அது இன்னமும் வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயமாகவே கருதப்பட்டது. பூமியின் வளர்ச்சி குறித்த வரலாறு, புவியியல் இவைபற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. எளிமையானதிலிருந்து சிக்கலானதுக்கு மாறிய வளர்ச்சிப்போக்கின் ஒரு நீண்ட தொடர்வரிசையின் விளைவுதான் இன்றைய இயற்கை உயிரினங்கள் என்னும் கருத்துருவை அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞான ரீதியாக அறவே முன்வைக்க முடியவில்லை. எனவே இயற்கையைப் பற்றிய வரலாற்றுப் புறம்பான ஒரு கண்ணோட்டம் தவிர்க்க முடியாதது. இதனடிப்படையில் நாம் பதினெட்டாம் நூற்றாண்டுத் தத்துவவாதிகளைக் குறை கூற அதிகமான காரணமில்லை. ஏனெனில், இதே குறை ஹெகலிடமும் காணப்படுகிறது.

ஹெகலின் கருத்துப்படி, இயற்கையானது, வெறுமனே கருத்தின் ”அந்நியம்” (alienation of idea) ஆகும்.எனவே அது. காலத்தோடு இயைந்து வளர்ச்சிபெற இயலாதது. அது தன்னுள் அடங்கியிருக்கும் அனைத்து வளர்ச்சிக் கட்டங்களையும் ஒரே சமயத்திலும், ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றொன்றையும் வெளிக்காட்டும்படியாக, அதன் பன்முகத் தன்மையை விண்வெளியில் விரித்துப் பரப்ப மட்டுமே திறன் கொண்டது; திரும்பத் திரும்ப அதே நிகழ்வுப் போக்குகளை நிரந்தரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளது என்று ஹெகல் கருதுகிறார். அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படை நிபந்தனையான காலப் பரப்புக்கு வெளியே, விண்வெளியில் வளர்ச்சி என்னும் அபத்தத்தை ஹெகல் இயற்கையின் மீது சுமத்துகிறார்.

புவியியல், கருவியல், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலியல், அங்கக இரசாயனவியல் ஆகியவை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அதே காலத்தில், பின்னர் தோன்றிய பரிணாமத் தத்துவத்தின் ஒளிமயமான முன்னறிகுறிகள் இந்தப் புதிய விஞ்ஞானங்களின் அடிப்படையில் எங்கெங்கும் தோன்றிக் கொண்டிருந்தபோது (எடுத்துக்காட்டாக, கோதே மற்றும் லாமார்க் ஆகியோர்) ஹெகல் இவ்வாறு செய்கிறார். ஆனால் ஹெகலின் அமைப்புமுறைக்கு அது தேவையாயிருந்தது. எனவே அமைப்புமுறையின் பொருட்டு, வழிமுறை தனக்குத் தானே பொய்யாக மாற வேண்டியிருந்தது.

வரலாற்றுக்குப் புறம்பான இதே கருத்துரு வரலாற்றுத் துறையிலும் நிலவியது. இங்கே மத்திய காலங்களின் மிச்ச மீதங்களுக்கு எதிரான போராட்டம் பார்வையை மறைத்தது. மத்திய காலங்கள் என்கிற வரலாற்றுக் கட்டம் ஆயிரம் ஆண்டுகால உலகளாவிய காட்டுமிராண்டித்தன வரலாற்றில் ஏற்பட்ட ஒரு குறுக்கீடாகவே கருதப்பட்டது. மத்திய காலங்களில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றம் – ஐரோப்பியக் கலாசாரப் பரப்பின் விரிவாக்கம், அங்கே அக்கம் பக்கமாக உருவெடுத்த நிலைபெறத் தக்க மாபெரும் நாடுகள், இறுதியாக, பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரும் தொழில்நுட்ப முன்னேற்றம் – இவையனைத்தும் பார்க்கப்படவில்லை. இவ்வாறாக, மாபெரும் வரலாற்று இடைத்தொடர்புகளைப் பற்றிப் பகுத்தறிவு பூர்வமான ஆழமான பார்வை இயலாமற் போனது. வரலாறு என்பது அதிகமாகப் போனால் தத்துவவாதிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான எடுத்துக்காட்டுகள், விளக்கப்படங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகவே விளங்கியது.

ஜெர்மனியில் 1850-களில் பொருள்முதல்வாதத்தில் பரிசோதனை நிகழ்த்திக் கொண்டிருந்த, கொச்சைப்படுத்தும் சில்லரைப் பிரச்சாரகர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் இக்குறைபாட்டிலிருந்து எவ்வகையிலும் மீளவே இல்லை. இதற்கிடையில் ஏற்பட்ட, இயற்கை விஞ்ஞானத்தின் அனைத்து முன்னேற்றங்களும் உலகத்தைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எதிரான புதிய சான்றுகளாக மட்டுமே அவர்களுக்கு உதவின. உண்மையில், அவர்களின் தத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்கும் பணியில் அவர்கள் சிறிதும் ஈடுபடவில்லை.

கருத்துமுதல்வாதம் தனது கடைசிக் கட்டத்தில் இருந்த போதிலும், 1848 புரட்சி அதற்கு மரண அடி கொடுத்திருந்த போதிலும், அந்தத் தருணத்தில் பொருள்முதல்வாதம் இன்னும் கீழே வீழ்ந்துவிட்டதைக் காணும் திருப்தி அதற்குக் கிடைத்தது. ஃபாயர்பாக் இத்தகைய பொருள்முதல் வாதத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள மறுத்தது கேள்விக்கிடமின்றி மிகச் சரியே. ஆனால் இந்த ஊர்சுற்றிப் போதகர்களின் கோட்பாடுகளைப் பொதுவான பொருள்முதல்வாதத்துடன் போட்டுக் குழப்பியிருக்கக் கூடாது.

எனினும் இங்கே இரண்டு விஷயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும். முதலாவதாக, ஃபாயர்பாக்கின் வாழ்நாளின்போதே இயற்கை விஞ்ஞானம், தீவிரமாக நொதித்துப் பொங்கும் நிகழ்வுப் போக்கில்தான் இன்னும் இருந்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளில்தான் அது தெளிவுகொடுக்கும் ஒரு சார்புநிலை முடிவை எட்டியுள்ளது. இதுகாறும் கேள்விப்பட்டிராத அளவுக்குப் புதிய விஞ்ஞான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு இடையேயான உறவுநிலைகளை நிலைநாட்டுவதும், அதன்மூலமாக, ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கமாய்த் தொடர்ந்துவந்த கண்டுபிடிப்புகளின் குழப்பத்துக்கு நடுவே ஒழுங்கை ஏற்படுத்துவதும் மிகவும் அண்மைக் காலத்தில்தான் சாத்தியமாகியுள்ளது.

