Friday 19 August 2016

விஞ்ஞான கம்யூனிசத்தின் விஞ்ஞானத் தன்மையைப் பற்றி- லெனின்

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி எங்கெல்ஸ் மறைந்தார். இதனை ஒட்டி லெனின் பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.”

மேலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.

சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பது எல்லாம்- சமூகச் சக்திகளில் எது நவீன சமூதாயத்தில், தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.”


No comments:

Post a Comment