Wednesday, 2 October 2024

அகவியம் பற்றி (அகநிலைவாதம் பற்றி) மாவோ

    அகவியம் (அகநிலைவாதம்) சில கட்சி உறுப்பினர்களிடையே தீவிரமான அளவில் இருப்பதோடு அரசியல் சூழலை பகுப்பாய்வு செய்வதற்கும் வேலைக்கான வழிகாட்டுதல்களிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் காரணம் அரசியல் சூழல் பற்றிய அகவயப் பகுப்பாய்வும் பணியில் அகவய வழிகாட்டுதலும் தவிர்க்க இயலாமல் வாய்ப்பியமாகவோ திடீர் புரட்சியியமாகவோ விளைகிறது. அகவய விமர்சனத்தைப் பொருத்தவரை தளர்வான அடிப்படையற்ற பேச்சு அல்லது சந்தேகம் கொள்கிற தன்மை போன்ற நடைமுறைகள் கட்சிக்குள் அடிக்கடி கொள்கையற்ற தகராறுகளை தோற்றுவித்து கட்சியமைப்பை அடியோடு தகர்க்கிறது.

மற்றொரு விசயமானது, உட்கட்சி விமர்சனத்தோடு இணைந்து சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அதாவது சில தோழர்கள் தாங்கள் விமர்சனம் செய்யும் போது பெரிய விசயங்களைப் புறக்கணித்து, சிறிய விசயங்களில் தங்களின் கவனத்தைக் குவிக்கின்றனர். அவர்கள் விமர்சனத்தின் முக்கிய கடமை, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வில்லை.

தனிநபர் குறைபாடுகளைப் பொருத்தவரை அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தவறுகளோடு தொடர்பு கொண்டிருக்காவிடில் அதிக விமர்சனப்பூர்வமாக இருக்கத் தேவையில்லை. சம்மந்தப்பட்ட தோழர்களை திக்குமுக்காடவைக்கவும் தேவை இல்லை. மேலும் அது போன்ற விமர்சனம் ஒருமுறை வளருமானால் கட்சி உறுப்பினர்கள் முழுவதுமாக சிறு தவறுகளில் கவனம் செலுத்துவதும் ஒவ்வொருவரும் அஞ்சியொடுங்கி அதீத எச்சரிக்கையினைக் கொள்வதோடு கட்சியின் அரசியல் கடமை களை மறக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதனைச் சரிசெய்யும் முதன்மை வழிமுறையானது, கட்சி உறுப்பினர்களின் சிந்தனை மற்றும் கட்சி வாழ்க்கையில் அரசியல் மற்றும் அறிவியல் பூர்வ மனப்பாங்கு ஊடுருவி பரவுவதற்கு அவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். இதனை அடைய நாம் கட்டாயம்:

 

1. கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் சூழலைப் பகுப்பாய்வு செய்வதிலும், வர்க்க சக்திகளை மதிப்பீடு செய்வதிலும் அகவியப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக மார்க்சிய - லெனினிய வழிமுறையைப் பொருத்தவும் கற்பிக்கவும் வேண்டும்.

 

2. கட்சி உறுப்பினர்களின் கவனத்தை போராட்ட செயலுத்திகளையும், வேலை முறைகளையும் நிர்ணயித்து மற்றும் உண்மையான நிலைமைகளை ஆய்வு செய்யாமல் கற்பனாவியம் மற்றும் திடீர் புரட்சியிய குழியில் வீழ்வர் என அத் தோழர்களுக்கு புரிந்து கொள்ள உதவும் வகையில், சமூகப் பொருளாதார ஆய்விற்கும், படிப்பிற்கும் கட்சி உறுப்பினர்களின் கவனத்தை திசைப்படுத்த வேண்டும்.

 

3. உட்கட்சி விமர்சனத்தில் அகவியம், விமர்சனத்தைக் கொச்சைப்படுத்துதல் மற்றும் தான்தோன்றித் தனத்துக்கும் (arbitrariness) எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். அறிக்கைகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் விமர்சனம் அரசியலை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும்.