தீர்மானகரமான கண்டுபிடிப்புகளுள், உயிரணு, ஆற்றலின் உருமாற்றம், டார்வினுடைய பெயர் சூட்டப்பட்ட பரிணாமத் தத்துவம் ஆகிய மூன்று கண்டுபிடிப்புகளையும் காண்கின்ற வரை ஃபாயர்பாக் உயிரோடிருந்தார் என்பது உண்மையே. ஆனால், அந்தக் காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞானிகளே இன்னும் கேள்விக்குள்ளாக்கிய அல்லது போதிய அளவுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்திராத கண்டுபிடிப்புகளை, அவற்றின் முழு மதிப்பையும் அறிந்து பாராட்டும் வகையில், கிராமப்புறத் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தன்னந்தனியான தத்துவவாதியால், விஞ்ஞான முன்னேற்றங்களைப் போதிய அளவுக்கு எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இதற்கு, ஜெர்மனியில் நிலவிய படுகேவலமான நிலைமைகளை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும். அவற்றின் விளைவாக, மணலில் கயிறு திரிக்கும், கதம்பவாதக் கொசுவேட்டைக்காரர்கள் தத்துவவியல் துறையின் தலைமைப் பதவிகளைக் கைப்பற்றியிருக்க, அவர்கள் அனைவருக்கும் மேலான சிறப்புக் கொண்ட ஃபாயர்பாக், ஒரு சிறு கிராமத்தில் மனம் துருப்பிடித்துப் புழுங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. எனவே இப்பொழுது சாத்தியமாகிவிட்டதும், பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் ஒருதலைச் சார்பானவை அனைத்தையும் அகற்றியதுமான, இயற்கையைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்துரு (historical conception of nature) ஃபாயர்பாக்குக்குக் கைவரப் பெறாமலே போனதற்கு அவரைக் குற்றம் சொல்ல முடியாது.

இரண்டாவதாக, இயற்கை–விஞ்ஞானப் பொருள்முதல்வாதம் (natural-scientific materialism) உண்மையில் “மானுட அறிவு என்ற மாளிகையின் அடித்தளம், ஆனால் அதுவே மாளிகை ஆகிவிடாது” என்று ஃபாயர்பாக் மிகச் சரியாகவே வலியுறுத்தினார். ஏனெனில், நாம் இயற்கையில் மட்டுமின்றி, மனித சமுதாயத்திலும் வாழ்கிறோம். இயற்கைக்குச் சற்றும் குறையாத அளவிலே, மனித சமுதாயமும் தனக்கென வளர்ச்சியின் வரலாற்றையும் தனக்கான விஞ்ஞானத்தையும் கொண்டிருக்கிறது. ஆகவே, சமுதாயம் பற்றிய விஞ்ஞானத்தை அதாவது, வரலாற்றியல், தத்துவவியல் விஞ்ஞானங்கள் என்று சொல்லப்படுவனவற்றின் மொத்தத் தொகையைப் பொருள்முதல்வாத அடித்தளத்துடன் இசைவுபடுத்துவதையும், இந்த அடித்தளத்துக்கு ஏற்ப அவற்றை மறுநிர்மாணம் செய்வதையும் பற்றிய பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் இதை நிறைவேற்றும் பேறு ஃபாயர்பாக்குக்குக் கிட்டவில்லை. அந்த “அடித்தளம்” இருந்தும்கூட, அவர் மரபுவழிப்பட்ட கருத்துமுதல்வாதத் தளைகளினால் கட்டுண்டு கிடந்தார். இந்த உண்மையை அவரே பின்வரும் சொற்களில் ஒத்துக் கொள்கிறார்: “பின்னோக்கில் நான் பொருள்முதல்வாதிகளோடு உடன்படுகிறேன். ஆனால் முன்னோக்கியல்ல”. ஆனால் இங்கே, சமுதாயத் துறையில் “முன்னோக்கிச்” செல்லாததும், 1840 அல்லது 1844-ஆம் ஆண்டின் தன்னுடைய கருத்துநிலைக்கு அப்பால் போகாததும் ஃபாயர்பாக்குதான். இதற்கும் அவருடைய தனித்தொதுங்கிய வாழ்க்கையே தலையாய காரணம்.

எல்லாத் தத்துவவாதிகளையும்விட அவர்தான் சமுதாயத்தில் ஒன்றுகலந்து உறவாடுவதில் மேலான விருப்பம் கொண்டிருந்தார். ஆனாலும், தன்னையொத்த தகுதியுடைய பிறருடன் சுமூகமான மற்றும் எதிரான வாதப் பிரதிவாதங்களின் மூலமாகச் சிந்தனைகளை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாகத் தன் ஒற்றைத் தலையிலிருந்தே சிந்தனைகளை உற்பத்தி செய்யும் நிலைக்கு, அவரது தனித்தொதுங்கிய வாழ்க்கை அவரைக் கட்டாயப்படுத்தியது. இந்தத் துறையில் அவர் எந்த அளவுக்குக் கருத்துமுதல்வாதியாகவே இருந்துவிட்டார் என்பதை நாம் பின்னர் விரிவாகக் காண்போம்.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)



நமது சிந்தனை எதார்த்த உலகை அறிந்துணரும் திறன் கொண்டதா? - எங்கெல்ஸ்


“சிந்தனைக்கும் இருத்தலுக்கும் உள்ள உறவைப் பற்றிய பிரச்சினைக்கு மற்றொரு பக்கமும் உண்டு: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது சிந்தனைகள் இந்த உலகத்தோடு எத்தகைய உறவைக் கொண்டுள்ளன? நமது சிந்தனை எதார்த்த உலகை அறிந்துணரும் திறன் கொண்டதா? எதார்த்தமான உலகத்தைப் பற்றிய நமது கருத்துக்களிலும் எண்ணங்களிலும் எதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்க நம்மால் முடிகிறதா? தத்துவவியல் மொழியில் இந்தப் பிரச்சினையானது, சிந்தனை, இருத்தல் ஆகிய இரண்டின் முற்றொருமை பற்றிய பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது.

தத்துவவாதிகளில் மிக அதிகப் பெரும்பான்மையினர் இந்தப் பிரச்சனைக்கு உடன்பாடான பதிலையே தருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஹெகலைப் பொறுத்தவரை இந்த உடன்பாடான கருத்து மிகவும் வெளிப்படை. ஏனெனில் எதார்த்த உலகில் நாம் அறிந்துணர்வது, துல்லியமாக அதன் எண்ண உள்ளடக்கத்தைத்தான்; அந்த எண்ண உள்ளடக்கமே உலகத்தை நிரந்தரக் கருத்தின் (absolute idea) படிப்படியான மெய்யுருக்காட்சியாக ஆக்குகின்றது.

இந்த நிரந்தரக் கருத்து அனாதி காலம் தொட்டு எங்கேயோ, இந்த உலகத்துக்குச் சார்பின்றி, உலகத்துக்கு முன்பாகவே இருந்து வந்திருக்கிறதாம். தன்னளவில் எண்ணத்தின் உள்ளடக்கமாகவே இருக்கின்ற ஒன்றை, சிந்தனையால் அறிந்துணர முடியும் என்பது மேற்கொண்டு நிரூபணம் எதுவும் தேவையின்றி வெளிப்படையாக விளங்கக் கூடியது. இங்கே எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது ஏற்கெனவே முன்நிபந்தனைகளில் பூடகமாய் உள்ளடங்கியுள்ளது என்பதும் அதே அளவுக்கு வெளிப்படையாகும். ஆனால், சிந்தனை, இருத்தல் ஆகியவற்றின் முற்றொருமை பற்றிய தன்னுடைய நிரூபணத்திலிருந்து, ஹெகல் மேலும் ஒரு முடிவுக்கு வருவதை அது எவ்விதத்திலும் தடுக்கவில்லை.

