Tuesday 12 June 2018

மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறதாக சொல்லி மதத்தை ஆதரிப்பவரின் நோக்கம் புரட்சிகர வைராக்கியத்தை ஒழிப்பதே- லெனின்

“காவுத்ஸ்கி இணையற்ற முறையில் மார்க்சியத்தைச் சீரழித்து இழிவுபடுத்தியுள்ளார், சரியான சமயச்சபை பாதிரியாராக மாறியுள்ளார், முதலாளிகளை சமாதான வழிப்பட்ட ஜனநாயகத்தைக் கைக்கொள்ளும்படிச் செய்ய முயலுகிறார் அவர் இதை இயக்கவியல் என்பதாக அழைக்கிறார். முதலில் தடையில்லா வாணிபம் இருந்து பிறகு ஏக போகங்களும் ஏகாதிபத்தியமும் வந்தன என்றால், அதீத- ஏகாதிபத்தியமும் அதன் பிறகு மீண்டும் தடையில்லா வாணிபமும் ஏன் வரக்கூடாது

இந்த ''அதீத - ஏகாதிபத்தியம்'' ''சாதிக்கப்படக்” கூடியது தானா என்று சொல்வதற்கு வேண்டிய துணிவுகூட அவரிடம் இல்லை என்றாலும், சமயச் சபைப் பாதிரியாரான அவர் இந்த அதீத-ஏகாதிபத்தியத்தால் கிடைக்கப்போகும் பாக்கியங்களைச் சித்திரித்துக்காட்டி, ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றார்! மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறது என்று சொல்லி மதத்தை ஆதரித்தவர்களுக்குப் பதிலளிக்கையில் ஃபாயர்பாக், இந்த மன ஆறுதலின் பிற்போக்குவாத உட்பொருளைச் சுட்டிக்காட்டியது முற்றிலும் சரியானதே! அடிமை நிலையை எதிர்த்துக் கிளம்பும்படி அடிமையை உசுப்பி விடுவதற்குப்பதில், அவனுக்கு மன ஆறுதல் அளிப்பவர் எவரும் அடிமை உடைமையாளருக்கு உதவுகிறவரே ஆவார் என்றார் அவர்.

எல்லா ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் அவற்றின் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இரு வகைச் சமூகப் பணிகள் தேவைப்படுகின்றன. ஒன்று தூக்கிலிடுவோனின் பணி, மற்றொன்று பாதிரியாரின் பணி. ஒடுக்கப்படுவோரின் கண்டனத்தையும் ஆத்திரத்தையும் அடக்குவதற்காகத் தூக்கிலிடுவோன் தேவைப்படுகிறான். பாதிரியார் தேவைப்படுவது, ஒடுக்கப்படுவோருக்கு ஆறுதல் அளிப்பதற்காக, வர்க்க ஆட்சி பாதுகாக்கப்படும் அதே நேரத்தில் ஒடுக்கப்படுவோரின் துன்பதுயரங்களும் இழப்புகளும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்குச் சித்திரித்துக் காட்டி (இந்த வாய்ப்புகள்கைகூடுமென” உத்தரவாதம் அளிக்காமலே இதைச் செய்வது மிகவும் சுலபம் தான்...), இவ்வழியில் அவர்களை வர்க்க ஆட்சிக்கு இணங்கிவிடும்படிச் செய்து, புரட்சிகரச் செயல்களிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டு, அவர்களது புரட்சிகர மனப்பாங்கிற்குக் குழிபறித்து, அவர்களது புரட்சிகர வைராக்கியத்தை ஒழித்துக் கட்டுவதற்காக, மார்க்சியத்தைக் காவுத்ஸ்கி மிகமிக அருவருப்பான, அசட்டுத்தனமான எதிர்ப்புரட்சித் கோட்பாடாக, படுமோசிமான சமயச் சித்தாந்த வகைப்பட்டதாக மாற்றுகின்றார்.
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு -பக்கம்-44-45)

No comments:

Post a Comment