(கட்சியிலுள்ள தவறான கருத்துகளைச் சரிசெய்தல் பற்றி

டிசம்பர்- 1929

தொகுதி – 1: பக்கம் 155-156)

 

Tuesday, 1 October 2024

நாடாளுமன்ற பங்கேற்பைப் பற்றி மாவோ

 (முதலாளித்துவ ஜனநாயத்தில் உள்ள நாடாளுமன்றம், தொழிற்சங்கங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது பற்றி மாவோ)

மாவோ:-

"ஆயுத பலத்தினால் அதிகாரத்தை கைப்பற்றுவதும் போரின் வாயிலாக சிக்கலை தீர்ப்பதும் மையக் கடமையும் புரட்சியின் மிக உயர்ந்த வடிவமுமே ஆகும். புரட்சி குறித்த இந்த மார்க்சிய - லெனினியக் கொள்கைநெறி (Principle) சீனாவிற்கும் பிற அனைத்து நாடுகளுக்குமாக உலகிற்கே பொருந்துவதாக விளங்குகிறது.

ஆனால், கொள்கைநெறி ஒன்றாக இருக்கையில், பாட்டாளி வர்க்க கட்சியால் அதனை செயற்படுத்துவது என்பது மாறுபடும் நிலைமைகளுக்கு ஏற்ப, மாறுபடும் வழிகளில் வெளிப்படுத்துகிறது. முதலாளிய நாடுகள், உள்நாட்டில், அவை பாஸிஸ்டாக இல்லாத பொழுதோ, போரில் இல்லாத பொழுதோ முதலாளிய ஜனநாயகத்தை (நிலவுடைமை அல்ல) செயற்படுத்துகின்றன; அவை தமது வெளி உறவுகளில், அவை ஒடுக்கப்படுவதில்லை. ஆனால், பிற தேசங்களை ஒடுக்குகின்றன.

இச்சிறப்புத் தன்மைகளினால் (Characteris- tics) முதலாளிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சியின் கடமையானது என்னவெனில் நீண்ட காலப்பகுதியிலான சட்டரீதியான போராட்டத்தின் ஊடே தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டுவதும் பலத்தை கட்டியமைப்பதும் அதன் வாயிலாக முதலாளியத்தை இறுதியாக தூக்கியெறிவதற்கு தயாராவதும் ஆகும்.

இந்நாடுகளில், சிக்கல் என்னவெனில், நாடாளுமன்றத்தை மேடையாக பயன் படுத்துதல், பொருளாதார அரசியல் வேலைநிறுத்தங்கள், தொழிற் சங்கங்களை அமைப்பாக்கி தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டுதல் என்ற நீண்ட சட்டரீதியான போராட்டமே ஆகும். அங்கே அமைப்பு வடிவம் என்னவெனில் சட்டரீதியானதுடன் போராட்ட வடிவமும் குருதியற்றதும் (இராணுவம் சாராத) ஆகும்."

(போர் மற்றும் மூலஉத்தி குறித்த சிக்கல்கள்

நவம்பர் 6, 1938, மாவோ- தொகுதி 2)

மார்க்சிய-லெனினியம் பற்றி மாவோ

 வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை புரிந்து உள்வாங்கி அதன் வழியில் அணுகுமுறை செலுத்துவதற்கான பயிற்சியை பெறாமல், எவரும் கம்யூனிஸ்ட் ஆக செயல்பட முடியாது.

மாவோ:-

"மார்க்சிய-லெனினியம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அது சீனாவில் அத்தகைய ஒரு பெரிய பாத்திரத்தை வகித்ததற்கான காரணம், சீனாவின் சமூக நிலைமைகள் அதைக்கோரின; அது சீன மக்கள் புரட்சியின் உண்மையான நடைமுறையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது; சீன மக்கள் அதை உள்வாங்கிக் கொண்டனர். எந்த ஒரு சித்தாந்தமும் - மிகச் சிறந்த சித்தாந்தமும், மார்க்சிய-லெனினியம் கூட; அது புறநிலை எதார்த்தங்களுடன் இணைக்கப்படாதவரை, நிலவும் தேவைகளை ஈடுகட்டாதவரை, மக்கள் பெருந்திரளால் உள்வாங்கிக் கொள்ளப்படாதவரை, செயல் திறமற்றதாகத்தான் இருக்கும். நாம் வரலாற்றுப் பொருள்முதல்வாதிகள், வரலாற்றுக் கருத்தியல்வாதத்திற்கு எதிரானவர்கள்."

(வரலாற்றில் கருத்துமுதல்வாத கருத்தாக்கத்தின் தோல்லி

- 16-09-1949, தமிழ் தொகுதி- 4)