அதாவது, அவருடைய தத்துவம் அவருடைய சிந்தனைக்குச் சரியாக இருக்கின்ற காரணத்தால் அது ஒன்று மட்டுமே சரியானது. மனிதகுலம் அவருடைய தத்துவத்தை உடனடியாகக் கருத்துநிலையிலிருந்து செயல்முறைக்குக் கொண்டுவந்து, உலகம் முழுவதையும் ஹெகலியக் கோட்பாடுகளின்படி மாற்றியமைப்பதன் மூலம், சிந்தனை, இருத்தல் ஆகிய இரண்டின் முற்றொருமை தன்னுடைய சரித்தன்மையை (validity) நிரூபித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த இந்தப் பிரமை அநேகமாக எல்லாத் தத்துவவாதிகளுக்கும் இருந்தது எனலாம்.
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


அடித்தளத்தால் தீர்மானிக்கப்பட்ட மேற்கட்டமைப்பு (பொதுச் சட்டம் – அரசு - மதம்) பற்றி எங்கெல்ஸ்:-


“பொருளாதார உறவுகள் அரசையும் பொதுச் சட்டத்தையும் தீர்மானிக்கின்றன என்றால், அதேபோல் தனிநபர் சட்டத்தையும் அவையே தீர்மானிக்கின்றன. உண்மையிலேயே சாராம்சத்தில் இச்சட்டம் தனிநபர்களுக்கு இடையே நிலவி வருகின்ற, அந்தந்தச் சூழ்நிலைமைகளில் இயல்பாகக் காணப்படும் பொருளாதார உறவுகளை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் இதனுடைய நடைமுறை வடிவம் கணிசமாக வேறுபட முடியும். இங்கிலாந்தில் நடந்ததுபோல், மொத்த தேசிய வளர்ச்சிக்கு இசைவான வகையில், பழைய நிலப்பிரபுத்துவச் சட்டங்களின் வடிவங்களை மாற்றாமல் அவற்றுக்கு முதலாளித்துவ உள்ளடக்கம் தந்து, பிரதானமாக அவற்றைத் தக்கவைத்துக் கொள்வது சாத்தியமே.

உண்மையில், நிலப்பிரத்துவப் பெயருக்குள் ஒரு முதலாளித்துவ அர்த்தத்தை நேரடியாகப் படித்துக் கொள்வதாகும். மேற்கு ஐரோப்பாக் கண்டத்திலும் இதுபோலவே நடந்தது. அங்கு நிலவிய ரோமானியச் சட்டத்தை அடித்தளமாக எடுத்துக் கொள்ள முடியும். பண்டம் உற்பத்தி செய்யும் ஒரு சமுதாயத்தின் முதன்முதலான உலகச் சட்டமாகும் அது. சாதாரணப் பண்ட உடைமையாளர்களின் (வாங்குபவர்களும் விற்பனையாளர்களும், கடன் வாங்கியவர்களும் கொடுத்தவர்களும், ஒப்பந்தங்களும், கடமைப் பொறுப்புகளும், இன்னும் இதுபோன்ற பிறவும் உள்ளடங்கிய) இன்றியமையாத அனைத்துச் சட்ட உறவுகளையும் பற்றிய நேர்நிகரற்ற, நேர்த்தியுள்ள, விரிவான விளக்கத்தைக் கொண்டது.

அப்படியானால், இன்னமும் குட்டி–முதலாளித்துவ (petty-bourgeois), அரைநிலப்பிரபுத்துவத் தன்மை (semi-feudal) கொண்டதாக இருக்கும் சமுதாயத்தின் நன்மைக்காக, வெறுமே சட்ட நடைமுறை (பொதுச் சட்டம்) மூலமாக, அதை அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தின் தரத்துக்குத் தாழ்த்த முடியும். அல்லது அறிவொளி மிக்கவர்கள் என்று சொல்லப்படுகின்ற, நீதிநெறி பேசும் சட்ட வல்லுநர்களின் உதவியைக் கொண்டு, அப்படிப்பட்ட சமுதாயத் தரத்துக்குப் பொருந்தும் வகையில், அதைத் தனிச்சிறப்பான ஒரு சட்டத் தொகுதியாய் உருவாக்கிவிட முடியும்.

இந்தச் சூழ்நிலைமைகளில், சட்டக் கருத்துநிலையிலிருந்துங்கூட அது ஒரு மோசமான சட்டத் தொகுதியாகவே இருக்கும் (எடுத்துக்காட்டாக, பிரஷ்யாவின் நிலச்சட்டம்). எனினும், ஒரு மகத்தான முதலாளித்துவப் புரட்சிக்குப் பின், ஃபிரெஞ்சு குடிமைச் சட்டம் (French Code Civil) போன்ற முதலாளித்துவப் சமுதாயத்தின் அத்தகையதொரு மூலச்சிறப்பான சட்டத் தொகுப்பையுங்கூட, இதே ரோமானிய சட்டத்தின் அடிப்படையில் வகுப்பது சாத்தியமே. எனவே, முதலாளித்துவச் சட்ட விதிகள் சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை வெறுமனே சட்டத்தின் வடிவத்தில் வெளியிடுகின்றன எனில், சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு நன்றாகவோ, மோசமாகவோ அவற்றை வெளியிட முடியும்.

மனிதன் மேலிருக்கும் முதன்முதலான சித்தாந்த சக்தியாக அரசு தன்னை நம்மிடம் காட்டிக் கொள்கிறது. வெளிநாட்டு, உள்நாட்டுத் தாக்குதல்களிலிருந்து தன்னுடைய பொதுவான நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஓர் உறுப்பைச் சமுதாயம் தனக்கெனப் படைத்துக் கொள்கிறது. இந்த உறுப்பு அரசு அதிகாரம் ஆகும். இந்த உறுப்பு தோன்றிய மாத்திரத்தில், அது சமுதாயத்துக்கு எதிரே தன்னைச் சுதந்திரமானதாக ஆக்கிக் கொள்கிறது. உண்மையில், எவ்வளவு அதிகமாக அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பாக ஆகிறதோ, எவ்வளவு அதிகமாக அந்த வர்க்கத்தின் மேலாதிக்கத்தை அது நேரடியாய்ச் செயல்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக அரசு தன்னைச் சுதந்திரமானதாய் ஆக்கிக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் நடத்தும் மோதல், அவசியமாகவே ஓர் அரசியல் மோதலாக, எல்லாவற்றுக்கும் முதலாய், இவ்வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்துக்கு எதிரான மோதலாக ஆகிறது.

