Wednesday 8 February 2017

வர்க்கங்கள் ஒழிக்கப்படுதல் பற்றி லெனின்

(இங்கு லெனின் வர்க்கம் ஒழிக்கப்படுதலைப் பற்றிய கற்பனாவாத குட்டிமுதலாளிதுவச் சிந்தனைக்கு மாறாக, உற்பத்தி சக்திகளின் வளாச்சியில் பிரம்மாண்டமான முன்னேற்றத்தில் கண்டார். இதில் தான் மார்க்சியத்தின் விஞ்ஞானத் தன்மை அடங்கியிருக்கிறது.)

வர்க்கங்கள் ஒழிக்கப்படுதல்என்பதன் பொருள் என்ன? இதுவே சோஷலிசத்தின் இறுதிக் குறிக்கோள் என்பதை, தம்மைச் சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்வோர் எல்லோருமே அங்கீகரிக்கிறார்கள், ஆனால் அதன் உட்பொருள் குறித்துப் பலரும் சிந்திப்பதில்லை. வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப் பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை சுவாதீன மாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் மாபெரும் மக்கள் பகுதிகளாகும். வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஓர் அமைப்பில் தாம் வகிக்கும் வெவ்வேறு இடங்களின் காரணமாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற்றிக் கொள்ள முடியும்படியான மக்கள் பகுதிகளாகும்.

வர்க்கங்களை அறவே ஒழிப்பதற்குச் சுரண்டலாளர்களான நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் வீழ்த்தினால் மட்டும் போதாது, உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடைமை அனைத்தையும் ஒழிப்பது அவசியம், நகருக்கும் கிராமத்துக்கும் உள்ள  பாகுபாட்டையும் ஒழிப்பது அவசியம் என்பது தெளிவு. இதற்கு நீண்ட நெடுங் காலம் தேவைப்படும். இதைச் சாதிப்பதற்கு உற்பத்தி சக்திகளின் வளாச்சியில் பிரம்மாண்டமான முன்னேற்றம் கண்டாக வேண்டும், சிறு வீதப் பொருளுற்பத்தியின் எண்ணற்ற மீதமிச்சங்களின் எதிர்ப்பைச் சமாளிப்பது அவசியம் (அடிக்கடி சாத்துவிகத் தன்மையதான இது மிகவும் பிடித்தமானது, இதைச் சமாளிப்பது மிகவும் கடினமானது), இந்த மீதமிச்சங்களுடன் சம்பந்தப்பட்ட பழக்கத்தின், பழைமைப் பிடிப்பின் பிரம்மாண்ட சக்தியைச் சமாளிப்பது அவசியம்.

இந்தப் பணியைச் செய்திடும் ஆற்றல் “உழைப்பாளி மக்கள்” அனைவருக்கும் சம அளவில் உண்டெனக் கொள்ளுதல் வெற்று உரையே ஆகும், அல்லது மார்க்சியத்துக்கு முற்காலத்திய, மிகப் பழங்காலத்திய சோஷலிஸ்டின் பிரமையே ஆகும். ஏனென்றால் இந்த ஆற்றல் தானகவே வந்துவிடும் ஒன்றல்ல, வரலாற்று வழியில் வளர்ந்திடுவதாகும், பெரு வீத முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் பொருளாயத நிலைமைகளில் இருந்து மட்டுமே வளர்ந்திடுவதாகும்.

முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்குச் செல்லும் பாதையின் தொடக்கத்தில் இந்த ஆற்றலைப் பெற்றிருப்பது பாட்டாளி வர்க்கம் மட்டும்தான். அது தன்னை எதிர்நோக்கும் பிரம்மாண்டப் பணியை நிறைவேற்றும் ஆற்றலுடையதாய் இருக்கிறது. ஏனெனில் முதலாவதாக, நாகரிக சமூகங்களில் அதுவே மிகுந்த பலம் படைத்த மிக முன்னேறிய வர்க்கம், இரண்டாவதாக, வளர்ச்சி பெற்ற மிகப் பெருவாரியான நாடுகளில் அது மக்கள் தொகையில் பெரும்பான்மையானது,  மூன்றாவதாக, ருஷ்யாவைப் போன்ற பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் அரைப் பாட்டாளி வர்க்கத்தினர், அதாவது ஆண்டில் ஒருபகுதி முறையாய்ப் பாட்டாளி வர்க்க வழியில் வாழ்ந்து தமது ஜீவனோபாயத்தில் ஒரு பகுதியை முறையாய் முதலாளித்துவத் தொழில் நிலையங்களில் கூலி உழைப்பாளர்களாய் வேலை செய்து சம்பாதிக்கும் மக்கள்.

சுதந்திரம், சமத்துவம், பொதுப்படையான ஜனநாயகம், உழைப்பு ஜனநாயக சமத்துவம், இன்ன பலவற்றையும் பற்றிய பொதுவான பேச்சின் அடிப்படையில் (காவுத்ஸ்கியும் மார்த்தவும் பெர்ன் மஞ்சள் அகிலத்தின் ஏனைய வீரர்களும் செய்வது போல), முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயலுவோர், தமது குட்டிபூர்ஷ்வா அற்பத் தனத்தைத்தான் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், முதலாளித்துவ வர்க்கத்தின் வாலைப் பற்றிக் கொண்டு சித்தாந்த வழியில் அடிமைப்பட்டோராய் அதைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்குரிய சரியான தீர்வினை அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொண்ட குறிப்பிட்ட வர்க்கத்துக்கும், அதாவது பாட்டாளி வர்க்கத்துககும், பாட்டாளி வர்க்கத்தவர் அல்லாதோருக்கும் மற்றும் அரைப் பாட்டாளி வர்க்கத்தவருமான உழைப்பாளி மக்கள் திரள் அனைத்துக்கும் இடையிலுள்ள குறிப்பிட்ட உறவுகளை ஸதூலமாய் ஆராய்வதன் அடிப்படையிலேதான் காண முடியும். இந்த உறவுகள் கற்பனாவாத இசைவு நிலவும் “கருத்தாக்க” (“ideal”) நிலைமைகளில் உருவாவதில்லை, பல்வேறான மிகப் பல வடிவங்களை ஏற்கும் வெறித்தனமான முதலாளித்துவ வர்க்கத்து எதிர்ப்பின் மெய்யான நிலைமைகளில் உருவாகின்றன.
(லெனின் - மாபெரும் தொடக்கம்)

No comments:

Post a Comment