Sunday 2 June 2019

6. ஒரு சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகளுக்கு ஏற்ப சமுதாயத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், அரசியல் கண்ணோட்டங்களும், அரசியல் நிறுவ னங்களும் தோன்றுகின்றன- ஸ்டாலின்


“சமுதாயத்தின் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வு எதிலிருந்து பிறந்தது? சமுதாயக் கருத்துக்களும், சமுதாயக் கொள்கைகளும், அரசியல் கருத்துக்களும், அரசியல் நிறுவனங்களும் எதிலிருந்து உதிக்கின்றன? அவற்றின் தோற்றுவாய் எது? என்று கண்டுபிடிக்க வேண்டுமானால், அந்தக் கருத்துக்களையே, கொள்கைகளையே, கண்ணோட்டங்களையே அரசியல் நிறுவனங்களையே துருவிப்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவற்றிற்குள்ளேயே பொதிந்து கிடக்கிறதா என்று தேடக்கூடாது. அதற்கு மாறாக, இந்தக் கருத்துக்களும், கொள்கைகளும், கண்ணோட்டங்களும் எதனுடைய பிரதிபலிப்பாக இருக்கின்றனவோ அதை - சமுதாயத்தின் பொருளாயத வாழ்வையும், அதன் நிலையையும் - துருவிப் பார்க்க வேண்டும்.

ஆகவே, சமுதாய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும், கண்ணோட்டங்களும் அரசியல் நிறுவனங்களும் காணக் கிடக்கின்றன என்றால் - அடிமை சமுதாய முறையின் கீழ் சில சமூகக் கருத்துக்களையும் கொள்கைகளையும் கண்ணோட்டங்களையும், அரசியல் நிறுவனங்களையும் காண்கிறோம் என்றால் - நிலப்பிரபுத்துவ முறையின்கீழ் வேறு சிலவற்றைக் காண்கிறோம் என்றால் - முதலாளித்துவ முறையின் கீழ் இன்னும் வேறு சிலவற்றைக் காண்கிறோம் என்றால் அதை எப்படி விளக்குவது? அந்தந்தக் கருத்துக்களின், கொள்கைகளின், கண்ணோட்டங்களின், அரசியல் நிறுவனங்களின் ''தன்மையை' வைத்து, அவற்றின் "குணாம்சங்களை'' வைத்து, அதை விளக்கக் கூடாது; அதற்கு மாறாக, சமுதாயம் வளர்ந்து வந்ததன் வெவ்வேறு கால கட்டங்களில் நிலவிய சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் வெவ்வேறு நிலைமைகளைக் கொண்டு அதை விளக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் நிலை எப்படியிருக்கிறதோ, ஒரு சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள் எப்படியிருக்கிறதோ, அப்படித்தான் அந்த சமுதாயத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், அரசியல் கண்ணோட்டங்களும், அரசியல் நிறுவனங்களும் உள்ளன.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் – பக்கம் 24)

No comments:

Post a Comment