இந்த அரசியல் போராட்டத்துக்கும் அதன் பொருளாதார அடிப்படைக்கும் இடையே உள்ள பரஸ்பரத் தொடர்பு பற்றிய உணர்வு மங்கி விடுகிறது, இது முற்றாக மறைந்துவிடவும் முடியும். இப்போராட்டத்தில் பங்கெடுக்கிறவர்களின் விஷயத்தில் முழுதாக இப்படி நடப்பதில்லை என்ற போதிலும், வரலாற்று ஆசிரியர்களின் விஷயத்தில் அனேகமாக அப்படித்தான் எப்போதும் நடக்கிறது. ரோமானியக் குடியரசுக்குள் நடந்த போராட்டங்கள் பற்றிய பண்டைக்கால வரலாற்று ஆசிரியர்களில் அப்பியன் (Appian) ஒருவர் மட்டுமே அந்தப் போராட்டங்களுக்குரிய இறுதியான காரணம் நிலவுடைமை என்று தெளிவாகவும் துல்லியமாகவும் நமக்குக் கூறுகிறார்.

சமுதாயத்தின் எதிரே அரசு ஒரு சுதந்திரமான சக்தியாக ஆனதும் அது உடனே ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்குகிறது. உண்மையிலேயே, முழுநேர அரசியல்வாதிகள், பொதுச் சட்டக் கொள்கைவாதிகள், தனிநபர் சட்ட வல்லுநர்கள் ஆகியோரிடையேதான் பொருளாதார உண்மைகளோடு உள்ள தொடர்புகள் முற்றாகத் தப்பி விடுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்கிலும் சட்ட அங்கீகாரம் பெறும் பொருட்டு, பொருளாதார உண்மைகள் சட்டவியல் நோக்கங்கள் என்னும் வடிவத்தை எடுத்துத் தீர வேண்டியுள்ளது; அப்படிச் செய்கையில், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள சட்ட அமைப்புமுறை முழுவதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, அதன் பின்விளைவாக சட்டவியல் வடிவமே எல்லாமாகவும் பொருளாதார உள்ளடக்கம் ஒன்றுமில்லாமலும் ஆக்கப்பட்டு விடுகிறது. பொதுச் சட்டம், தனிநபர் சட்டம் ஆகிய இரண்டும் சுதந்திரமான துறைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொன்றும் அதற்கே உரிய வரலாற்று ரீதியான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், எல்லா உள்முரண்பாடுகளையும் உறுதியாக ஒழிப்பதன் மூலம் முறைப்படியான முன்வைப்புக்குத் தகுதி வாய்ந்ததாகவும், அத்தகைய முன்வைப்பு தேவைப்படுவதாகவும் உள்ளது.

இன்னும் மேலான சித்தாந்தங்கள், அதாவது, பொருள் மற்றும் பொருளாதார அடிப்படையிலிருந்து மேலும் தொலைவாக நீக்கி வைக்கப்பட்டுள்ள சித்தாந்தங்கள், தத்துவம், மதம் என்னும் வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இங்கே கருத்துருக்களுக்கும், இருத்தலுக்கான அவற்றின் பொருளாயத நிலைமைகளுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு, இடைநிலைத் தொடுப்புகள் (intermediate links) மூலமாக மேலும் மேலும் சிக்கலாகி விடுகிறது; மேலும் மேலும் தெளிவற்றதாகி விடுகிறது. ஆனால் அந்தப் பரஸ்பரத் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து தொடங்கி மறுமலர்ச்சிக் காலகட்டம் (Renaissance Period) முழுவதுமே நகரங்களால், எனவே நகரத்தார்களால் ஏற்பட்ட இன்றியமையாத விளைவு ஆகும். அதனைத் தொடர்ந்து புதிய–விழிப்புப் பெற்ற தத்துவமும் இந்த வளர்ச்சியின் விளைவாகவே தோன்றியது.

சாராம்சத்தில், இத்தத்துவத்தின் உள்ளடக்கம், சிறிய, நடுத்தர நகரத்தார்கள் பெரும் முதலாளிகளாக மாறிய வளர்ச்சிக்குப் பொருத்தமான கருத்துகளின் தத்துவார்த்த வெளியீடாகவே இருந்தது. பெரும்பாலும் அரசியல் பொருளாதாரவாதிகளாக மட்டுமின்றி, தத்துவவாதிகளாகவும் திகழ்ந்த, கடந்த நூற்றாண்டின் ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுக்காரர்களிடையே இது தெளிவாகப் புலப்படுகிறது. ஹெகலியக் கருத்துப் பிரிவினரைப் பொறுத்தவரையில் இதனை நாம் ஏற்கெனவே நிரூபித்து விட்டோம்.

இப்போது நாம் அதோடு சேர்த்து, மதத்தைப் பற்றிச் சுருக்கமாக மட்டுமே கவனிப்போம். காரணம், மதம் பொருளாயத வாழ்க்கையிலிருந்து மேலும் விலகி நிற்கிறது, அதற்கு மிகவும் அந்நியமானதாகவும் தோன்றுகிறது. மிகப் புராதன காலத்தில், மனிதர்கள் தங்களுடைய சொந்த இயல்பு பற்றியும், அவர்களைச் சுற்றியிருந்த புறநிலை இயற்கை பற்றியும் கொண்டிருந்த தவறான, பழைய கருத்துருக்களிலிருந்து மதம் தோன்றியது. என்றபோதிலும், ஒவ்வொரு சித்தாந்தமும் தோன்றிய பிறகு அப்போது நிலவும் கருத்தோட்டங்களை ஒட்டி வளர்கிறது. அந்தக் கருத்தோட்டங்களை மேலும் வளர்க்கிறது, அப்படிச் செய்யாவிடில் அது ஒரு சித்தாந்தமாக இருக்க முடியாது. அதாவது, சுதந்திரமாய் வளர்ச்சியடைகின்ற, தமக்கே உரிய விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்ட, சுதந்திரமான சிந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் கொண்டதாக இருக்காது.

எந்த மனிதர்களின் மூளைகளுக்குள்ளே இந்தச் சிந்தனை நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த மனிதர்களின் பொருளாதய வாழ்க்கை நிலைமைகளே அந்நிகழ்வுப் போக்கின் ஓட்டத்தை இறுதியில் தீர்மானிக்கின்றன என்பது, தவிர்க்க இயலாதவாறு இந்த மனிதர்களுக்குத் தெரியாமலே இருந்து விடுகிறது. அப்படி இல்லாவிட்டால், அனைத்து சித்தாந்தங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். எனவே, குல உறவுள்ள மக்களினங்களின் ஒவ்வொரு குழுவுக்கும் பிரதானமாகப் பொதுவாக இருக்கும் அசலான மத நம்பிக்கைகள், அந்தக் குழு பிரிந்த பிறகு, ஒவ்வொரு மக்களினத்துக்கும் அதற்கே உரிய விசேஷ முறையில், அதற்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப வளர்கின்றன. அனேக மக்களினக் குழுக்களின், குறிப்பாக ஆரியர்களின் (இந்தோ–ஐரோப்பியர்கள் என்று சொல்லப்படுபவர்கள்) விஷயத்தில் ஒப்புநோக்குப் புராணவியல் (comparative–mythology) இந்த நிகழ்வுப்போக்கை விளக்கமாகக் காட்டியுள்ளது. ஒவ்வொரு மக்களினத்துக்குள்ளும் இவ்வாறு உருவாக்கப்பட்ட கடவுள்கள் தேசியக் கடவுள்களாக இருந்தனர். அவற்றின் ஆளுகை, அவை காத்தருள வேண்டியிருக்கும் தேசிய நிலப்பரப்புக்கு அப்பால் பரவவில்லை. அதன் எல்லைகளுக்கு அப்பால் வேறு கடவுள்கள் வில்லங்கமின்றி அதிகாரம் செலுத்தி வந்தன. தேசம் இருந்த வரையில் மட்டுமே கற்பனையில் அக்கடவுள்கள் தொடர்ந்து இருந்துவர முடிந்தது.

