Sunday 2 June 2019

1. முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கு சீர்த்திருத்தக் கொள்கையைப் பின்பற்றாமல் புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதைப் பற்றி ஸ்டாலின்:-


“மெதுவாக ஏற்பட்டுவரும் அளவு மாறுபாடுகள் துரிதமாக, திடீரெனக் குணமாறுதல்களாகப் பரிணமிப்பது வளர்ச்சியின் ஒரு விதி என்றால் - அப்பொழுது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் உருவாக்குகிற புரட்சிகள் என்பவை இயற்கையானவை, தவிர்க்க முடியாதவை என்பது தெளிவு.

ஆகவே, முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும், முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையடைவதும், மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலமாக - சீர்திருத்தங்கள் மூலமாக - சாத்தியமில்லை; அதற்கு மாறாக, முதலாளித்துவ அமைப்பு முறையில் குண ரீதியான மாறுதலை உண்டாக்குவதன் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான், அவை சாத்தியமாகும்.

ஆகவே, கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டு மென்றால், நாம் புரட்சியாளனாக இருந்து தீரவேண்டும்; சீர்திருத்தவாதியாக அல்ல.

மேலும், உள்ளிருக்கும் முரண்பாடுகள் வெளிப்படுவதன் வழியாகத்தான் - இந்த முரண்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு எழும் எதிர்மறையான சக்திகள், அதே முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதன் வழியாகத்தான் - வளர்ச்சி ஏற்படுகிறது என்றால், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் என்பது மிகவும் இயற்கையான, தவிர்க்க முடியாத, ஒரு நிகழ்ச்சிப் போக்கே என்பது தெளிவு.

ஆகவே, முதலாளித்துவ முறையின் முரண்பாடுகளை நாம் மூடி மறைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, அதன் முரண்பாடுகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சிக்கவிழ்த்துக் காட்டவேண்டும். வர்க்கப் போராட்டத்தை நாம் தடுக்கக் கூடாது; அதற்கு பதிலாக அதை அதன் முடிவுக்குக் கொண்டுபோக வேண்டும்.

ஆகவே, கொள்கையில் தவறு ஏற்படாமலிருக்க வேண்டு மென்றால், பாட்டாளி வர்க்கக் கொள்கையைச் சமரசமின்றி நாம் பின்பற்ற வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணக்கமாகப் பிணைக்கும் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையைப் பின்பற்றக்கூடாது. ''முதலாளித்துவம் வளர்ந்து தானாகவே சோசலிசமாக மாறிவிடும்'' என்கிற சமரசவாதிகளின் கொள்கையைப் பின்பற்றக் கூடாது.

சமூக வாழ்வையும் சமூகத்தின் வரலாற்றையும் ஆய்ந்தறியக் கையாளப்படும் மார்க்சிய இயக்கவியல் முறை என்பது இதுதான்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் – பக்கம் 15-16)

No comments:

Post a Comment