Thursday 26 September 2019

மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகள் – எங்கெல்ஸ்

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம் மற்றும் உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.”
(டூரிங்குக்கு மறுப்பு)

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்,  உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று, இனி அடுத்தபடிச் செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்”
(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)


“அங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது, ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தின் சிறப்பு விதியையும் கண்டுபிடித்தார். உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால்கூட அந்த மனித அதிர்ஷ்ட்டமுடையவரே.”
(மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை

No comments:

Post a Comment