தேசத்தின் வீழ்ச்சியுடன் அவையும் வீழ்ந்தன. ரோமானிய உலகப் பேரரசின் – அதன் தோற்றம் பற்றி இங்கே நாம் பரிசீலிக்கத் தேவையில்லை – பொருளாதார நிலைமைகள், பழைய தேசிய இனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்தின. பழைய தேசியக் கடவுள்கள் நசிந்தன. ரோம் நகரத்தின் குறுகிய கூடங்களுக்கு மட்டுமே பொருந்தியதாக அலங்கரிக்கப்பட்ட ரோமானியர்களின் கடவுள்கள்கூட நசிந்து போயின. சிறிதே மதிக்கத்தக்க எல்லா வெளிநாட்டுக் கடவுள்களுக்கும் ரோம் நகரில் அங்கீகாரம் வழங்கவும், உள்ளூர் கடவுள்களுக்குப் பக்கத்திலேயே அவற்றுக்குப் பூஜா பீடங்கள் ஏற்படுத்தவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளிலே, உலக மதம் ஒன்றின் மூலமாக உலகப் பேரரசை முழுமையாக்க வேண்டியதன் தேவை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு புதிய உலக மதத்தைப் பேரரசின் ஆணை மூலமாக இந்தப் பாணியிலே உண்டாக்கிவிட முடியாது.

பொதுமைப்படுத்தப்பட்ட, கீழ்த்திசையின் – குறிப்பாக யூதர்களின் – இறையியலும், கொச்சைப்படுத்தப்பட்ட, கிரேக்க – குறிப்பாக ஸ்டோயிக் (Stoic) – தத்துவமும் கலந்த ஒரு கலவையிலிருந்து புதிய உலக மதமாகிய கிறிஸ்துவ மதம் ஏற்கெனவே ஓசையின்றித் தோன்றியிருந்தது. ஆதியில் கிறிஸ்துவ மதம் எவ்வாறு தோற்றமளித்தது என்பதை முதலில் சிரமப்பட்டுக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. காரணம், நமக்கு வாழையடி வாழையாக வந்துள்ள அதன் அதிகாரபூர்வமான வடிவம், வெறுமே, எந்த வடிவத்தில் அது அரசாங்க மதமாக ஆனதோ அந்த வடிவம் ஆகும்; அரசாங்க மதம் ஆக்கும் நோக்கத்துக்காக நிஸேயா பேரவையால்* (Council of Nicaea) தகவமைக்கப்பட்ட வடிவம் ஆகும்.

[*நிஸேயா பேரவை: ரோமப் பேரரசின் கிறிஸ்துவத் தலைமைப் பாதிரிகளின் அனைத்துலகப் பேரவை ஆகும். முதலாவது கான்ஸ்டான்டின் பேரரசரால் ஆசியா மைனரில் உள்ள நிஸேயா நகரில் 325-இல் கூட்டப்பட்டது. கிறிஸ்தவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகளை வகுத்துத் தந்தது. அவற்றைப் பின்பற்றாதவர்கள் அரசுத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர்.]

ஏற்கெனவே, 250 ஆண்டுகளுக்குப் பிறகு அது அரசாங்க மதமாக ஆகிவிட்ட உண்மை, அக்காலத்திய நிலைமைகளுக்குப் பொருத்தமான மதமாக அது இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானது. மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவ முறை வளர்ச்சி பெற்ற அதே அளவில், அந்த அமைப்புமுறைக்கு ஈடான மத வடிவமாக, அதற்குப் பொருத்தமான நிலப்பிரபுத்துவ படிநிலை அமைப்புடன் கிறிஸ்துவ மதம் வளர்ச்சி பெற்றது. மேலும், நகரத்தார்கள் செழிக்கத் தொடங்கியபோது, நிலப்பிரபுத்துவக் கத்தோலிக்கத்துக்கு எதிராகப் புரோட்டஸ்டென்ட் முரண்வாதம் வளர்ந்தது. தெற்கு ஃபிரான்சில் அல்பிவாசிகள்* (Albigenses) இடையே, அங்கிருந்த நகரங்கள் தமது மலர்ச்சியின் உச்ச நிலையை எட்டியிருந்த காலத்தில் முதலில் இது தோன்றியது.

[*அல்பிவாசிகள்: 12, 13–ஆம் நூற்றாண்டுகளில், தெற்கு ஃபிரான்ஸ், வடக்கு இத்தாலி நகரங்களில், வணிகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரிடையே விரிவாகப் பரவியிருந்த ஒரு மதப்பிரிவு. தெற்கு ஃபிரான்ஸிலுள்ள அல்பி நகரம் அதன் மையமாக இருந்தது. அல்பிவாசிகள் ஆடம்பரமான கத்தோலிக்கச் சடங்குகளையும், திருச்சபையின் படிநிலை அமைப்பையும் எதிர்த்தனர். நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிரான கண்டனத்தை மத வடிவத்தில் வெளியிட்டனர். 1209–இல் போப் மூன்றாம் இன்னொசன்ட் அல்பி வாசிகளுக்கு எதிராக சிலுவைப்போர் நடத்தினார். இருபது ஆண்டுகாலம் நடந்த இந்தப் போரினாலும் கடுமையான அடக்குமுறையாலும் அல்பிவாசிகள் இயக்கம் நசுக்கப்பட்டது.]

மத்திய காலம், தத்துவம், அரசியல், சட்டவியல் ஆகிய பிற சித்தாந்த வடிவங்கள் அனைத்தையும் இறையியலுடன் ஒட்ட வைத்தது. அவற்றை இறையியலின் உட்பிரிவுகளாக ஆக்கி விட்டது. இதன்மூலம், ஒவ்வொரு சமுதாய மற்றும் அரசியல் இயக்கத்தையும் இறையியல் வடிவம் எடுத்துக் கொள்ள நிர்ப்பந்தித்தது. மக்கள் திரளின் உணர்வுப் பசிக்கு மதத் தீனி மட்டுமே ஊட்டப்பட்டது. மற்றவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. எனவே, ஒரு துடிப்பான இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு, அவர்கள் தங்களின் சொந்த நலன்களையே மத வேடத்தில் மறைத்து, முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட சமுதாயப் படிநிலை எதையும் சேராத, பின்னால் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடிகளான, நகர்ப்புறத்துச் சொத்தில்லாத தொழிலாளிகள், தினக்கூலிகள் மற்றும் எல்லா விதமான வேலையாட்களைக் கொண்ட ஒரு தொங்கு சதையைத் தொடக்கத்திலிருந்தே நகரத்தார்கள் தோற்றுவித்ததைப் போலவே, மத முரண்வாதம் விரைவில் நகரத்தார்–மிதவாத முரண்வாதமாகவும், தொழிலாளர்–புரட்சிகர முரண்வாதமாகவும் பிரிந்துவிட்டது. புரட்சிகர முரண்வாதம் நகரத்தார் முரண்வாதிகளின் வெறுப்புக்குரிய ஒன்றாக இருந்தது.

எழுச்சி பெற்றுவரும் நகரத்தார்களை எப்படித் தோற்கடிக்க முடியாமல் இருந்ததோ, அவ்வாறே புரோட்டஸ்டென்ட் முரண்வாதமும் ஒழிக்க முடியாததாய் இருந்தது. இந்த நகரத்தார்கள் போதுமான அளவு பலம் பெற்றபோது, நிலப்பிரபுத்துவப் பெருங்குடிக்கு எதிரான அவர்களது போராட்டம், அதுவரையில் பெரும்பாலும் உள்ளூர் அளவில் இருந்தது, தேசிய அளவிலான பரிமாணம் பெறத் தொடங்கியது. மாபெரும் முதல் நடவடிக்கை ஜெர்மனியில் நிகழ்ந்தது – மதச்சீர்திருத்தம் (Reformation) என்ற பெயரில். நகரத்தார்கள், கலகப்போக்குக் கொண்ட மீதியுள்ள சமூகப் பிரிவினரை – நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கீழ்நிலையிலுள்ள பிரபு வம்சத்தினர், நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் ஆகியோரைத் தங்கள் பதாகையின்கீழ் ஒன்றுபடுத்த முடிகிற அளவுக்கு ஆற்றலோ, போதுமான வளர்ச்சியோ பெற்றிருக்கவில்லை. தொடக்கத்தில் பிரபு வம்சத்தினர் தோற்கடிக்கப்பட்டனர். விவசாயிகள் கிளர்ந்து எழுந்தனர். அதுவே புரட்சிகரப் போராட்டம் முழுமைக்கும் உச்சமாக விளங்கியது. ஆனால் நகரங்கள் அவர்களை நட்டாற்றில் கைவிட்டன.

இவ்வாறாக, நிலப்பிரபுத்துவ இளவரசர்களின் படைகளுக்குப் புரட்சி அடிபணிந்தது. அவர்களே புரட்சியின் முழுப்பலனையும் அறுவடை செய்தனர். அதனைத் தொடர்ந்து, மூன்று நூற்றாண்டு காலத்துக்கு, வரலாற்றில் சுதந்திரமான, துடிப்பான பாத்திரம் வகிக்கும் நாடுகளின் அணிகளிலிருந்து ஜெர்மனி மறைந்து விடுகிறது. ஆனால், ஜெர்மானிய லூதரைப் (Luther) போன்று ஃபிரெஞ்சுக்கார கால்வின் (Calvin) தோன்றினார். உண்மையான ஃபிரெஞ்சு மதிநுட்பத்துடன் மதச் சீர்திருத்த வாதத்தின் முதலாளித்துவத் தன்மையை முன்னணியில் நிறுத்தினார், திருச்சபையைக் குடியரசுத் தன்மை கொண்டதாக்கினார், ஜனநாயகப்படுத்தினார். ஜெர்மனியில் லூதரிய மதச்சீர்திருத்தம் சிதைவுற்று நாட்டைப் படுநாசப்படுத்திய காலத்தில், கால்வினிய மதச்சீர்திருத்தம் ஜெனீவாவிலும் ஹாலந்திலும் ஸ்காட்லாந்திலும் குடியரசுவாதிகளுக்கு ஒரு பதாகையாகப் பயன்பட்டது.

ஸ்பெயினிடமிருந்தும், ஜெர்மன் பேரரசிடமிருந்தும் ஹாலந்தை விடுவித்தது. இங்கிலாந்தில் நடந்துவந்த முதலாளி வர்க்கப் புரட்சி நாடகத்தின் இரண்டாவது அரங்கேற்றத்துக்கு வேண்டிய சித்தாந்த ஆடைகளை வழங்கியது. இங்கே கால்வினியம் (Calvinism) அக்காலத்திய முதலாளி வர்க்க நலன்களுக்குரிய உண்மையான மத முகமூடியாகத் தன்னை நியாயப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக, பிரபு வம்சத்தின் ஒரு பகுதிக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசத்தில் 1689–இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது, கால்வினியம் முழு அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஆங்கில அரசின் திருச்சபை மீண்டும் நிறுவப்பட்டது. ஆனால் அரசனைத் தனது போப்பாகக் கொண்டிருந்த முந்தைய கத்தோலிக்கிய வடிவத்தில் அல்ல. மாறாக, அது பலமாகக் கால்வினிய மயமாக்கப்பட்டிருந்தது. பழைய அரசுத் திருச்சபை மகிழ்ச்சிகரமான கத்தோலிக்க ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடி வந்தது. சுவையற்ற கால்வினிய ஞாயிற்றுக்கிழமைக்கு எதிராகப் போராடி வந்தது. புதிய, முதலாளித்துவ மயமாக்கப்பட்ட திருச்சபை பின்னதை அறிமுகப்படுத்தியது. அது இன்றுவரைக்கும் இங்கிலாந்தை அணி செய்கிறது.

ஃபிரான்சில் 1685–இல் கால்வினியச் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டனர். அவர்கள் ஒன்று கத்தோலிக்க மயமாக்கப்பட்டனர் அல்லது நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர். ஆனால் அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? அக்காலப் பகுதியில் ஏற்கெனவே பியெர் பெயில் (Pierre Bayle) என்னும் சுதந்திரச் சிந்தனையாளர் உச்ச நிலையில் செயலாற்றி வந்தார். 1694–இல் வால்டேர் (Valtaire) பிறந்தார். பதினான்காவது லூயி மன்னனின் (Louis XIV) பலவந்த நடவடிக்கைகள், பிரெஞ்சு முதலாளி வர்க்கம் தன்னுடைய புரட்சியை, மதத் தன்மையற்ற, முற்றிலும் அரசியல் வடிவத்தில் எளிதாக நடத்தி முடிப்பதற்கே உதவின. புரட்சியின் இந்த வடிவம்தான் வளர்ச்சி பெற்ற முதலாளி வர்க்கத்துக்குப் பொருத்தமானதாக இருந்தது. புரோட்டஸ்டென்டுகளுக்குப் பதிலாகச் சுதந்திரச் சிந்தனையாளர்கள் தேசியச் சட்டமன்றங்களில் இடம் பெற்றனர். இவ்வாறாகக் கிறிஸ்துவ மதம் அதன் இறுதிக் கட்டத்தில் நுழைந்தது.

எதிர்காலத்தில் எந்த முற்போக்கு வர்க்கத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கு ஏற்ற சித்தாந்த வேடம் பூண்டு சேவை புரியக் கிறிஸ்துவ மதம் திறனற்றுப் போனது. மேலும் மேலும் ஆளும் வர்க்கங்களின் தனிப்பட்ட உடைமையாகி விட்டது. ஆளும் வர்க்கங்கள், கீழ்நிலை வர்க்கங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகக் கிறிஸ்துவ மதத்தை வெறுமே ஓர் அரசாங்கச் சாதனமாகப் பயன்படுத்தின. மேலும், வெவ்வேறு வர்க்கங்களுள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய பொருத்தமான மதத்தைப் பயன்படுத்துகிறது: நிலம் படைத்த பிரபு வம்சத்துக்கு – கத்தோலிக்க ஏசுயியவாதம் அல்லது மரபுவழிப் புரோட்டஸ்டென்டு வாதம். மிதவாத, தீவிரவாத முதலாளி வர்க்கத்துக்கு – பகுத்தறிவுவாதம். இந்தக் கனவான்கள் தத்தமக்கு உரிய மதங்களில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல.

எனவே, நாம் காண்பதாவது: அனைத்துச் சித்தாந்தத் துறைகளிலும் மரபு ஒரு மாபெரும் பழைமைவாத சக்தியாக இருப்பதைப் போல, மதம் உருவாக்கப்பட்டவுடன், எப்போதும் மரபு வழிபட்ட கருத்துகளையே கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்துகளில் நாளடைவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் வர்க்க உறவுகளிலிருந்து உருவாகின்றன. அதாவது, இம்மாற்றங்களைச் செயல்படுத்துகின்ற மக்களின் பொருளாதார உறவுகளிலிருந்து தோன்றுகின்றன. இங்கே இது போதும்.

மேலே கண்ட நூல்பகுதியில், வரலாற்றைப் பற்றிய மார்க்ஸின் கருத்தோட்டத்தை, அதிகபட்சமாக ஒரு சில எடுத்துக்காட்டுகளோடு சேர்த்து, ஒரு பொதுவான சுருக்கவுரையாகக் கொடுப்பதே நமது பிரச்சினையாக இருந்திருக்க முடியும். இதற்கு வரலாற்றிடமிருந்தே நிரூபணத்தைத் தருவிக்க வேண்டும். இது தொடர்பாகப் பிற நூல்களில் போதுமான அளவுக்கு விளக்கப்பட்டுள்ளது என்று கூறிக் கொள்ள என்னை அனுமதிப்பீராக. எனினும், இயற்கை பற்றிய இயக்கவியல் கருத்தோட்டம் இயற்கை பற்றிய தத்துவங்கள் அனைத்தையும் ஒருங்கே தேவையற்றதாகவும் சாத்தியமற்றதாகவும் ஆக்குவதுபோல், வரலாறு பற்றிய மார்க்ஸியக் கருத்தோட்டம், வரலாற்றுத் துறையில் தத்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. எந்தத் துறையிலும் அதிலுள்ள பரஸ்பரத் தொடர்புகளை மூளைக்குள் கற்பனையில் கண்டறிவதல்ல, அவற்றை உண்மை விவரங்களிலே கண்டுபிடிப்பதே இனிமேற்பட்ட பிரச்சினை ஆகும். இயற்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள தத்துவத்துக்குக் கலப்பற்ற சிந்தனைத் துறை மட்டுமே, அதுவும் அது விட்டுவைக்கப்பட்டுள்ள அளவுக்கு மட்டுமே எஞ்சுகிறது. சிந்தனையினுடைய நிகழ்வுப்போக்கின் விதிகள் பற்றிய கோட்பாடு, தர்க்கவியல் மற்றும் இயக்கவியல் ஆகியவை மட்டுமே அதற்கு மிஞ்சுகின்றன.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


அரசியல் போராட்டங்கள் - வர்க்க போராட்டங்கள் - பொருளாதார விடுதலை பற்றி எங்கெல்ஸ்


“அனைத்து அரசியல் போராட்டங்களும் வர்க்க போராட்டங்களாகும்; ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாகவே இருக்கின்றது; எனவே விடுதலைக்காக நடக்கும் எல்லா வர்க்கப் போராட்டங்களும், அவசியமாகவே அவை அரசியல் வடிவம் பெற்றிருந்த போதிலும், பொருளாதார விடுதலை என்னும் பிரச்சினை நோக்கியே முடிவாகத் திரும்புகின்றன – என்பதெல்லாம் குறைந்தபட்சம் நவீன கால வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்தபட்சம் இக்கால வரலாற்றிலாவது, அரசு அதாவது அரசியல் அதிகாரம் கீழடங்கிய அம்சமாகவும், குடிமைச் சமுதாயம் அதாவது பொருளாதார உறவுகளின் ஆட்சி தீர்மானகரமான அம்சமாகவும் உள்ளது. ஹெகலுங்கூட மரியாதை செலுத்திய மரபு வழிப்பட்ட கருத்தோட்டம் (traditional conception) அரசைத் தீர்மானகரமான அம்சமாகவும், குடிமைச் சமூதாயத்தை அரசால் தீர்மானிக்கப்படும் அம்சமாகவும் கண்டது. வெளித்தோற்றங்களும் இத்துடன் பொருந்துகின்றன.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய செயல்பாடுகளின் உந்து சக்திகள் அனைத்தும், அவனைச் செயலில் இறங்கச் செய்வதற்கு, அவன் மூளையினூடே சென்று தீர வேண்டும்; சென்று, அவனுடைய விருப்பத்தின் நோக்கங்களாகத் தம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதுபோலவே, குடிமைச் சமூதாயத்தின் தேவைகள் அனைத்தும் – எந்த வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருக்க நேர்ந்தாலும் – சட்டங்களின் வடிவத்தில் பொதுவான அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விருப்பத்தினூடே சென்று தீர வேண்டும். தன்னளவில் வெளிப்படையாகப் புலப்படும் இதுதான் விவகாரத்தின் முறையான அம்சம் ஆகும். எனினும், தனிநபரின் மற்றும் அரசின் வெறும் சம்பிரதாயமான இவ்விருப்பத்தின் உள்ளடக்கம் என்ன, இவ்வுள்ளடக்கம் எங்கிருந்து பெறப்படுகிறது? இதுமட்டும் ஏன் விரும்பப்பட்டது? ஏன் வேறெதுவும் இல்லை? என்னும் கேள்வி எழுகிறது. இதை நாம் ஆய்ந்து பார்த்தால், நவீன கால வரலாற்றில் குடிமைச் சமூதாயத்தின் மாறிவரும் தேவைகளும், ஏதோவொரு வர்க்கத்தின் மேலாதிக்கமும், கடைசியாக உற்பத்திச் சக்திகள் மற்றும் பரிவர்த்தனை உறவுகளின் வளர்ச்சியுமே மொத்தத்தில் அரசின் விருப்பத்தைத் தீர்மானிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறோம்.

ஆனால் பிரம்மாண்டமான உற்பத்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களைக் கொண்ட நமது நவீன சகாப்தத்திலுங்கூட, அரசானது ஒரு சுதந்திரமான வளர்ச்சியைக் கொண்ட, ஒரு சுதந்திரமான செயற்களமாக இல்லாமல், அதன் இருப்பும் வளர்ச்சியும் முடிவில் சமுதாய வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளைச் கொண்டே விளக்கப்பட வேண்டியுள்ளது எனில், முந்தைய காலங்கள் அனைத்திற்கும் இது மேலும் உண்மையாக இருந்தாக வேண்டும். காரணம், முந்தைய காலங்களில் மனிதனின் பொருளாயத வாழ்க்கைக்கான உற்பத்தி இத்தகைய ஏராளமான துணைச் சாதனங்களோடு நடைபெறவில்லை; ஆகவே, அக்காலங்களில் இப்படிப்பட்ட உற்பத்தியின் அவசியம் மனிதர்கள் மீது மேலும் பெரிதான ஆதிக்கம் செலுத்தி வந்திருக்க வேண்டும். பெரும் தொழில்துறை மற்றும் இரயில்வேக்களின் சகாப்தமான இன்றைய காலகட்டத்திலும்கூட, ஆக மொத்தத்தில் அரசு என்பது உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வர்க்கத்தினுடைய பொருளாதாரத் தேவைகளின் அழுத்தமான பிரதிபலிப்பு மட்டுமே.

அப்படி இருக்கையில், அன்றைய சகாப்தத்தில் இது மேலும் உண்மையாக இருந்திருக்க வேண்டும். காரணம், அன்றைக்கு மனிதர்களின் ஒவ்வொரு தலைமுறையும், பொருளாயதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள, அதன் மொத்த வாழ்நாளில் மிகப்பெரும் பகுதியைச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. எனவே, அன்றைய தலைமுறை இன்று நாம் இருப்பதைவிட மேலும் அதிகமாக அந்தத் தேவைகளைச் சார்ந்திருந்தது. வரலாற்றின் முந்தைய காலகட்டங்களை பற்றிய பரிசீலனை – இக்கோணத்திலிருந்து மிகுந்த அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட உடனேயே – இந்த உண்மையை நூறு மடங்கு அதிகமாகவே உறுதிப்படுத்துகிறது. ஆனால் இதை நாம் இங்கே ஆராய முடியாது என்பது உண்மையே.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)


வர்க்கங்கள் எப்படித் தோன்றின? -எங்கெல்ஸ்


“வர்க்கங்கள் எப்படித் தோன்றின? முன்னாளில் நிலப்பிரபுத்துவ முறையில் அமைந்த மாபெரும் நிலச் சொத்துடைமையின் தோற்றத்துக்கு – குறைந்த பட்சம் முதல் நிகழ்வில் – அரசியல் காரணங்கள், பலவந்தமாகக் கைவசப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றின் மீது பழிபோடுவது முதல் பார்வையில் இப்போதும் சாத்தியமே என்றாலும், முதலாளி வர்க்கம், பட்டாளி வர்க்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை இத்தகைய காரணங்களைக் கற்பிக்க முடியாது. இங்கே இவ்விரண்டு மாபெரும் வர்க்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும், தெளிவாகவும், வெளிப்படையாகவும், முற்றிலும் பொருளாதார வகைப்பட்ட காரணங்களிலே உள்ளதைக் காணலாம். முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும், அதைவிடக் குறையாத அளவில் நிலவுடைமை வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும், முதலாவதாகவும் முதன்மையானதாகவும் இருப்பது பொருளாதார நலன்களைப் பற்றிய பிரச்சனையே என்பதும், அந்தப் பொருளாதார நலன்களை மேலும் பெருக்கிக் கொள்ள வெறும் சாதனமாகச் சேவை புரிவதே அரசியல் அதிகாரத்தின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டும் பொருளாதார நிலைமைகளில், இன்னும் சரியாகச் சொன்னால் உற்பத்தி முறையில், மாற்றம் ஏற்பட்டதன் பின்விளைவாகவே உதித்தன. முதலில் கைவினைஞர்களின் கைத்தொழிலிருந்து பட்டறை உற்பத்திக்கும், அதன்பிறகு பட்டறை உற்பத்தியிலிருந்து நீராவி மற்றும் எந்திர ஆற்றலைக் கொண்டு நடக்கிற பெரிய அளவிலான தொழில்துறைக்கும், உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றமே இவ்விரு வர்க்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று. முதலாளி வர்க்கம் இயக்கி விட்ட புதிய உற்பத்தி சக்திகளும் – முதல்நிலையில் உழைப்புப் பிரிவினையும், ஒரே எளிய வேலைக் கூறை செய்துவரும் பல தொழிலாளிகளை ஒரு பொதுவான பட்டறைத் தொழிலில் இணைப்பதும் – இந்த உற்பத்திச் சக்திகளின் மூலம் வளர்க்கப்பட்ட பரிவர்த்தனையின் நிலைமைகளும் தேவைப்பாடுகளும், வரலாற்றினால் வழங்கப்பட்டு, சட்டத்தால் புனிதப்படுத்தப்பட்ட, நடப்பிலிருந்த உற்பத்தி முறையோடு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொருந்தாதனவாய் ஆகிவிட்டன. அதாவது, அவை கைவினைஞர் சங்கத்தின் சிறப்புரிமைகளோடும், நிலப்பிரத்துவ சமூக அமைப்புமுறையின் எண்ணற்ற பிற தனிப்பட்ட மற்றும் உள்ளூர் சிறப்புரிமைகளோடும் (சமூகத்தில் உரிமையற்ற பிரிவினருக்கு இவை அனைத்தும் கைவிலங்குகளாகவே இருந்தன) பொருந்தாதனவாய் ஆகிவிட்டன.

முதலாளி வர்க்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி சக்திகள், நிலப்பிரபுக்களும் கைவினைஞர் சங்க எஜமானர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி முறையை எதிர்த்துக் கலகம் செய்தன. அதன் விளைவு தெரிந்ததே: நிலப்பிரபுத்துவக் கைவிலங்குகள் இங்கிலாந்தில் படிப்படியாகவும் ஃபிரான்சில் ஒரே அடியிலும் உடைத்தெறியப்பட்டன. ஜெர்மனியில் இந்தச் செயலாக்கம் இன்னும் முடிவு பெறவில்லை. ஆனாலும், பட்டறைத் தொழில்முறை அதனுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையோடு மோதிக் கொண்டதைப் போலவே, இப்போது பெரிய அளவிலான தொழில்துறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையோடு ஏற்கெனவே மோதிக் கொண்டிருக்கிறது. இந்த உற்பத்தி முறையாலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் குறுகிய வரம்புகளாலும் கட்டிப் போடப்பட்டுள்ள இந்தப் பெரிய அளவிலான தொழில்துறை, ஒருபுறத்தில் மாபெரும் மக்கள் திரளை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகப் பட்டாளி வர்க்கமயமாக்கலையும்,, மறுபுறத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான விற்றுத் தீர்க்க முடியாத பொருள்களையும் உற்பத்தி செய்கிறது. மிகை உற்பத்தியும் திரளான மக்களின் வறுமையும் ஒன்றுக்கொன்று காரணமாக அமைகின்றன. இந்த அபத்தமான முரண்பாடுதான் பெரும் தொழில்துறையின் விளைவு. உற்பத்தி முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, உற்பத்தி சக்திகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியம் என இம்முரண்பாடு அறைகூவி அழைக்கிறது.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)